பூமியை வாசிக்கும் சிறுமி 01


"சொல்லிலிருந்து வெளியேறும் மௌனத்தின் குரல் கேட்கலாகுமா? 
எனில், கவிதையின் ஜீவிதம் புரியும் உனக்கு"
-சுகுமாரன்.

வாழ்க்கை அனுபவத்தில் இரண்டுமற்ற மற்றும் இரண்டுமாகிய தருணம் பல தருணங்களில் நமக்கு ஏற்படும். அதனை நாம் கடந்து செல்வதற்குத்தான் யோசிப்பதுண்டு. அதன் தோற்றுவாயைப் பற்றிக் கிரகிப்பவர்கள் குறைவு. அல்லது அதனை அசிரத்தையாகவே எண்ணி நகர்ந்து விடுவோம். இவற்றை எழுத்தின் வழி வெளிப்படுத்தும் கலைஞர்கள் பல வடிவங்களில் தமது இரண்டுமற்ற இரண்டுமாகிய விடயங்களை வெளிப்படுத்தியதுண்டு. இதனைத் தத்துவத்தில் விசிட்டாத்துவைதம் என்று கூறுவர். அதாவது இரண்டுமற்ற தன்மை. அப்படியானால் இரண்டுமுள்ள தன்மைக்கு எதனைக் காட்டுவது என்ற சந்தேகம் எழக்கூடும். அதற்கு சைவ சித்தாந்தத்தின் தத்துவ முடி வரை சென்று மீள வேண்டும் என்பதனால், இவற்றை இந்த இடத்தில் தவிர்த்துவிட்டு சுகுமாரனின் நவீன கவிதை ஒன்றை வாசிக்கும் போது எனக்கு ஞாபகத்தில் உருவான சிந்தனையை இங்கே பகிரவேண்டியுள்ளது. அதற்குள் மேற்குறிப்பிட்ட இரண்டு விதமான கூறுகளும் உள்ளது.

"அள்ளி
கைப்பள்ளத்தில் தேக்கிய நீர்
நதிக்கு அந்நியமாச்சு
இது நிச்சலனம்
ஆகாயம் அலைபுரளும் அதில்
கை நீரைக் கவிழ்த்தேன்
போகும் நதியில் எது என் நீர்?"

