எஸ். என். நாகராஜனின் பேட்டி

சிந்தனையாளர் எஸ். என். நாகராஜனின் பேட்டி ஒன்றை தமிழ் இந்துவில் வாசிக்க முடிந்தது. அது பற்றிப் பேச முன்பு இங்கு அசல் மற்றும் போலி சிந்தனைகள் பற்றிய சிறிய விளக்கம் தருவது நல்லது.
எஸ்.என்.நாகராஜன்.

எஸ்.என்.நாகராஜன், அயோத்திதாச பண்டிதர், மு.தளையசிங்கம் முதலியவர்களை முதல் சிந்தனையாளர்கள் அல்லது அசல் சிந்தனையாளர்கள் என்றே தமிழில் வகைப்படுத்தியுள்ளனர். அயோத்திதாசப் பண்டிதர் தாழ்த்தப்பட்ட சாதி மக்களுக்கான போராட்டத்தை சீவக சிந்தாமணியில் இருந்தும் மணிமேகலையில் இருந்தும் தமது சமூகம் பற்றிய விழிப்புணர்வுகளை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட பண்டிதரை அறியாதவர்களுக்கு அவரை தென்னிந்திய அம்பேத்கர் என்றும் கூறலாம்.

முதல் சிந்தனையாளர் என்பது பழைய சிந்தனை ஆட்களின் அறிவு வகைமைகளை முழுமையாக உள்வாங்காமல் தனக்கென்று உள்ள ஒரு மரபைத் தனது சுயமான பார்வையில் இருந்து கட்டியமைப்பவர் என்று கூறலாம். அந்த வகையில் தமிழில் உள்ள முதற்சிந்தனையாளர்களில் பிரதானமானவர்கள் மேற்கூறிய மூவர்தான். அடுத்து ஜெயமோகனையும் நான்காவது சிந்தனையாளராக இதற்குள் வகுக்கலாம். மு. தளையசிங்கம் மற்றும் ஜெயமோகன் இருவரும் இந்து-இந்திய-மேலைத்தேய ஞான மரபுகளின் மிகப் பெரிய தமிழ் அடையாளங்கள். அயோத்திதாசப் பண்டிதர் இந்திய ஞான மரபையும் நாகராஜன் இந்திய-மேலைத்தேய மரபையும் உள்வாங்கியவர்கள்.

ஈ.வே.ராமசாமி என்பவர் வெறுமனே அய்ரோப்பிய நாத்திகவாதச் சிந்தனைகளை இங்கு பிரதி செய்து நடைமுறைச் சாத்தியமற்ற பல கருத்துக்களை இங்கே முன்வைத்தார். பெண்ணுரிமை என்று பேசியவர் தன்னுடைய இறுதிக் காலத்தில் தன்னைவிட பல வயது குறைந்த பெண்ணைத் திருமணமும் செய்தார். அத்துடன் பிராமணப் பெண்கள் மீது பல வசைகளையும் செய்தார். இது அவருக்கு பெரும் வரவேற்பை இடைநிலைச் சாதிகளிடையே உண்டாக்கியிருந்தது. அதாவது பிராணர்கள் இருந்த இடத்தில் இடைநிலைச் சாதி ஆட்கள் இருக்க வேண்டும் என்று கங்கணம் கட்டினர். உதாரணமாக அய்யர்கள் வேலைசெய்யும் தொழிற்சாலையில் வேளாளர்களும், நாயக்கர்களும் மேனிலை அடைய விரும்பினர். அதற்கு பிராமண எதிர்ப்பு தேவைப்பட்டது. மாறாக ஆத்ம அர்த்தம் பொருந்திய சாதி ஒழிப்பு அதற்குள் இருக்கவில்லை. சாதியத்தை ஒழிக்க முடியாது என்பதும், சாதிய ஒழிப்பில் ஈ.வே.ராமசாமி மற்றும் அவரைப் பின்தொடர்ந்த பரவாரப் படைகளான திராவிடக் கட்சிகளும் ஈடுபடவே இல்லை என்பதற்குப் பின்னாளில் தோன்றிய பாமக, கொங்கு இளைஞர் பேரவை போன்ற கட்சிகளும் அவற்றின் வளர்ச்சியுமே ஆகப்பெரிய உதாரணமாக உள்ளது. ஆகவே ஈ.வே.ராமசாமியை முதல் சிந்தனையாளராக இங்கே வகுக்க முடியாது. உண்மையில் அவர் ஒரு சிந்தனையாளர்தானா என்ற சந்தேகம் அவருடைய களஞ்சியங்களை வாசிக்கும்போது எனக்கு ஏற்படுவதுண்டு. அதனால்தான் அவரது சிறப்புப் பெயரை நான் கூற விரும்புவதில்லை. ஈவேரா என்றே சொல்வதுண்டு. ஆனால் படிப்பறிவற்ற அறியாமையால் மூழ்கிய வெகுஜனத் தமிழ் மக்களின் செல்வாக்கை அவர் எடுத்துக் கொண்டதால் அவரது வழியே தமிழ்ச்சமூகத்தின் பிரச்சனைகளுக்குத் தீர்வு என்று பலர் நம்பத் தலைப்பட்டனர். இது தமிழ்ச் சமூகத்தின் ஆகப்பெரிய பின்னடைவு என்றே கூறவேண்டும். அதாவது ஈவேரா அவர்களை சமூகச் சீர்திருத்தவாதியாகத் தூக்கிப் பிடித்தது தமிழ்ச்சமூகத்தின் அறிவார்ந்த வீழ்ச்சி எனில் மிகையல்ல.

