பசுக்கொலையின் கலாசாரப் புதிர்

பசுவதை அரசியல் என்பது இலங்கை வரையிலும் பரவிவிட்டது என்று ஒருசிலர் அண்மையில் காட்டமான விமர்சனங்களை முன்வைத்திருந்தனர். அத்துடன் சிவசேனை அமைப்பைச் சேர்ந்த சச்சிதானந்தன் அவர்கள் இலங்கையானது இந்து பௌத்த பூமி என்று கூறியதுடன் அல்லாமல் அந்த மரபுகளை ஏற்க முடியாதவர்கள் இந்த நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என்றும் ஒரு கருத்தைக் கூறியிருந்தார். என்னால் இந்தக் கருத்தில் முழுமையாக உடன் படமுடியாது. அதன் பின்னுள்ள அரசியலை இங்கு பேசுவது என் நோக்கமுமல்ல. என் வாழ்நாளில் நான் இதுவரையிலும் மாட்டு இறைச்சியை உண்டதில்லை. அதற்கு மரபு சார்ந்த நம்பிக்கை என்பதைவிட அந்த பசுக்களின் மூலம் கிடைக்கும் பயன்தரும் உணவுகளை உண்பதனால் அப்படியொரு தேவை எனக்கு இருக்கவுமில்லை.

அண்மையில் மேர்வின் ஹரிஸ் எழுதிய பசுக்கள் பன்றிகள் யுத்தங்கள் சூனியக்காரிகள் மற்றும் கலாசாரப் புதிர்கள் (cows pigs wars & witches: the riddle of culture) என்ற நூலை வாசிக்க முடிந்தது. அதில் பசு என்னும் தாய் என்ற கட்டுரை இடம் பெற்றிருந்தது. அதில் இந்தியாவின் பசுக்கொலைக்கான தடைகள் எப்படி பொருளாதாரத்துடன் தொடர்புறுகின்றன. அவற்றை வரலாற்றின் வழி வாசிப்பதன் பெறுமதிகளை அந்நூல் வழங்கியிருந்தது. அதற்கு முன்னதாக பசுக்கொலைக்கான தடை பற்றி ஜெயமோகன் எழுதிய ஒரு குறிப்பினை இங்கே இணைத்துப் பார்ப்போம். இது மெர்வீனின் கட்டுரையையும் வரலாற்று வாசிப்பையும் இங்கே கொணர்ந்து சேர்க்கின்றது. இதன் மூலம் பசுக்கொலைக்கான தடையை மூட நம்பிக்கை என்று கூறுபவர்களின் தெளிவின்மையை உணரச் செய்யலாம்.