ஒரு தத்துவக் கேள்வி போல என் நீர் எது என்று கேட்கப்படுகிறது. இது நவீன கவிதையில் ஆரம்ப காலங்களில் உருவாகியிருந்த பண்பு என்றே கூறவேண்டும். அது எழுதப்பட்ட கவிஞரின் படைப்பூக்கம் சார்ந்த ஒன்றாகவே நாம் கருத வேண்டும். அத்துடன் இந்தக் கவிதை எண்பதுகளின் முதலாம் ஆண்டில் எழுதப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் தமிழில் உருவாகியிருந்த கவிதை பற்றிய மாற்றங்களையும் கண்டடைய வேண்டும். முன்னதாக ஞானக்கூத்தன் எழுதிய கவிதையொன்றை இங்கே ஞாபகமூட்ட வேண்டும். "திண்ணை இருட்டில் எவரோ கேட்டார் தலையை எங்கே வைப்பதாம் என்று, எவனோ ஒருவன் சொன்னான் களவு போகாமல் கையருகே வை" இதுதான் அக்கால கட்டத்தின் கவிதைகளிலிருந்த மிக உத்வேகமாக உருவான பண்பு எனலாம். அதுபோல ஆத்மாநாம் எழுதிய ஒருசில கவிதைகளையும் இங்கே வைத்துப் பார்க்கலாம். ஆனால் ஆத்மாநாமின் மரணம் மீதான பரிவுதான் அவரை மிகையான படைப்பாளன் ஆக்கிவிட்டுள்ளது என்றே எண்ணலாம். ஆனால் தமிழில் தவிர்க்கமுடியாத நவீன கவிஞராக ஆத்மாநாமை நாம் வகைப்படுத்த வேண்டும். இவர்கள் அக்காலத்தின் சமூகம் பற்றி அப்படியே பிரதிபலித்தவர்களாகவும், சில சமயங்களில் ரொமாண்டிசைஸ் செய்து கவிதைகளை வழிநடத்தியவர்களாகவுமே எனது வாசிப்பின் மூலம் அறிய முடிகிறது. ஆனால் சுகுமாரன் கவிதைகளில் எழுபதுகளின் தொடக்கத்தில் இருந்து இயங்கி வருகிறார். எண்பதுகளில் அவரது குரல் சமூக மற்றும் தத்துவ நோக்கு உள்ளதாக மாறிவிட்டதை எம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. கவிதைக்குள் தத்துவம் ஈடுபடத் தொடங்கியமையால் தான் கவிதையின் முக்கியத்துவம் அதிகரிக்கத் தொடங்கியது என்று கூறலாம். அதிலும் தத்துவத்தைக் கூறும்போது அழகியல் பாதிப்படையாத வகையில் வெளிப்படுத்தும் திறன் சுகுமாரனுடையது. அதனை அவருடைய பல கவிதைகளில் இன்று வரையும் நாம் கண்டுகொள்ளலாம். இந்த இடையறாத இயக்கம் சுகுமாரனின் தனித்துவமான கவிதைமொழி என்றே கூறவேண்டும்.  (என்னுடைய இந்தப் பார்வையானது அவரவர் வாசிப்பு எல்லைகளைப் பொறுத்து மாறுபடலாம்.) சுகுமாரன் 1981 இல் எழுதிய கையில் அள்ளிய நீர் என்ற கவிதை அதனை நமக்குத் தெளிவுபடுத்துகிறது.  இதில் தத்துவம் மற்றும் அழகியல் இந்த இரண்டுமே மேலோங்கியுள்ளது. பொதுவாக தத்துவம் உள்ள இடத்தில் அழகியலும் அழகியல் உள்ள இடத்தில் தத்துவமும் பரஸ்பரம் தம்மை இட்டு நிரப்பிக் கொள்வதில்லை. ஆனால் அது இசை நுணுக்கங்கள் போல அரிதாகவே கவிதையில் நிரப்பப்படுவதுண்டு.
கைப்பள்ளத்தில் தேக்கிய நீரின் அழகுணர்வு தத்துவ நோக்கில் அந்நியமாகின்றது. அதுவே தத்துவத்தின் உச்சமாகிறது என்பதை நிச்சலனம் குறித்துவிடுகிறது. இது இரண்டுமற்ற நிலை. கை நீரைக் கவிழ்த்தலிலுள்ள அழகியலின்  சாரம் 'நதியில் எது  என் நீர்' என்ற கேள்வியுடன் தத்துவமாகிப் போகிறது. அதுவே தத்துவத்தின் உச்சமாகவும் நிற்கிறது. பொதுவாகக் கேள்விகள் எப்போதும் தத்துவத்தை வரவழைப்பவையேயாகும்.  அந்தக் கேள்வி இக்கவிதையின் இரண்டுமுள்ள நிலை. அதாவது கைப்பள்ளத்து நீரும், நதி நீரும் சேர்கிறது. ஆனால் தத்துவ நோக்கில்தான் எது என் நீர் என்ற கேள்வி எழுகிறது. இதுதான் சுகுமாரனின் கவிதைக்குள் இருக்கும் சூட்சுமம்.

சிறு வயதில் பறவையாக ஆகவேண்டும் என்று நிரை நிரையாக வானத்தில் வட்டமிடும் பறவைகளைப் பார்த்து அநேகமானவர்கள் எண்ணுவதுண்டு. அதனைக் காதலின் தனிமைக்குள் வைத்துப் பார்க்கும் எண்ணம் பதின்ம வயதுகளில் உண்டாகும். அந்த எண்ணம் பதின்மம் தாண்டியதும் மிக அழகான கவிதையாக அமையப்பெறும். அதைத்தான் 'தனிமை இரக்கம்' என்று சுகுமாரன் எழுதியுள்ளார். 

"வந்து போகின்றன பருவங்கள் தடம் புரண்டு
வசந்தம் நாட்கணக்கில்
எனினும்
வருடம் முழுதும் இலைகள் உதிர்கின்றன
வெற்றுக் கிளைகளாய் நிமிர்ந்து
கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை.

திசைகளில் விழித்து நிராதரவாய் வெறிக்கின்றன
உனது நீர்த்திரைக் கண்கள்
அலைகளின் இடைவேளைகளில் உயிர்த்துத் ததும்புகிறது
உனது சோக முகம்
காலடி மணலின் துகள்கள் பிளந்து அலைகிறது
உனது பெயரின் தொனி.

