ஈழம் பற்றிய அரசியல்

ஈழம் பற்றிய அரசியல் விவகாரங்களுக்கு வெளியிலிருந்து எழுதும் தமிழக எழுத்தாளர்களில், ஜெயமோகன், எஸ்.வி ராஜதுரை போன்றவர்களின் புரிதலை விட யமுனா ராஜேந்திரனின் புரிதல் நம்பகமானது என்று இந்த நூலின் மூலம் அறியமுடியும். இந்திய ஞானத்தைக்கொண்டு ஈழம் பற்றிய ஜெயமோகனின் புரிதல் கட்டுரைகள் மேலோட்டமானவை. அல்லது அது வெறும் இந்தியப் பெருந்தேசிய அர்த்தத்தில் இருந்து ஈழ அரசியலை அணுகுபவை என்றும் கருதலாம்.
ஆனால் இந்நூலின் கட்டுரைகளில் ராஜேந்திரன் தான் சார்ந்துள்ள மார்க்சீயக் கோட்பாட்டு நிலைகளையும் விமர்சிப்பதுடன், ஈழம் பற்றிய சகலவிதமான அரசியல் நியாய- அநியாயங்களையும் விமர்சனத்துக்கு உட்படுத்தத் தவறவில்லை. விடுதலைப் புலிகளை இந்த அளவுக்கு விமர்சன நோக்குடனும் நியாயப் பாடுகளுடனும் விமர்சித்த கட்டுரைகள் தமிழ் எழுத்துலகில் குறைவுதான். புலிகளின் சரி-தவறுகள் எல்லாமே பட்டியலிடப்படுகின்றன. மிக முக்கியமாக உலகப் போராட்ட இயக்கங்களின் வரலாறுகளுடனும் கோட்பாடுகளுடனும் விரிவாக ஆராய்கிறது, பின் சோவியத் போக்குகளையும், பின் செப்டம்பர் சம்பவங்களையும் புலிகள் புரிந்து கொள்ளாமையே அவர்களது வீழ்ச்சிக்கு பிரதான காரணமானது என்பது கட்டுரைகள் தோறும் கொணர்ந்துள்ளார்.
2009 இன் பின்னர் தமிழில் எழுதப்பட்ட முக்கியமான அரசியல் விமர்சனக் கட்டுரைகளின் தொகுப்பு நூலாக இதனைக் கருதலாம். 12 அத்தியாயங்களைக் கொண்டு தொகுக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் எதிலும் சார்புநிலை எடுக்காமை ஒரு ஐரோப்பிய எழுத்தாளன் ஈழத்தை அணுகிக் கட்டுரைகள் எழுதினால் எப்படி நியாயப்பாடுகள் இருக்குமோ, அதை தவறாமல் அனைத்து அத்தியாயங்களிலும் காணலாம்.
நோம் சாம்ஸ்கி என்ற எழுத்தாளர் குர்திஷ் போராட்டத்தை ஆதரித்து ஈழப்போராட்டம் பற்றிப் பேசாது விட்டது, FARC கிளர்ச்சியாளர்களின் சமகால ஆயுதப்போராட்டச் சாத்தியமின்மைகள், தமிழ் அறிவுஜீவிகளின் மாறுபட்ட கருத்துக்கள், என்று பல விடயங்கள் பலகோணத்தில் ஆராயப்பட்டுள்ளது. நான் வாசித்த வரையிலும் இதன் எந்த அத்தியாயங்களும் தவிர்க்கவியலாத முக்கியத்துவம் மிக்கவைதான்.
ஆயுதப்போராட்டங்கள் இனிச் சாத்தியமில்லை, தமிழ்த்தேசியம் என்றபெயரில் செய்த தவறுகள் திருத்தப்பவேண்டும், உலகமயமாதலின் விடயப்பரப்பைத் தமிழர்கள் புரிந்துகொள்ள வேண்டும், என்பதே நூலின் முக்கியமான கருத்து. எங்கள் பிழைகளைத் துல்லியமாக அறியவும், நமது அரசியலின் போதாமைகளை நிறைக்கவும் இது போன்ற நூல்களை நம்மவர்களிடையே அறிமுகப்படுத்துவதே நமது அரசியலைச் சரியாக ஆற்றுப்படுத்தும். அல்லது ஆரோக்கியமான விவாதத்துக்குக் கொண்டு செல்லும்.
====
#Must_Read_Book.

Comments

Popular Posts