தேவதச்சனின் கவிதை முகம் 02

எப்படியான நேரங்களில் நாம் சார்ந்த இழப்புக்களைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வோம் என்ற சந்தேகம் அடிக்கடி எழுவதுண்டு. நம்மை நோக்கி வரும்  அழுத்தங்களை ஒன்றில் உணர்வுபூர்வமான வெளிப்பாடாகவும் அல்லது மௌனமாகவும் கடந்து போவதுண்டு. இது ஒவ்வொருவரும் பயின்ற, வாழ்ந்த சந்தர்ப்பங்களைப் பொறுத்து வித்தியாசப்படும். ஆனால் அந்த அழுத்தங்கள் மட்டும் நிரந்தரமாக எம்மை நோக்கி இடையறாது வந்து கொண்டேதான் இருக்கும். இதற்கான மாற்று வழிகள் காலந்தோறும் இருந்ததில்லை.

இதனைத்தான் நமது மரபார்ந்த தத்துவ நோக்கில் ஊழ்வினை என்றும் வரையறுத்தனர். வள்ளுவரின் "ஊழிற்பெருவலி யாவுள" என்ற வரியாகட்டும்,  இளங்கோவடிகளின்
"ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும்" என்ற வரியாகட்டும் அவை பிரஸ்த்தாபிப்பது வெகுமக்களின் அழுத்தங்களைத் தான். அதைத்தான் இந்து ஞான  மரபில் பிராரப்த தர்மம் என்றும் கூறுவர். தத்துவமாக நோக்கும் போது ஊழ் என்றும், மக்களிடம் வெகுவாக உரையாடும் தளத்தை வைத்துப் பார்த்தால் அதனை அழுத்தம் என்றும் கூறலாம். இந்த இரண்டும் ஒன்றோடொன்று மிக நெருங்கிய தொடர்புள்ளவை. அவை பன்னெடுங்காலமாக எம்முடன் உரையாடி வருபவை. ஆரம்பத்திலேயே தனிப்பட்ட நபர்களுக்கான தத்துவ அறவியலாக இருந்த இந்தக் கருத்து பிற்காலத்தில் வெகுமக்களின் மனதைச் சார்ந்த சாதனமாக மாற்றம் பெற்றது.
இன்றுகூட நம்மிடம் ஒரு வழக்கம் உண்டு. நமக்கு மனம்சார்ந்த அழுத்தங்கள் ஏற்பட்டதும் கோயிலை நாடுவோம். அங்குள்ள ஆன்மீக சாதனங்களைக் கொண்டு நமது அழுத்தங்களைத் தீர்த்துக்கொள்ள முனைவோம். அந்த அழுத்தங்களுக்கு செய்த கர்மம்தான் காரணம் என்றும் ஒரு சித்திரத்தை எம்மிடம் வகுத்துக்கொள்வோம். பின்னர்தான் வைத்திய சாலையை நாடுவோம். இது நகரம் சார்ந்த வாழ்க்கையில் குறைவாக இருந்தாலும் கிராமிய மரபில் அதிகமதிகம் காணப்படுகிறது. எனக்குத் தெரிந்த முதியவர் ஒருவர் இருந்தார். அவர் தன்னுடைய வாழ்நாட்களில் ஆன்மீகத்தைக் கேலிசெய்து ஞான மரபுகளை உதாசீனம் செய்து கொண்டிருந்தார். அதாவது தூய நாத்திகர். அவருடைய கடைசிக்காலத்தில் நடக்க முடியாமல் படுக்கை நிலைக்குத் தள்ளப்பட்ட போது திருவாசகத்தைப் பாடிக்கொண்டு தலையணைக்குள் விபூதியையும் வைத்து ஆன்மீகத்துக்குள் மூழ்கினார். இது எனக்கு ஆழ்மனதில் பெரும் வியப்பை இன்றும் உண்டாக்குவதுண்டு. அவருக்கு ஊழ் பற்றிய அச்சம் அழுத்தமாகப் பரிணமித்துள்ளது, அதனால்தான் அப்படியான ஒரு சூழ்நிலைக்கு உள்வாங்கப்பட்டார் என்று பின்னர் புரிந்து கொள்ளவும் முடிந்தது. நமது சமூகமரபுகள் ஆழ்மனம் சார்ந்த நம்பிக்கைகளுடன் தொடர்ந்து இயங்கும் ஒன்றாகும். இதனைப் பற்றி அடிக்கடி எழுதி வந்துள்ளேன். அதனை அழுத்தமாக வெளிப்படுத்தும் இலக்கிய உபகரணங்களில் ஒன்று கவிதை. தேவதச்சன் மணல்வீடு என்ற தலைப்பில் எழுதிய கவிதை ஒன்று உள்ளது. அதனை வாசித்தபோது இந்த தத்துவார்த்த நோக்கு இயல்பாக எனக்குள் உண்டானது.