"நமக்கு மிக ஆர்வமூட்டும் ஒன்றாக இதில் உள்ள பசுக்கொலை பற்றிய கட்டுரை அமையலாம். ஏன் இந்தியாவெங்கும் பசுக்கொலை தடைசெய்யப்பட்டுள்ளது? நீண்ட காலமாக இருந்துவரும் இந்த தடை நம்பிக்கையாகவும் மத கோட்பாடாகவும் மாறி வேரூன்றிவிட்டிருக்கிறது.
பசுக்கொலைத்தடையை ஒரு வகை மூடநம்பிக்கை என்று எளிதில் முத்திரை குத்திவிடுவதே நாம் இங்கே செய்யும் பண்பாட்டு ஆராய்ச்சியாக இருக்கும். அல்லது அதை தாழ்ந்த சாதியினரை ஒடுக்க உயர்சாதியினர் செய்யும் ஒரு வகை சதி என்று முத்திரை குத்தி விடுவோம்.
மெர்வின் ஹாரீஸ் இந்தியச்சூழலில் இந்த தடைக்கு ஏதேனும் பொருளியல் அடிப்படை இருக்க வாய்ப்புண்டா என ஆராய்கிறார். இத்தகைய ஒரு விஷயம் நூற்றாண்டுகளாக நீடித்தது என்பதே இதற்கு பொருளியல் அடிப்படை இருந்திருக்கிறது என்பதற்கான ஆதாரமாகும் என்கிறார்.
இது ஒரு செவ்வியல் மார்க்ஸிய நோக்கு என்பதை நாம் அறிவோம். செவ்வியல் மார்க்ஸியத்தின் இயல்பே இத்தகைய பண்பாட்டு, அரசியல் செயல்பாடுகளுக்குள் ஒளிந்திருக்கும் பொருளியல் உள்ளுறையை வெளிக்கொணர்வதுதான்.
ஆனால் தமிழக மார்க்ஸியர்களிடம் நாம் இதை எதிர்பார்க்க இயலாது. அவர்கள் மார்க்ஸியம் என்ற மகத்தான ஆய்வுக்கருவியை தூக்கி வீசிவிட்டு எந்தவிதமான ஆய்வு முறைமையும் இல்லாத மட்டையடியான பெரியாரியத்தை சுமக்க ஆரம்பித்து நெடுநாட்களாகின்றன. காரணம் உழைப்பு தேவையில்லை, ஜனக்களுக்கும் சொல்வது புரியும். மெனக்கெட வேண்டாம்.
பசுவதை தடை பற்றி ஆராயும் மெர்வின் ஹாரீஸ் எப்படி படிப்படியாக அந்த ஆய்வை விரித்துச் செல்கிறார் என்பதை பார்க்கும் ஒரு வாசகன் பண்பாட்டு மானுடவியலின் செயல்முறையை எளிதாக புரிந்துகொள்ள முடியும். இந்தியாவின் வரட்சியும் அடிக்கடி வரும் பஞ்சங்களுமே பசுக்கொலைக்கான தடைக்குக் காரணம் என்ற முடிவுக்கு வருகிறார் மெர்வின் ஹாரீஸ்.
பசுக்கொலை அனுமதிக்கப்பட்டிருந்தால் ஒரு பஞ்சத்துக்குப் பின் கால்நடைகளே இருக்காது.
மேலும் பசுவுக்க்கான உணவே மனித உணவாக இருக்கிறது இந்தியாவில். கம்பு, சோளம், தினை போன்ற ‘ஏழைகளின் உணவு’கள் பெரும்பாலும் புல்லில் விளைபவை. பசுக்களை மேய்க்க புல்வெளிகளை வைத்திருப்பது இந்தத்தானிய விளைச்சலை பாதிக்கும். அதாவது பசுவுக்கு உணவிட்டு வளர்த்து அப்பசுவை தின்பதை விட அந்த பசுவின் உணவைத் தின்பது லாபகரமானது.
பசுக்கொலை பற்றி ஒட்டியும் வெட்டியும் தமிழ்நாட்டில் எப்படிப்பார்த்தாலும் பத்தாயிரம் பக்கம் எழுதப்பட்டிருக்கும். இபப்டி ஒரு கோணம் நம்மில் எவருக்கேனும் உருவானதா என்று நாம் யோசிக்க வேண்டும்.

இதை சிந்தித்திருக்க வாய்ப்புள்ளவர்கள் மார்க்ஸியர்களே. டி.டி.கோஸாம்பி தவிர எவருமே அந்த வகையான உழைப்புக்கு தயாராக இல்லை. அவ்வப்போது உருவாகும் கட்சி கோஷங்களுக்கு ஆய்வு வேடம் போடுவதற்கே அவர்கள் முயன்றார்கள். இதேபோலத்தான் பன்றிகளுக்கான இஸ்லாமிய தடையையும் மெர்வின் ஹாரீஸ் ஆராய்கிறார். பன்றி மனிதனின் அதே உணவை உண்பது. உணவு அரிதான பாலைநிலப் பொருளியலில் பன்றியை உண்பதென்பது ஏராளமான மனிதர்களை பட்டினி போட்டு நாம் உண்பது போல. இன்றுகூட அதுதான் நிலை. அமெரிக்கப் பன்றிகள் உண்ணும் மக்காச்சோளம் பல ஆப்ரிக்க நாட்டு குழந்தைகளை வாழவைக்கக் கூடும்"

எத்தனை முக்கியமான ஒரு அறிமுகம் இது. இதனைத் தமிழக மார்க்சிய கோஷக்காரர்களுடன் ஒப்பிட்டு ஜெமோ  தெளிவாக  எழுதியுள்ளார். அதாவது பசுக்கொலைக்கான தடையை மூட நம்பிக்கையாக மட்டுமே வரலாறு தொட்டு இந்த மார்க்சியர்களும் வேறுசில ஆய்வாளர்களும் கருதியுள்ளனர். ஆனால் அதன் பரிணாமம் வேறானது. பண்பாட்டு மானுடவியலுடனும் பொருளாதார நிலவரத்துடனும் தொடர்புடையது.

