எழுத்தாளர் எஸ்.ரா நேர்காணல் :எனது கேள்வி

எழுத்தாளர் எஸ்.ராவிடம் சுருதி டிவி நேர்காணலுக்காக ஈழ இலக்கியம் பற்றி ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்தக் கலந்துரையாடலில் அவரளித்த பதில்களில் நிறையவே உடன்பாடுகளுள்ளன. ஒரு சில மறுப்புக்களும் இருக்கின்றன. மேலதிகமாக சில தகவல்களை அ.முத்துகிருஷ்ணனும் இறுதியில் பகிர்ந்திருந்தார்.
கேள்வியும் பதிலும் கீழேயுள்ளது;
1.எனது கேள்வி: தமிழகப் படைப்பிலக்கியம்- ஈழப் படைப்பிலக்கியம் இவை இரண்டுக்கும் இடையில் உள்ள ஒற்றுமை வேற்றுமை என்று நீங்கள் கருதுவது என்ன?. ஈழ இலக்கியம் தமிழக இலக்கியத்தின் பின்தொடர்ச்சிதான் என்று கருதுகிறீர்களா? இல்லையென்றால், ஈழத்து இலக்கியங்களின் தனித்துவம் என்று எதனைக் கூறுவீர்கள்?.
எஸ்.ரா பதில்: ஈழத்து இலக்கியம் எப்போதுமே தனித்துவமுடையதுதான். தமிழில் எழுதப்பட்டிருந்தாலும் கூட ஈழ இலக்கியத்துக்கென்று தனி மரபு இருக்கிறது. தனித்துவம் இருக்கிறது. தனி அடையாளம் இருக்கிறது. காத்திரமான படைப்பாளிகள் எல்லாக் காலகட்டத்திலும் எழுதி வருகிறார்கள். இன்றைக்கு அதிலும் கூறிப்பாக சமகாலத் தமிழிலக்கியத்தில் ஈழ இலக்கியம் என்பது அதனுடைய ஒரு தனித்துவமான முகம் என்றே கூறுவேன். தமிழிலக்கியத்தை தமிழகத்தை அவர்கள் பின்தொடரவேண்டும் என்ற ஒரு அவசியமும் இல்லை. ஆங்கில மொழியில் எழுதப்படக்கூடிய இலக்கியங்கள் வெவ்வேறு தேசங்களில் எழுதப்பட்டாலும் ஆங்கிலத்தில் எழுதப்படுவது தான். ஆனால் அமெரிக்க இலக்கியத்துக்கென்று தனி முகமுண்டு. அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, என்று எழுதப்படும் இலக்கியங்களுக்குத் தனிமுகமுண்டு. அதுபோலத் தமிழ் இலக்கியம் தமிழகத்தில் எழுதப்படுவதற்கென்று ஒரு தனிமுகமுண்டு. ஈழத்துக்கு என்று அதற்கான அசலான வலியோடு, வாழ்க்கை அனுபத்தைக்கொண்டு , அசலான உணர்வுகளோடு பதியப்பட்டதாகவுள்ளது.
குறிப்பாக இன்றைக்கு ஈழத்தில் இருந்து எழுதும் இளம் படைப்பாளிகள் மிகுந்த நம்பிக்கையூட்டக்கூடிய திறமையான படைப்பாளிகளாக உள்ளனர். சர்வதேச அரங்கில் அவர்கள் மிக முக்கியமான எழுத்தாளர்களாக வருவார்கள். அந்த நேரத்தில் ஒரு சகோதரன் என்ற முறையில் தமிழிலக்கியத்தின் சார்பாக நான் அவர்களுக்கு வாஞ்சையோடு என் அன்பையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். நாம் இணைந்து செல்லக்கூடிய பறவைகளைப்போல இணைந்து பறக்கலாம். தமிழ்நாட்டினுடைய இலக்கியத்துக்குப் பின்னால்தான் ஈழ இலக்கியம் பின்தொடரவேண்டும் என்றொரு அவசியமும் இல்லை. நாம் ஒரு வானத்தில் பறக்கும் பறவைகள். இணைந்து பறப்போம். இணைந்து பறப்பதன் வழியாக வேறு வேறு உயரங்களை நாம் தொடுவோம் என்பதே உண்மை.
===
தமிழ் மனம். இங்லிஷ் மனம் என்று கதையளக்கும் கார்ப்பரேட் விசுவாசிகளுக்காகவே இக்கேள்வியை எஸ்.ராவிடம் கேட்டிருந்தேன். எஸ்.ராவின் பதில் கிட்டத்தட்ட ஈழ இலக்கியம் அதற்கான தனித்துவத்துடன் இயங்குவதாகக் கூறியது ஓரளவு திருப்திதான். பெரும் எழுத்தாளர்களால் நம் நிலம் சார்ந்த படைப்பாளிகள் தரப்படுத்தப்படும் போது அதில் கிடைக்கும் மகிழ்வே வேறு. ஆனால் நல்ல இலக்கியமென்று பாராட்டப்படும் ஈழத்தின் மொக்கையான இலக்கியங்கள், தொடர்ந்து கராராக விமர்சிக்கப்படுவது ஒன்றே இலக்கியத்தின் தரத்தை மேலும் உயர்த்தும் என்று நினைக்கிறேன்.

Comments

Popular Posts