"எனது 
மணல் வீடு
சரிந்து சரிந்து
விழுகிறது
எழுந்து
விடைபெறுகிறேன்.
இனி
மணல்தான்
என்
சுவடுகள் போலும்"

இதில் 'மணல்வீடு' என்பதை ஊழ்வினையுடனும் 'சுவடுகள்' என்பதை அழுத்தங்களுடனும் பொருத்திப் பார்க்கலாம் அல்லவா? மணல்வீடு சரியாமல் இருப்பதால் அது பிராரப்த தர்மமாக உள்ளது. அதுவே சரிந்து வீழ்ந்ததும் சுவடுகள் போல ஒருவனுக்கு அழுத்தமாகிப் போகிறது.  எழுந்து விடைபெறுபவன் அந்த வெகுஜனக்காரர்களில் ஒருவனாக இருக்கலாம் அல்லவா?
கவிதை என்பது நமது அனுபவங்களுடன் அசைபோடவேண்டும். அவ்வாறு அசைபோடும்போது நமது தரிசன மரபுகளையும் நாம் துணைக்கு அழைத்துப் பார்க்கவேண்டும். அது பற்றிய பரிச்சயம் இல்லாமல் பல தமிழ்க்கவிதைகளை இங்கே அனுபவிக்கவே முடியாது என்பது என் நிலைப்பாடு. இன்று பலர் பொத்தாம் பொதுவாக கவிதை என்பது இப்படி இருக்கும் என்று மேற்கொள்ளும் விமர்சனங்களைப் பார்க்கும் போது அயர்ச்சிதான் உண்டாகிறது. அதற்குள் எவ்விதமான பிரக்ஞைபூர்வமான விடயங்களும் இருப்பதாகத் தெரியவில்லை. கவிதை வாசிப்புப் பற்றி ஜெயமோகன் தன்னுடைய கட்டுரை நூல் ஒன்றில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

"நான் கவிதையைக் கூர்ந்து வாசிப்பேன். முதலில் கவிதையின் ஒட்டுமொத்தமான பொருளையும் சொற்களின் பொருள்களையும் புரிந்துகொள்வேன். உடனே அந்தக்கவிதை என் மூளைக்குத் தெளிவாகி விடுகிறது. அதன்பின் அந்த கவிதையின் அர்த்ததைப்பற்றிக் கவலைப்பட மாட்டேன். அப்படியே கவிதையை வாசிப்பேன். சூயிங்கம் மெல்வது போலக் கவிதையை வாய்க்குள் சொல்லிக்கொண்டே இருப்பேன். பலமுறை. ஒருகட்டத்தில் கவிதை வெறும் மொழியாக மாறிவிடும்.

அந்த வாசிப்பில் எங்கோ அக்கவிதையின் முக்கியமான சில சொற்சேர்க்கைகள் எனக்குள் பதிவாகிவிடும். பாலைநிலத்து விதைகள் போல எனக்குள் புதைந்து கிடக்கும். வாழ்க்கையின் தருணங்களில் எப்போதோ ஏதோ ஒரு துளி நீர் பட்டு சட்டென்று அக்கவிதை எனக்குள் முளைத்தெழுந்து வரும். அது ஒரு பெரும் பரவசம். அப்போது அது அந்தக் கவிஞனின் கவிதை அல்ல, என்னுடைய கவிதை. அந்தக் கவிதை அக்கவிஞனின் அகத்தில் நிகழ்ந்தபோது அவன் எந்த உச்சநிலையில் நின்றானோ அங்கே அப்போது நான் நின்று கொண்டிருப்பேன். அந்த சிகரநுனியில் அவனை நான் ஆரத்தழுவிக்கொள்வேன்"

இது கவிதைவாசிப்புக்கு முன் ஆதாரமாக உள்ள முக்கியமான ஒரு கருத்து. ஒரு கவிஞன் எழுதிய கவிதையை எனது கவிதையாக மாற்றுவது என்பது வாசக நிலையின் ஆத்மபூர்வமான தருணமாகும். இதுதான் வாசிப்பு முதிர்ச்சிக்கும் அடுத்துவரும் கவிதை விமர்சனத்துக்கும் அழுத்தமான பங்களிப்பைச் செய்யும். இதிலிருந்து விலக எத்தணிக்கும்போது கவிதையின் உட்பாகங்களையும் அதன் சமூக தனிமனிதப் பிரக்ஞைகளையும் பூரணமாகப் புசிக்க முடியாது. சரிந்து விழுந்த மணல் வீட்டிலிருந்து விடைபெறுவது மட்டுமே கிடைக்கும். சுவடுகள் மிச்சமாக இருக்காது.


தொடர்புடைய பதிவுகள்.

தேவதச்சனின் கவிதை முகம் 01



00

Comments

Popular Posts