இது போன்ற கற்கைகளை 1959 ஆம் ஆண்டு தொடக்கம் இந்தியவியல் என்று பல வெளிநாட்டுக்காரர்கள் மேற்கொண்டுள்ளனர். உதாரணமாக Ford Foundation என்ற அமைப்பு உபரியாக உள்ள பசுக்கள் மூலமே பால் உற்பத்தி நடக்கிறது என்ற ஆய்வையும் மேற்கொண்டிருந்தது. இதுபோன்ற பல அரைகுறை ஆய்வுகளை எடுத்து இங்குள்ள தமிழ் போலி அறிவுஜீவிகள் மேற்கோள் என்ற பெயரில் வரலாற்றினையே மாற்றிவிடுவர். மேலும் இந்த போர்ட் பவுண்டேஸன் என்ற அமைப்புத்தான் இந்தியாவில் மதமாற்றங்களுக்கு உதவி செய்கிறது என்றும் இந்தியம் எனபதையே இல்லை என்றும் இந்து மதம் என்பதே சாதியம் மட்டுமானது என்றும் வரையறுக்க வேண்டியுள்ளது என்றும் இந்திய எழுத்தாளர்களுக்கு நிதி அளித்து இயக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டு ஒன்றும் உள்ளது. உதாரணமாக எஸ்.வி.ராஜதுரை, அ.மார்க்ஸ் போன்றவர்கள் மீது இப்படியொரு குற்றச்சாட்டு ஆரம்ப காலத்தில் வைக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் ஈ.வே.ராமசாமி பற்றிய ஒரு ஆய்வு நூலுக்கு இந்த அமைப்பின் நிதி ராஜதுரைக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனை ராஜதுரை தனது நூலின் ஓரிடத்தில் குறிப்பிட்டும் உள்ளார்.
முஸ்லிம்கள் பன்றி இறைச்சியைத் தவிர்க்கும் அதேவேளை மாட்டிறச்சியை உண்கின்றனர். அதனால் இந்துக்கள் அவர்களைப் பசுவைக் கொலை செய்யும் அந்நியர்கள் என்றே எண்ணுகின்றனர். குறிப்பாக இந்தியப் பிரிவினைக்கு முந்தைய கலவரங்களில் பல முஸ்லிம்கள் மீது பசுவைக் கொலை செய்தமைக்காகவே தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உதாரணமாக பீஹாரில் 1917 இல் நிகழ்ந்த கலவரங்களில் 170 கிராமங்கள் எரிக்கப்பட்டு முப்பது பேர் கொலை செய்யப்பட்டனர். இது இன்று வரையிலும் பாகிஸ்தான் இந்திய உறவில் கசப்பான ஒன்றாகவே கருதப்படுகிறது. ஒரு தேசம் பசுவைத் தெய்வமாக வணங்க இன்னொரு நாடு அதனை உணவாகக் கொலை செய்து உண்கிறது என்ற பிரச்சனை தொடர்ந்து நிகழ்கிறது. இதனை மூடநம்பிக்கையாகப் பார்ப்பதனால்தான் பிரச்சனை மேலும் உச்சம் கொள்கிறது. உதாரணமாக எனது நாட்டு  அரசியலே இதற்கு உதாரணமாக உள்ளது.  எண்பதுகளின் பின்னரான இலங்கையில் நடந்த தமிழ் இந்து-முஸ்லிம் கலவரங்களில் முஸ்லிம்கள் அரச படைகளின் ஆதரவுடன் கிழக்கிலுள்ள இந்துக் கோயில்களை இடித்து அங்கிருந்த கோயில் கர்ப்பக் கிரகங்களில் மாட்டிறச்சிக் கடை வைத்தனர். இன்றும் வைத்துள்ளனர். கிழக்கில் இன்று மாட்டிறைச்சிக் கடை வைத்துள்ள ஒருசில இடங்கள் ஆரம்பத்தில் கோயில் கர்ப்பக் கிரங்களாக இருந்தவைதான். இந்த மிருக அரசியல் உலகம் முழுமைக்கும் பரந்து விரிந்துள்ள ஒன்று. அதனைப் பிறர் மீது காழ்ப்பை உணர்வதற்காகப் பரஸ்பரம் பாவிக்கப்பட்டுள்ளது