இங்கே எஸ்.என். நாகராஜன் என்கிற தமிழ்ச் சிந்தனையாளர் மார்க்ஸும் ஆழ்வாரும் வேறு வேறல்ல என்ற ஒரு கருத்தைக் கூறியுள்ளார். இது எப்படியுள்ளது என்றால் இயேசுவும் முருகனும் ஒன்று என்று கிறிஸ்த்தவ மதமாற்ற மிசனரிகள் சொல்வதுடன் ஒப்பிடலாம். ஒரு அசல் சிந்தனையாளர் அப்படிக் கூறியதில் ஆகப்பெரிய தர்க்க முரண்பாடுகள் உள்ளன. முன்னதில் இருப்பது மார்க்சியப் பரப்புரை. பின்னதில் இருப்பது மதப் பரப்புரை. இங்கு Idea என்பதை எடுத்துக்கொண்டு அதனைத் தனது முன்முடிபுள்ள theory க்கு இணைவைப்பவர்களாகவே இந்த இடதுசாரிய திரிபாளர்களை நாம் அடையாளம் காணவேண்டும். ஆனால் நாகராஜன் போன்ற மூலச் சிந்தனையாளர்கள் இதுமாதிரியான போகிற போக்கில் கதையளக்கும் விதமான கருத்துக்களைக் கூறுவார்கள் என்று இப்போது வரையும் நம்பமுடியவில்லை. மதத்தை முற்றாகத் தவிர்த்த மார்க்சை எப்படி இறைவனுடன் ஆத்மார்த்தமாக உரையாடிய ஆழ்வார்களுடன் ஒப்பிடமுடியும். பொருள்முதல்வாத மார்க்சியப் பார்வைக்கும் பூர்வமீமாம்சம் என்ற கருத்துமுதல்வாத வழிவந்த ஆழ்வார்களுக்கும் தொடர்பு உண்டென்று வகுப்பது ஏமாற்று வேலை அல்லவா? பெருவாரியாகப் பொருள்முதல்வாத நோக்கிலமைந்த பௌத்த சிந்தனைகளை மார்க்சுடன் ஒப்பிட்டால் அதனை மறுப்பவர் குறைவென்று கூறலாம். அதிலும் பல முரண்கள் ஏற்படும். அதாவது வேதாந்த மரபுகளைப் பற்றிப் பேசத் தொடங்கினால் மார்க்சுக்கு இதற்குள் இடமில்லை என்பது வெளிப்பட்டுவிடும்.  ஆனால் நாகராஜன் போன்ற அறிஞர்கள் போகிற போக்கில் இப்படியான சிந்தனைகளை உதிர்த்து விடுவது திரிபுவாதமாகவே எடுத்துப் பார்க்க முடிகிறது.

