Le Trio Joubran
பலஸ்தீனத்திலும் அரேபிய தேசத்திலும் கருவி இசைக்காகப் பிரபலமாக அறியப்பட்டவர்கள் ஜேப்ரான் சகோதரர்கள். நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுடைய மஜாஸ் (Majaz) மற்றும் தமாஷ் என்ற இரண்டு அல்பத்தையும் கேட்டிருக்கிறேன். Oud என்கிற அரேபியப் பாரம்பரிய இசைக்கருவியின் ஓசைகளால் முழு அல்பத்திலும் நிரம்பியிருந்தது. அதன் ஒலிகளை அழகியல் ரீதியில் அன்று உணரமுடிந்ததே தவிர, அதற்குள் வெளிப்படும் உணர்வுகளை வெறும் யூகத்துடன் விட்டுவிட்டேன். அண்மையில் மஹ்முத் தர்வீஷ் இன் பலஸ்தீன மொழிபெயர்ப்புக் கவிதைகளின் தொகுப்பைப் படித்த பின்னர் இந்த Le Trio Joubran சகோதரர்களின் இசையானது அவர்களது பாரம்பரிய பலஸ்தீனத்தின் குறியீட்டு வெளிப்பாடுதான் என்று கொஞ்சம் புரிந்து கொள்ளமுடிகிறது. அதனை மீண்டும் கேட்கவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்கியது அக்கவிதைகள்.
அநேகமான நாடுகளின் போராட்டங்களை இலக்கியம், வரலாறு மற்றும் சினிமாக்கள் மூலமும்தான் அறிந்திருக்கிறேன். பலஸ்தீனத்தின் போராட்டங்களை அங்குள்ள மக்களின் ஏதோ ஒரு போராட்ட தாகங்களைப் பிறர் உணர்ந்துகொள்ள அவர்கள் இசையையும் ஒரு கருவியாகச் சர்வதேச ரீதியில் பயன்படுத்துகிறார்கள் என்பதுதான் ஜேப்ரான் சகோதரர்களின் சிறப்பு. அது உலகளாவிய இசையாகவும் இருக்கின்றது. முக்கியமான விடயம் இவர்களின் அல்பங்களில் அநேகமானவை Vocal இல்லாத Instrumental சார்ந்தவை. அதில்தான் தாம் சொல்லவந்த விடயத்தை மொழிப் பிரிவினை இன்றிச் சகலருக்கும் புரியவைத்தைவிடலாம் என்று நினைக்கும் புதியதலைமுறை இசை வாத்தியக்காரர்கள்தான் (Oud Masters) இந்த ஜேப்ரான் சகோதரர்கள்.
இவர்களின் இசை புரட்சி செய் என்று பாடவில்லை. யாரையும் உசிப்பிவிடவில்லை. வன்முறைக்கு வழிகோலவில்லை. ஆனால் இவற்றினால் உண்டான விளைவுகளைக் குறியீட்டால் விபரிப்பவை. அதனை நீங்கள் புரிந்து கொள்ள மஹ்மூத் தர்வீஷ் மாதிரியான அந்நிலத்தவர்களின் கவிதைகள் பரிச்சயப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் அம்மண்ணின் அவலங்களை அறிந்திருந்தாலும் சரி. முடிந்தால் ஜேப்ரான் சகோதரர்களைக் கேட்டுப்பாருங்கள். இந்த ஹிப் ஹொப் எல்லாம் அதற்கு முன்னால் எம்மாத்திரம்......!!!!
Comments
Post a Comment