என்பதையும் இங்கே மறுப்பதற்கில்லை. அதன் மீது வரலாற்றின் அடிப்படையாகக் கொண்ட பொருளாதார வாசிப்பை முன்னெடுக்க வேண்டும். மாறாக பசுக்கொலைக்கான தடை என்பதை வெறுமனே மதத்துடன் தொடர்பு படுத்துவதும் மூடநம்பிக்கையுடன் வைத்துப் பார்ப்பதும் ஏற்கமுடியாதது. அதன் பின்னுள்ள மானுடவியல் பண்பாட்டு ஆய்வுகளை சரியான பார்வையில் முன்வைக்கவேண்டும். அதுவும் வரலாற்றுப் பார்வையில்.
                      [ Marvin Harris ]
மஹாத்மா காந்தி தன்னுடைய காலத்தில் பசுக்களைக் கொலை செய்வதை முழுமையாக நிறுத்த வேண்டும் என்று விரும்பிய ஒருவர். இந்திய அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டபோது சட்டத்துக்குப் புறம்பான முறையில் பசுக்கொலைகள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்ற அறிவுறுத்தல் எழுதப்பட்டுள்ளதாகவும் அதனைக் கொண்டு பல மாநிலங்களில் பசுவதை நிறுத்தப்பட்டுள்ளது. அல்லது தடைசெய்யப்பட்டுள்ளது. அதே நேரம் சில மாநிலங்களில் பர்மிட் மூலம் விலக்களிக்கப்பட்டுள்ளது.  இந்த பசுக்கொலை பற்றிய பிரச்சனை வெறுமனே இந்து முஸ்லிம் பிரச்சனையாகப் பார்க்க முடியாது. ஆளும் காங்கிரசுக்குள் எத்தனையோ பேர் பசுக்கொலைக்கு எதிராகவே ஆரம்பம் தொட்டு இந்தியாவில் இருந்துள்ளனர். உதாரணமாக 1967 நவம்பர் எழாம் தேதி ஒன்றரைலட்சம் பேர் பசுக்கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்தியப் பாராளுமன்றம் முன்பாகக் கூடினர். பசுக்கொலையை முற்றாகத் தடைசெய்ய வலியுறுத்தி நடந்த இந்தப் போராட்டம் வன்முறையாக மாறியதால்  எட்டு பேர் மரணமடைந்தனர். இதன் பின்னர் முனி சுஸ்திரில் குமார் என்பவர் தலைவராக இருக்க All Party cow protection campaign committe என்ற அமைப்பு இந்திய அளவில் பிரசித்தம் பெற்றது. இந்த அமைப்புக்குள் இந்து, பௌத்த, ஜைன மற்றும் சீக்கிய மதத்தவர்கள் அனைவரும் இணைந்து இயங்கினர். இதனால் பசுக்கொலைக்கு எதிரான பொருளாதார நோக்கு முற்றிலும் மதமாகவும் மூட நம்பிக்கையாகவும் பிற்காலத்தில் மாற்றப்பட்டது என்பது இந்தியவியல் பற்றிய ஆய்வுகளின் துரதிஷ்டம் என்றே கூறவேண்டும்.
மண்ணின் வயல் தரைகளை உழுவதற்கு எருதுகளை ஆரம்ப காலங்களில் இந்தியர்கள் பயன்படுத்தினர். ஆனால் அமெரிக்க விவசாயிகள் ட்ரக்டரைப் பாவித்தனர். இங்குள்ள வித்தியாசம் என்னவெனில் ட்ரக்டரை உருவாக்க தொழிற்சாகலைகள் போதும். ஆனால் எருதுகளை உண்டாக்க பசுக்களே தேவையாக இருந்தது. பசுக்களின் அழிவு என்பது இந்திய வறுமைக்கு அக்காலத்தில் இட்டுச் சென்றது. பசு என்பதை ஆழ்மனதுடன் கொண்டு சென்ற இந்தியர்கள் அதனை தெய்வமாகவே வணங்கினர். இன்றுகூட நாம் நமது நிலத்தில் கிணறு வெட்ட வேண்டுமாக இருந்தால் அந்த மண்ணில் பூஜை செய்தோ வணங்கிவிட்டோதான் ஆரம்பிப்போம். அந்தக் கிணற்றை ஆரம்பத்தில் மனித சக்தியைப் பயன்படுத்தி உருவாக்கினோம்.  