பான் கி மூனின் ருவாண்டா

தம் கட்டிக்கொண்டு அண்மையில் அகரமுதல்வன் எழுதியிருந்த "பான் கி மூனின் ருவாண்டா" கதைகள் தொகுப்பை வாசித்திருந்தேன். மொத்தமாகப் பத்துக் கதைகள் இருந்தது. இரண்டு விதமான காலங்களைக் கதைகள் உள்ளடக்கியது.
1. Post War.
2. Pre War.
இந்த இரண்டின் காலச் சூழலை உள்ளடக்கிய பத்துக் கதைகளில், Post War மனநிலையில் இருந்து எழுதிய கதைகள் அழிவைத் திருத்திக் கொள்ளும் திடமின்றி, Pre War காலத்தைய புலிகளின் வீர தாளங்களை ஞாபகமூட்டி உசுப்புவதாகவும் அமைகின்றது.
பல இடங்களில் புலிகளின் படுகொலைகள் நியாயப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு பக்க நியாயங்கள் கூறப்பட்டுள்ளது. "சங்கிலியன் படை" என்ற கதை அவ்வகையானது. இதிலுள்ள பத்துக்கதைகளில் ஒரே சிறுகதைதான் மிகச்சிறந்த வடிவத்தையும், கதைக்கான ஏனைய வசதிகளையும் பெற்றுள்ளது என்று நினைக்கிறேன்.
அது "முயல் சுருக்கு கண்கள்" என்ற கதை. ஏனைய ஒன்பது கதைகளிலிருந்து மாறுபட்ட கதையாகவே இது உள்ளது. ஏனைய கதைகள் அரசியல் பிரசார உள்ளடக்கம் கொண்டவை. ஆனால் இந்த ஒன்று மிக அற்புதமாக எழுதப்பட்டுள்ளது.
பத்துக் கதைகளின் சுருக்க வகைப்பாடுகளாக;
1. பெயர்- இந்தியாவிலுள்ள ஈழ அகதிகளின் பாலியல் இச்சைகள்.
2. தீபாவளி- 1987 இந்திய ஆக்கிரமிப்புக்காலப் படுகொலைகளும் 2008 வன்னி இடப்பெயர்வும்.
3. கள்ளு- புலம்பெயர் புலியெதிர்ப்பும், புலிகள் கால மண்ணின் பாலியல் அபிலாசைகளும்.
4. சங்கிலியன் படை- தமிழ் மண்ணின் துரோகிகளுக்கான தண்டனை என்ற பெயரில் புலிகள் நிகழ்த்திய களையெடுப்புக்கள்.
5. இவன்- புலிகளின் வன்னியில் குற்றவாளிகளுக்குப் பிராந்தியப் பொறுப்பாளர்களால் வழங்கப்பட்ட நிறுவனப்படுத்தப்படாத தண்டனைகள்.
6. தாழம்பூ- யுத்தக்களமும் ஆண்-பெண் காதல்களும் தனிமை பற்றிய துயரமும்.
7. கரை சேராத மகள்- யுத்தத்தில் பெண்களின் பங்களிப்பும், காணமலாக்கப்பட்டோர், ஊனமுற்றோர் பற்றியதும்.
8. முயல் சுருக்கு கண்கள்- வன்னி வாழ்க்கையையும் இளைஞர் யுவதிகளிடமுள்ள காதல் காமம் தொடர்பான சித்திரமும்.
9. தந்தம்- யுத்தத்துக்குப் பிந்தைய முன்னாள் போராளிகளின் காட்டிக்கொடுப்புகளும், புதுமாத்தளன் பேரழிவும்.
10. குடா நாட்டில் வைத்தியர் கடத்தப்பட்டார்.
இன்னும் தமிழ்த்தேசியம்/ தமிழீழம் என்பது காட்டுமிராண்டித் தனமான கருத்தியல்களைத் தன்னகத்தே கொண்டியங்கிவருகிறது என்பதற்கு இக்கதைகளை எழுதிய அகரமுதல்வன் சாட்சி. புலிகள் காலத்தில் புலிகள் செய்த படுகொலைகள் பலவற்றை நியாயப்படுத்தியுள்ளார். அத்துடன் தமிழீழம் என்பது இனி எக்காலத்திலும் சாத்தியப்படாத ஒன்று, அதை அடைவதற்கு யாருடன் கப்பல் கட்டும் முஸ்தீபுகளில் அகரமுதல்வன் இறங்கியுள்ளார் என்பது தெரியவில்லை. அது அரவிந்தன் நீலகண்டன் மாதிரியான மோடி பக்தனுடனும் இருக்கலாம்.
சாத்தியப்படாத சிந்தனைகளுடன் இயங்கும் இலக்கிய வாதிகள் தன்னிலை உணரவில்லை என்பதே தெரிகிறது. தற்காலத்தில் தமிழீழம் என்பதில் எமக்கு உடன்பாடில்லை. அதற்காகப் போராடிய மாவீரர்களையும் மரணித்த பிரபாகரனையும் நினைவு கூர்தலும் மரியாதை அளித்தலும் ஒன்றே எம்முன்னுள்ள பணி. அவர்களது தியாகங்களைக் காரணங்காட்டித் தமிழீழம் அடையும் முட்டாள்தனமான பிரயத்தனங்களில் ஈடுபடாதிருப்பது ஒன்றே இருத்தலுக்கான வழி!!!!!
அது ஷோபா சக்தி சொல்வது போலவோ, அகரமுதல்வன் சொல்வது போலவோ இல்லை. அதையும் தாண்டிய ஒரு ஐக்கியம். விளங்கச் சொன்னால் ராஜ ராஜ சோழனின் வீரப்பிரதாபங்களைப் புகழும் நாம் அவர் கைப்பற்றிய தென்கிழக்காசிய நாடுகளை மீளவும் கைப்பற்றலாம் என நினைப்பது எப்படி மூடத்தனமோ, அந்த மூடத்தனம் தான் தமிழீழம் பற்றிய அகரமுதல்வனின் சிந்தனைகளும் தமிழீழம் மலரும் என்ற அற்ப ஆசைகளும்.

Comments

Popular Posts