அத்துடன் அந்தப் பேட்டியில் காந்தி பற்றிய அவருடைய அணுகுமுறை இந்தமத/ பிராமணிய எதிர்ப்பை மட்டுமே பிரதிபலிக்கிறது. அவரைத் துறவி என்கிறார். அத்துடன் எதேச்சதிகாரி என்றும் குறிப்பிடுகிறார். துறவியாக உள்ள ஒருவர் ஒரே சமயத்தில் ஏதேச்சதிகாரியாக இருப்பது வரலாற்றில் இதுதான் முதல் தடவை என்று நினைக்கிறேன். அதனை மார்க்சியர்களால்தான் எனக்குப் பிடிக்காது என்று வகைப்படுத்தவும் முடியும்.  இதைத் தவிர்த்து இருந்தால் காந்தி பற்றிய நாகராஜனின் அணுகுமுறைகள் ஏற்புடையவை என்றே சொல்வேன்.
பேட்டியின் ஒரு இடத்தில் நாகராஜன் இப்படிக் கூறுகிறார். இதனால்தான் நாகராஜனை நாம் இன்றும் முதற் சிந்தனையாளர் என்கிறோம். ஒரு சில மறுப்புக்களுடன்.
நாகராஜனின் பேட்டி

"மேற்கத்திய இயங்கியல் குறைபட்டது என்பதை அய்ம்பது வருஷங்களுக்கு முன்பே புரிந்து கொண்டு விட்டேன். என்னுடைய கீழை மார்க்சியத்துக்கான அடிப்படை அன்புவழிக்கான ஊழியம். மேற்கத்திய இயங்கியவில் இணைப்புக்கான கூறுகள் இல்லை. "அன்பை அறியாதவன் உயிரையே அறியாதவன்" என்கிறார் நாராயணகுரு. மார்க்சால் இந்த மரபைப் புரிந்து கொள்ள முடியாது. இந்தியாவைக்கூட மார்க்ஸும் ஏங்கல்ஸும் தவறாகப் புரிந்து கொண்டுள்ளனர்"

இதுதான் மேலைத்தத்துவம் பற்றிய நாகராஜனின் ஒட்டுமொத்தமான பார்வை. இதனை அல்லாமல் முரண்பாடான வேறொன்றைத்தான் தற்கால உடனடி மார்க்சியர்கள் முன்வைக்கின்றனர். அதுதான் ஆகப்பெரிய சாத்தியமின்மைகளும் சாதிய மேலதிக்கங்களுக்கும் காரணம். அத்துடன் சமூகக் கலவரப் பரிதாபங்களுக்கும் காரணம். இதனை நாகராஜன் தனது பழைய சிந்தனைக் கட்டுரைகளில் எழுதியுள்ளார். ஆனால் மார்க்ஸும் ஆழ்வாரும் வேறல்ல என்று பிற்கால கம்யூனிச சிந்தனைகளிலும் ஸ்டாலினிச அடிப்படைகளில் இருந்தும் நாகராஜன் கூறுவாராக இருந்தால் இதனை வலுவாக மறுக்க முடியும்.  ஏனெனில் அன்பு வழி என்று அவர் வரையறுத்ததை மார்க்ஸ் வழி வந்தோர் செய்து காட்டினரா என்பதுதான் இங்கே விவாதத்துக்குரியது. மார்க்ஸைத் திரித்துக் கொண்டு இதுதான் மார்க்ஸியம் மனித விடுதலைக்கு வழி என்றல்லவா முன்வைக்கின்றனர். இது அபத்தம் அல்லவா?. நாகராஜனின் ஆழ்வார்கள் பற்றிய சிந்தனைகள் மீளாய்வுக்கு உட்படுத்தி நிராகரிக்க வேண்டிய ஒன்றாகும்.
இங்கு நாம் அசல் சிந்தனையாளர்கள் யாரென்றும் போலிச் சிந்தனையாளர்கள் யாரென்றும் வகைப்படுத்த வேண்டிய இடத்தில் இருக்கிறோம். நிச்சயமாக அதில் எஸ்.என்.நாகராஜன் மூலச்சிந்தனையாளராகவே இருப்பார் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

பொன் திகழும் மேனிப் புரிசடைப் புண்ணியனும்
நின்றுலகம் தாய நெடுமாலும் என்றும்
இருவர் அங்கத்தால் திரிவாரெனும் ஒருவன்
ஒருவன் அங்கத்து என்றும் உளன்.
–பொய்கையாழ்வார்.



Comments

Popular Posts