இன்று மெசின்கள் மூலம் உண்டாக்குகிறோம். ஆனால் நமது பழைய மரபுகள் இன்னும் நமது ஆழ்மனதில் இடம்பெற்றுத் தொடர்ந்து வந்தபடியேதான் உள்ளது. இதனை இந்து சான மரபின் பொருள் முதல்வாத நோக்கான சாங்கியம் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாக நமக்கு வழங்கியுள்ளது. இதுதான் பசுக்கள் விடயத்தில் இன்று பின்பற்றப்படுவதும். அது ஆழ்மனத்திலுள்ள ஒரு விடயம். பல நம்பிக்கைகளின் அழுத்தமான தொடர்பு. வலிந்து கொணரப்பட்ட அந்நியக் கலாசாரங்களுக்காக தமது பூர்வ மரபினை இந்துக்கள் விட்டுக்கொடுத்து அது மூட நம்பிக்கை என்று பிற கலாசாரகாரர்கள் கூறுவதை அப்படியே ஏற்கவேண்டிய கட்டாயம் இல்லை என்றே என்னால் கருதமுடிகிறது. இந்து ஞான மரபு என்பது பல காலம் பல நம்பிக்கைகளுடன் தொடர்பு பட்டு முழு இந்தியா என்று இல்லாமல் இலங்கை போன்ற நாடுகள் மீதும் அழுத்தமான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை செமிடிக் மதங்களில் நம்பிக்கைகளுடன் நமது நம்பிக்கையை கேலிசெய்து கரைத்து விடவேண்டும் என்ற தேவையும் இல்லை. அதனால் சமூக நம்பிக்கைகளின் பிரகாரம் பசுக்கொலைக்கு எதிரான தடை என்பது தேவையான ஒன்றுதான். அதே நேரம்  அவரவர் விரும்பிய உணவுகளை உண்ணும் உரிமை அவரவர்க்கு உண்டு. அது எந்தச் சமூகமானாலும் சரி. அதனைப் பின்பற்றாதவர்களை நாட்டைவிட்டு வெளியேறச் சொல்கின்ற கருத்துடன் உடன்படவும் முடியாது.
இந்தியாவில் தோன்றிய ஒவ்வொரு மதங்களுக்கும் ஒவ்வொரு நம்பிக்கை உண்டு. அவை பழங்குடியிலிருந்து கிளர்ந்து பின்னர் வைதிக அவைதிகமாக உருவாகி பிற்கால வேதாந்தங்களையும் உள்வாங்கி பன்னெடுங்காலமாக தமக்குள் விவாதித்து சித்த மரபுகளுக்குள்ளும் தமது பாகங்களை வைத்து பின்னர் இந்திய மரபுசாராத மதங்களுடன் காலம்தோறும் ஆழமாக உரையாடியே வந்துள்ளது. அந்த உரையாடலுக்குள் பழங்குடி நம்பிக்கைகளை கேள்விக்குறியாக்கும்போது அதன்வழிவந்த ஆழ்மனம் விரக்தியடைகிறது. இதனை மூடநம்பிக்கை என்று வகுத்துவிடமுடியாது. ஆழ்மனதிலுள்ள அனைத்தையும் கோஷம் போடும் கட்சி அரசியலுக்காக எழுதும் ஆய்வாளர்கள் மூடநம்பிக்கை என்று வகுப்பார்கள் எனில் அதைவிடக் கடைந்தெடுத்த மூடத்தனம் வேறில்லை.

மேர்வின் ஹரிஸ் அவர்களுடைய மொத்த நூலும் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா என்று தெரியவில்லை. ஆனால் இந்த நூலைத் தமிழில் மொழிபெயர்த்து அதன் பார்வைகளையும் தமிழ் ஆய்வுகளுக்குள் உள்வாங்குவதன் மூலம் பல பிரச்சனைகளின் அடிப்படைத் தன்மைகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம்.

Comments

Popular Posts