வேட்டை நாய் விரட்டல்,
இளைப்பாறுதலின் சங்கீதம் என
அகல்கிறது நாட்களின் நடை.

வெளியில் போகிற எப்போதும்
காயம்படாமல் என் கிளி திரும்பியதில்லை
இதோ உன்னிடமிருந்தும்
ஆனால் அலகில் நீ பரிசளித்த நெற்கதிர்."

ஒரு கிளியின் அன்றாட இயக்கத்தில் நகரும் கவிதை. அதே நேரம் அதற்குள் இருக்கும் தனிமை மனோநிலை ஒரு மனிதனுடைய ஆழ்மனதை ஒட்டியது. தரை மற்றும் கடல் வெளியில் நிகழும் சம்பாஷணை. அதற்குக் குறியீடாகத் தான் வசந்தமும் மரமும் அலைகளும் மணலும் முறையே அமைந்துள்ளது. இன்றல்ல, பல காலமாக நம் இளைஞர்கள் சொல்வார்கள் பறவையாகப் பறக்க வேண்டும். பறவையைப் போல வாழவேண்டும். அதற்குத்தான் துயரங்களே இல்லை. எந்தத் தடையுமற்ற சுதந்திரத்தன்மை கொண்டது. அடுத்த பிறவி வரைக்கும் அந்தக் கற்பனையைக் கொண்டு சென்றுவிடுவார்கள். இப்படிப் பல பிம்பங்களை அதன் பறத்தலைக்கொண்டு நாம் அதன்மீது வடிவமைத்துள்ளோம். ஆனால் சுகுமாரன் அந்தப் பறவை மீது வடிவமைக்கும் பிம்பம் வித்தியாசமானது. பாரதியாரின் ஞானரம் மற்றும் வசனகவிதைகளில் இருந்து உண்டான கற்பனை போன்றது. அதில் மகிழ்ச்சியும் இதில் தனிமை இரக்கமும் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
'கபாலத்தைப் பெயர்க்கிறது தனிமை' என்பது ஒரு மனிதனின் ஆழ்மனக் குரல். அதற்கான கருவியாக கிளி பயன்படுத்தப்பட்டுள்ளது. கிளைகளற்ற மரத்தில் ஏற்றப்பட்டுள்ள ஒரு கிளி மனிதனின் குரலாக அதனைக் கூறுகிறது. அலைகளில் உண்டாகும் சோக முகமும் மணலின் துகளிலுள்ள பெயரின் படிவமும் பற்றிய கண்டறிதல் மனிதன் அனுப்பிய கிளியின் தேடலால் உண்டானதே. அந்தத் தேடலைத் தூது என்றும் கூறலாம். ஏனென்றால் கிளியானது காயம்பட்டுத் திரும்பும்போது அவள்/அவன் பரிசளித்த நெற்கதிருடன்தான் திரும்புகிறது. கிட்டத்தட்ட இந்தக் கவிதை காதலன் மற்றும் காதலியரிடையே உள்ள தூரத்தையே தனிமையாக வரையறுக்கிறது. குறுந்தொகையில் "பூவிடைப்படுதல் யாண்டு கழிந்தன்ன" என்றொரு பாடலுண்டு. அதாவது ஒரு பூ கூட காதலர்களின் தீவிரமான நெருக்கத்துக்குள் இடையில் நுழைவது பெரும் தடையாக உள்ளதாம். அதன் தீவிரமான வெளிப்பாடுதான் இந்தத் தனிமை இரக்கம். இங்கு கிளி வந்து அதனை இல்லாமல் செய்ய முனைகிறது. அதாவது இடைவெளியைக் குறைக்க முயல்கிறது.
நிலம் எனும் நல்லாள் என்று வள்ளுவரின் குறள் ஒன்று உண்டு. நிலத்தைப் பற்றிய மேலான எண்ணம் பல ஆயிரம் ஆண்டுகளாகத் தமிழில் வழங்கி வருகிறது. சங்ககாலத்தின் நிலங்கள் பற்றிய பகுப்பையும் நாம் ஞாபகப்படுத்த வேண்டும். முல்லை மருதம் நெய்தல் பாலை குறிஞ்சி என்று அய்வகை நிலங்களும் மலரின் பெயரால் வகுக்கப்பட்டுள்ளன. இது தமிழின் இலக்கிய மரபு உருவான காலம் தொட்டே நிலைத்து வரும் பண்பு. இன்றுகூட நம் பகுதியில் நிலத்தை உழுவதற்கோ கிணறு தோண்டுவதற்கோ முன்பாக அந்த மண்ணை வணங்கிவிட்டு ஆரம்பிக்கும் வரலாற்று வழிபாட்டு முறை ஒன்று உள்ளது. இது கிராமிய வாழ்வின் மிக முக்கியமான அம்சமாக இருந்து வருகிறது. அத்துடன் நகரப்பகுதிகளில் ஒரு கட்டிடம் கட்டுவதற்கான அடிக்கல்லை நிலத்தில் நாட்டும்போது அதற்கு ஒரு பூஜை செய்தே ஆரம்பிக்கின்றோம். வாழ்நிலம் பற்றிய பிரக்ஞையானது காலந்தோறும் இருந்து வரும் ஒன்று. அது தவிர்க்க முடியாத ஒரு பண்பாட்டுத் தொடர்ச்சி. சுகுமாரனின் வாழ்நிலம் என்றொரு கவிதையை இந்த இடத்தில் ஞாபகமூட்ட வேண்டும்.

