ஆண்-பெண்
இன்னும் திருமணமாகாத பெண்கள் இதனைப் படித்து ஆணாதிக்கத்துக்கு எதிரான தமது நிலைப்பாட்டை எதிர் மனநிலையுடன் அணுகலாம். திருமணமான பெண்கள் படித்தால் இருக்கின்ற கணவன் தமக்குச் செய்வது அப்பட்டமான ஆணாதிக்க செயற்பாடுதான் என்று அவனை நோக்கித் தாக்குதல் கணைகள் தொடுக்கப்பட்டாலும் வியப்பில்லை. டைவர்ஸ் செய்து விட்டுத் தனியே இருந்தால் என்ன என்ற "புரட்சிகர" சிந்தனைகள் பெண்களுக்காகவே கூறப்படுகிறது. ஆக மொத்தத்தில் பெண்கள் கட்டாயம் படிக்கவேண்டிய புத்தகம். ஆண்கள் படித்துத் தம்மைத் தாமே திருத்திக் கொள்ளவும் புத்தகம் சொல்கிறது.
மேலும் இதிலுள்ள பதினாறு கதைகளும் பெண்களையும், குடும்பத்தையும் பற்றிய அவர்களது நியாயங்களைச் சொல்கிறது. இதில் ஒரு கதை கூட எனக்குப் பிடிக்காமல் போனதுதான் ஆச்சரியம்தான். எல்லாம் சீரியல்கள் போலவும் பெண்ணியப் பிரச்சாரம் போலவும் கடுப்பேத்தியபடி உள்ளதுதான் இதற்குப் பிரதான காரணம்.
"அம்மா ஒரு கொலை செய்தாள்", "காட்டில் ஒரு மான்" இந்த இரண்டு கதைகளைத் தவிர வேறெதுவும் அங்கு சரியான புரிதலில் இல்லை. இவையிரண்டும் தமிழ்ச்சிறுகதையில் முக்கியமானவை. மிகுதி எல்லாம் தன்னிலை சார்ந்த விவாதங்களை அபத்தமாகப் பொதுவில் கொண்டுவந்து ஒட்டுமொத்தப் பெண்களுக்கான இழுக்கு/பிரச்சனை இது என்று வெற்றுப் பிரச்சாரம் செய்வதாகவே தோன்றுகிறது.
பெண்களுக்கான அம்பையின் தீர்வுகள் என்பது, பெண்கள் ஆண்களில் இருந்து விலகி இருப்பதும், இதர உறவுகள் புரியாமல் தவிர்ப்பதுமேயாகும். இது என்ன வகையான எழுத்து என்றால் அது பிரச்சார யுக்தி தான்.
கணவன், மனைவிக்கு வந்த கடிதத்தை மனைவிக்கு எதிரிலேயே படித்தால், யாராவது கணவனை விட்டுப் போக வேண்டும் என்று நினைப்பார்களா?. ஆம்! அப்படி நினைப்பதுதான் அம்பையின் எழுத்து.
(குறிப்பு: பாரதியார், ஜெயகாந்தன் போன்றவர்கள் பெண்களை அடிமையாகக் கருதும் மனநிலையில் இருந்து மீளாதவர்கள் என்று ஒரு பேட்டியில் அம்பை கூறியிருந்தார். அப்போதுதான் புரிந்து கொண்டேன் இவர் ஒரு பெண்ணியப் பிரச்சாரகி என்று. பெண்ணியம், தலித்தியம், மதப்பற்று, திராவிடம், தேசியம், இனப்பற்று எல்லாமே ஒரு பம்மாத்துதான். எதுவுமே மனித மீட்சிக்குக் கொண்டு சேர்ப்பவையோ சேர்த்தவையோ அல்ல. தற்காலிகமாக இவற்றைப் போற்றி வாழவேண்டிய கட்டாயத்தில் அனைவரும் இருக்கிறோம். அதனால் இவற்றைப் பேசுகிறோம். இப்படியும் எழுதுகிறோம். மற்றபடி இந்தப் புத்தகம் சுத்தமான வேஸ்ட்.)
ஜெயகாந்தன் பெண்களையும் சமூகத்தையும் சேர்த்துச் சிந்தித்தார். அம்பை பெண்கள் வரித்துக்கொண்ட சூழலை மட்டுமே சிந்தித்து ஆண்-பெண் பிரிவினையை விரும்பியவர். அதில் முற்றும் பிரசார யுக்திதான் தெரிகிறது. தீர்வுகள் இருப்பதாகத் தெரிவது கற்பிதம்தான். பெண் தனித்திருப்பதே மோட்சம் என்று கருதும் அம்பை, ஜெயகாந்தனின் ஆண்-பெண் ஒருங்கிணைவுக்குள் என்றுமே வரமுடியாது.
Comments
Post a Comment