பௌத்தமும் தமிழ் மணிமேகலையும்

அண்மையில் ஒரு நண்பரிடம் பேசும்போது இந்து - பௌத்த மதங்களின் தொடர்பு பற்றியும் பௌத்த மதத்தைத் தமிழ் மொழி எப்படி உள்வாங்கியுள்ளது என்றும் வினவியிருந்தார். எனக்கு உடனடியாக மணிமேகலைதான் ஞாபகம் வந்தது. அவரிடம் அந்த நூல் பற்றியும் உரையாசிரியர்கள் பற்றியும் இதனை வரலாற்று பிரக்ஞையுடன் ஆய்வு செய்த ஒருசில கட்டுரையாளர்களையும் சிபாரிசு செய்தேன். பின்னர் இது தொடர்பாக சிங்கள பௌத்த கல்வியியலாளர் ஒருவரிடம் தான் பேசியதாகவும் அவர் மணிமேகலை பற்றித் தன்னிடம் உவகையுடன் கூறியதாகவும் சொன்னார். எனக்குச் சிறிது வியப்பாக இருந்தது. இனங்களுக்கு இடையிலான மொழி பற்றிய மோதல்கள் தீவிரமாக இருந்தபோதும் மதம் மீது பிரக்ஞை கொண்ட பௌத்தர்கள் பௌத்தம் பற்றி எழுதப்பட்ட தமிழ்மொழி நூல்களையும் படிப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். இது போன்ற ஞான மரபுகளை மீட்டுருவாக்குவதன் மூலம் வரலாற்றுத் திரிபுகளையும், இன மோதல்களையும் ஓரளவுக்கு மாற்றுநிலைப்படுத்தலாம் என்று எண்ணிக்கொண்டேன்.

தமிழிலுள்ள மணிமேகலை காப்பியம் தமிழுக்கு பௌத்த மரபு அளித்த அருங்கொடை என்றே கூறவேண்டும். இந்து ஞான மரபுடன் விவாதம் செய்து வேதத்தை மறுத்து உருவான பௌத்தம் பொருள்முதல்வாதச் சிந்தனை மரபில் உண்டான தலையாய அவைதிக மதமாகக் கருதப்படுகிறது. இதன் மூலங்கள் இந்து ஞான மரபிலுள்ள ஆறுதரிசனங்களை ஒட்டி எழுந்த ஒன்றாகும். சாங்கியத் தரிசனத்தின் பகுதிகளையும் முழுமை பெறாத முதல் தரிசனமான சார்வாக தரிசனத்தையும் பின்வந்த வேதாந்தங்களுடனும் கடுமையாக விவாதம் செய்தே பௌத்தம் தன்னை வளர்த்துக் கொண்டுள்ளது.  அந்த வகையில் வைதிக-அவைதிக மதங்கள் விவாதம் செய்த காலத்தில் உண்டான மணிமேகலையை ஒட்டுமொத்த பௌத்த மரபுக்கான பெரும் பேறு என்றும் கூறலாம். சங்ககாலத்தை அடுத்து வந்த சங்கமருவிய காலத்து இலக்கியம் என்றே இது வரையறுக்கப்படுகிறது.  மணிமேகலையிலுள்ள பௌத்த விளக்கங்கள் போல எந்தவொரு பௌத்த நூலிலும் பௌத்தத்துக்கான  அதுபோன்ற ஒரு விளக்கத்தை இன்று வரையும் காணமுடியாது. மணிமேகலை போன்ற பௌத்த காப்பியத்தை சிங்கள பௌத்தத்தில்கூட இன்று வரையிலும் காணமுடியாது.
ஆசியாவிலுள்ள புத்தர்
மணிமேகலைக் காப்பியத்துக்கு முன்னர் உண்டான சிலப்பதிகாரத்திலுள்ள கண்ணகி பற்றிய கதை சிலப்பதிகாரம் எழுத முன்பே வழங்கிவந்த ஒன்றாகவும் அறியப்படுகிறது. கேரளப் பழங்குடியினரின் நம்பிக்கையும் கண்ணகி கதைக்குச் சமனான ஒன்றாகும். இந்த இடத்தில் நாம் அவதானிக்க வேண்டிய விடயம் என்னவெனில் தாந்திரீக மரபுதான் ஆரம்பத்தில் கேரள நிலத்தில் இருந்துள்ளது. அந்த பழங்குடி தாந்திரீக மரபு அதர்வ வேதத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது.

இங்கு மணிமேகலையில் மிக ஆழமான கருத்துக்கொண்ட ஒரு பாடலொன்றை இந்த இடத்தில் ஞாபகமூட்ட வேண்டும். இது பௌத்த மரபின் மிக ஆழம் பொதிந்த பாடலாகும். இதனைப் பற்றி எவ்வளவு விரிவாக என் மனதில் பிம்பமாக்கி வைத்துள்ளேன் என்று தெரியாது. ஆனால் இங்குள்ள விகாரைகளையும் பௌத்த சின்னங்களையும் காணும்போது அடிக்கடி இதன் ஆழக்கருத்தை நினைத்துப்பார்ப்பதுண்டு.

"பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
பற்றின் வருவது முன்னது பின்னது அற்றோர் உறுவதறிக என்றருளி
ஐவகைச் சீலத்து அமைதியும் காட்டி
உய்வகை இவைகொள் என்று உரவோன் அருளினன்"


'உலகில் பிறந்தவர் அடைவது பெரிய துன்பம். பிறவாதவர் அடைவது மிக்க இன்பம். முதலில் கூறப்பட்ட பிறப்புப் பற்றினால் உண்டாவது. பின்னருரைத்த பிறவாமை பற்றினை அற்றோர் அடைதற்குரியது. இவற்றை அறிவாயாகவென்று நால்வகை வாய்மையையும் அருளிச் செய்து, காமம், கொலைகள், பொய், களவு என்னும் ஐந்தினையும் முற்றத் துறத்தலாகிய ஐவகைச் சீலங்களையும் உணர்த்தி, அடையும் வழியாக இவற்றைக் கொள்க என்று ஆழமான அறிவினையுடைய அவ்வடிகள் அருளினார்'. என்று அதன் பொருளை வரையறுக்கலாம்.

இது மணிமேகலை பௌத்தத்தை ஏற்ற போது ஊரலர் உரைத்த காதையில் கூறிய விடயம். இதில் பௌத்தத்தினுடைய எளிய வழிகள் தெளிவாகவும் ஆழமாகவும் காட்டப்பட்டுள்ளது.
1. பிறந்தோர் உறுவது பெருகிய துன்பம்
2. பிறவார் உறுவது பெரும் பேரின்பம்
3. பற்றின் வருவது முன்னது
4. பின்னது பற்றினில் வருவது

இந்த நான்கும் பௌத்தம் பற்றி ஆழமாகப் பிழிந்து தருகிறது. இங்குள்ள பற்று என்னும் வரிக்குப் பல அர்த்தங்கள் உண்டு. கஸ்டன் என்றும் பாசம் என்றும் பிடிப்பு, பற்றி இருத்தல் என்றும் பலவாறு கூறலாம். மணிமேகலைக் கதையைச் சிசிலை கனகரத்னம் தேரர் சிங்களத்தில் மொழி பெயர்த்துள்ளதாக சிவத்தம்பி அவர்கள் ஒரு பதிவில் கூறியுமுள்ளார். அத்துடன் அந்தத் தமிழ் பௌத்தர் இந்த வரிகளை அடிக்கடி சிலாகித்தும் பேசியுள்ளார். வெறுமனே தமிழ் மரபில் என்று அல்லாமல் சிங்கள பௌத்தர்களிடமும் கொண்டு சேர்த்துள்ளார். இதுபோன்ற மரபுகளில் இருந்துதான் பல அண்மித்தல்களை நாம் இனங்களிடையே என்றாலும் சரி மதங்களிடையே என்றாலும் சரி உடனடியாகவும் நிரந்தரமாகவும் அடையமுடியும்.
அத்துடன் பௌத்தம் பற்றிய மணிமேகலையில் கூறப்பட்ட கருத்துக்கள் எந்த வகையது என்றும் கூறுவது இன்றும் கடினமான ஒன்றாகும். அதனை தேராவாதமா? மஹாயானமா? அல்லது கீனாயானமா என்றும் கூறமுடியாது. அது தொடர்பான ஆராய்ச்சிகள் இன்று வரையும் சரியாக நடைபெறவில்லை. அந்தச் சுதந்திரம்தான் மணிமேகலை காப்பியத்தின் ஆகப்பெரிய பலம் என்றும் கூறலாம்.

மதங்கள் பற்றிய எனது பார்வையில் பௌத்தம் மீது இடையறாத நம்பிக்கையை பல ஆண்டுகளாக வைத்துள்ளேன்.  அதனைப் பற்றி மீளவும் கற்பதில் நான் என்றும் பின் நின்றதில்லை. அதற்குக் காரணம் பௌத்தம் என்பது இந்து ஞான மரபின் வழிவந்த ஒரு மதம். அது பிற்காலங்களில் தன்னைச் சீர்திருத்தி சமூகத்துக்கான விடுதலையாக வளர்த்துக் கொண்டது. அதே நேரம் இந்து மதம் தன் பன்மைத்துவத்தில் நின்றுகொண்டது. ஆனால் இன்றுவரையும் சீராக்கம் செய்துகொண்டே உள்ளது. உதாரணமாக சென்ற நூற்றாண்டுகளில் தோன்றிய விவேகானந்தரை இங்கே உதாரணமாக்க வேண்டும். அந்தப் பன்மைத்துவம்தான் பௌத்தம் போன்ற மதங்களை நமக்கு அளிக்கக் காரணமாகவும் இருந்தது. இங்கே இந்து என்பதை என்பதை இந்து ஞான மரபு என்றும் இந்திய ஞான மரபு என்றும் அடையாளப்படுத்திப் பார்க்க வேண்டும். 

Comments

  1. நன்றி இந்தக் குறிப்புக்கு
    இதில் குறிப்பிட்டதும் இதை எழுதுவதற்கு உந்துதலாக இருந்த நூல்களின் உசாத்துணைகளையும் இறுதியில் சேர்த்திருக்கலாமே.
    மணிமேகலை தமிழ் பௌத்தம் தொடர்பாக ஒரு வார கற்கை ஒன்றுக்கு செல்லவிருப்பதால் தேடி வாசித்தபோது உங்களின் பதிவு கிடைத்துது.
    நன்றி

    ReplyDelete

Post a Comment

Popular Posts