"கனவின் நிலம்
நீரால் ஆனது

வாழ்க்கை சலித்துப்
புதைந்தொழிய விரும்பினேன்
தோண்டியதும் உள்வாங்கிய நிலம்
மூன்றுமுறை மன்னித்து ஒளியில் நடத்தியது.

கனவின் கடல்
மண்ணால் ஆனது.

மரணம் அலுத்து
உயிர்த்தெழத் தவித்தேன்
எழுந்ததும் சரிந்த நீர்
மூன்றுமுறை மிதித்து இருளில் மூழ்கடித்தது.
நீரில் மரணம் இனிது
அதனினும் இனிது
நிலத்தில் வாழ்வு"

கனவினுடைய நிலம் நீராலும், கனவினுடைய கடல் மண்ணாலும் ஆக்கப்பட்டுள்ளது என்பதை நேர் எதிர் சிந்தனைகள் மூலம் வெளிப்படுத்துகிறார். நிலமும் நீரும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது. ஆனால் நிலம் தற்கொலைக்கு விரும்புபவனையே மன்னிக்கும் தன்மை கொண்டதாகவும், நீர் அப்படியான ஒரு தன்மை அற்றது. அது இலகுவில் உள்வாங்கி மரணத்தை அளித்து விடக்கூடியது என்றும் கூறப்படுகிறது. மரணத்தின் எச்சரிக்கை அடையாளம் தான் மூன்று முறை. மூன்று முறை என்பதை மன்னிப்பின் குறியீடாகவும் பார்க்கலாம். இங்கே நிலம் நீரால் ஆனது என்பதையும் கடல் மண்ணால் ஆனது என்பதையும் நாம் மீளவும் தெளிவுபடுத்த வேண்டும். ஒரு உறுதியான பருப்பொருளான நிலத்தை அசையும் தன்மைகொண்ட நீர் கனவின் மூலம் தன்வயப்படுத்தியுள்ளது. அதேபோல அசையும் தன்மைகொண்ட கடலை அசையாத பருப்பொருளான மண் கனவின் மூலம் தன்னிடம் வைத்துக் கொண்டுள்ளது. இங்கே யாருக்கு மன்னிக்கும் தன்மை வாய்க்கிறது என்றால் நீரால் ஆன நிலத்துக்குத்தான். அதாவது அசையும் பொருளால் உருவாகிய அசையாத அசையாத நிலத்துக்கு. மன்னிப்பதுடன் அல்லாமல் ஒளியை நோக்கியும் கொண்டு செல்கிறது. அதாவது நிலத்தின் மேலாண்மை ஓங்கும்போது நமது வாழ்வியல் சிறக்கிறது. நீரின் மேலாண்மை நிலத்தில் அதிகமாகும்போது நமது மரணம்தான் சிறப்பாகிறது. இங்கே வாழ்நிலம் என்பதன் அடிப்படை எவ்வளவு நித்தியத்துவமானது என்று சுகுமாரன் கூறியுள்ளார். நிலம் பற்றிய இன்னொரு கவிதையில் பின்வருமாறு கூறுகிறார்.

"கண்டடைந்த பின்னும் கண்டுபிடிக்கப்படாத நிலம் உன் தேகம். 
ஏனெனில், உடலும் நிலமும் மனதால் ஆனது"

இங்குதான் வள்ளுவரின் 'நிலம் எனும் நல்லாள்' என்ற குறள் வரியும், 'செல்லான் கிழவன் இருப்பின் நிலம்புலந்து இல்லாளின் ஊடிவிடும்' என்ற குறளும் நிலம் மற்றும் உடல் பற்றிய சுகுமாரனின் பிரக்ஞையை அதீதப்படுத்த உதவுகிறது. வள்ளுவர் எதிரிலுள்ள விவசாய நிலத்தை மனைவியுடனும், சுகுமாரன் மர்மமாகவுள்ள நிலத்தை காதலியின் தேகத்துடனும் ஒப்பிட்டுள்ளார். அதே நேரம் சுகுமாரன் இறுதியில் உடலும் நிலமும் மனதால் ஆனது என்றொரு சிந்தனையையும் சேர்த்து விடுகிறார். வள்ளுவரின் காலத்தில் நிலம் காதலியுடன் மட்டும் வந்து சேர்கிறது. ஆனால் சமகாலத்தில் நிலத்தின் முக்கியத்துவம் பிரக்ஞைபூர்வமான கவிஞர்களால் அறியப்பட்டுள்ளதால் அதனை வெறுமனே தேகத்துடன் அடையாளப்படுத்தாமல் மனதுடனும் அடையாளப்படுத்த வேண்டிய தேவை உள்ளது. அதனைத்தான் சுகுமாரன் தனது பல கவிதைகளில் தெளிவாகவும் வெளிப்படையாகவும் கூறியுள்ளார்.
எமக்கு ஏற்ற காதல் துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு தேடலும் அந்தத் தேடலுக்கான காலமும் தேவையாக உள்ளது. இதில் ஒன்றைவிட்டு ஒன்றை ஏற்றுக்கொண்டால் நமக்கு ஏற்புடையதான வாழ்க்கை அமைந்துவிடுவதில்லை. இந்த இரண்டின் தீவிரமான களப்பணிமூலம் மிக விரைவாகவேனும் நமக்கான துணை கிடைத்துவிடும். தாமதமாகக் கிடைப்பவர்களுக்கு யார் அந்தத் துணையானவர் என்ற கேள்வி எழும். அதனைக் காலம்தான் விரித்துக் கொண்டு செல்லும். அதன் உள்ளர்த்தத்தைச் சுகுமாரன் தனது கவிதையில் இப்படி எழுதியுள்ளார். இந்தக் கவிதையை அடையாத காதலுக்கான குறியீடாகவும் அடைந்த காதலுக்கான வெகுமானமாகவும் நாம் எடுத்துப் பார்க்க முடியும்.

"அன்பின் வெகுமானமாக
நீ கொடுத்த பூங்கொத்தின்
ஏதோ ஒரு மலரில் மிஞ்சியிருக்கிறது
அந்தத் தேன்கூட்டை முழுமையாக்கும் கடைசித் துளித் தேன்.
எது அந்த மலர் என்ற
கேள்வி விரியும் இடமாகிறது
காலம்"

சுகுமாரன் எனது கவிதை வாசிப்பில் மிக நெருக்கமான ஒரு கவிஞர். அவரது பல கவிதைகள் என் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைப் போட்டுப்பார்க்கும் வகையில் ஞாபகமூட்டக் கூடியது. போகன் சங்கர் மற்றும் கே.சச்சிதானந்தன் முதலானவர்கள் கவிதைகளிலும் இதே போன்றதொரு தன்மையை அதிகமாக அவதானித்துள்ளேன். கவிதை என்பதே அனுபவத்தின் அழகியல் கோவை என்று அப்போது யோசிக்கத் தோன்றும். இருந்தாலும் தனியொருவனின் பார்வையில் நிகழ்ந்த சம்பவங்களைக் கொண்டு ஒட்டுமொத்தமான ஒரு படைப்பாளியை சிறிய கூட்டுக்குள் அடக்கிவிடவும் முடியாது. அதனை அனுபவப் பகிர்வாகவும், வரலாற்று வாசிப்பின் வழியாகவுமே எழுதவேண்டும். சுகுமாரனின் கவிதைகள் எனக்கு அப்படியான ஒரு தருணத்தை ஏற்படுத்துகிறது என்றால் அது மிகையல்ல.தொடர்புடைய பதிவுகள்.


(தொடரும்)

00

Comments

Popular Posts