பயணம் எனும் வாழ்வு
"பயணம் என்பது நமக்கு முழு விழிப்பு இருந்தாக வேண்டிய தருணம். ஒவ்வொரு சிறு அனுபவமும் நினைவில் படிந்து நெடுநாள் நீடிக்கவேண்டும். ஒரு சிறந்த நூலைப் படிப்பது போல, ஓர் அரிய கலை நிகழ்வில் அமர்ந்திருப்பது போல, நமது புலன்களும் எண்ணங்களும் உச்சத்தில் இருந்தாக வேண்டும்"
-ஜெயமோகன். (முகங்களின் தேசம்)
அடம்பன்
பயணம் போல என் நிகழ்கால சம்பவ வெளிகளில் கிளர்ச்சியை ஏற்படுத்துவது எதுவுமில்லை என்றே கூறுவேன். பயணம் என்பது உள்ளூர ஒரு நதியை என்னுள் பரப்பிப் பாயவிடுகிறது. அந்த நதி கடலைச் சேராமல்ஒரு பெரிய வட்டத்தை இட்டு ஓடித்திரிகிறது. கிட்டத்தட்ட நமக்கு வெளிச்சம் அளிக்கும் சூரியன் போன்றதான வட்டம் அது. என்னால் இந்தப் பயணத்தின் ஒவ்வொரு கணங்களையும் அபூர்வ அனுபவத் தருணங்களாக மாற்ற முடிகிறது. எப்படி என்று கேட்டால் அதற்கு என்னும் தானியங்கியாக வந்து சேரும் அனுபவங்களையே கூறுவேன்.
25/07/2020 அன்று ஒரு பயணத்தைத் தனியே மேற்கொள்ள காலையில் எழுந்து யோசித்துவிட்டு திட்டமின்றி பைக்கில் கமராவுடன் பயணமானேன். இப்போது பயணத்தில் நண்பர்கள் யாரையும் அழைப்பதில்லை. அதற்கு சில காரணங்கள் உள்ளது. ஒன்று நேரம். குறித்த நேரத்துக்கு அவர்களால் வரமுடியாமை. இது பயணத்தில் ஏற்படும் முக்கிய தடங்கல். அடுத்தது பயணத்தை ஒரு வேடிக்கையான காணாததை மட்டுமே காண வேண்டியதாக நினைக்கும் மனநிலையும் குறித்த நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்ற அவர்களின் அவாவும். இவர்களுடன் பயணிப்பதில் எந்தத் தரிசனமும் எமக்குள் ஏற்படப்போவதில்லை. பயணம் என்பது இவர்களுக்கு ஒரு சினிமா பார்ப்பது போன்றது. ஆனால் எனக்கு அது ஒரு புத்தகம் வாசிப்பது போல இருக்க வேண்டும். ஆகையால் அண்மைய காலங்களில் தனியாகவே பயணங்களை மேற்கொள்ள வேண்டும் என்ற பிரயாசை என்னுள் ஏற்பட்டுள்ளது. அதனையே இப்போது முன்னெடுக்கின்றேன்.
சென்ற வருடம் மல்லாவி- துணுக்காய் வழியில் பூநகரி சென்று அங்கிருந்து மன்னார் வழியாக வீடு வந்தது ஞாபகத்தை மூட்டியது. இன்றும் அப்படியே செல்லலாம் என்ற திட்டத்தை காலையில் பைக் A9 வீதியின் பாதி தூரம் வந்ததும் திட்டம் மனதில் எழுந்தது. ஆனால் இப்போதைய பயணத்தில் சிறு மாறுதல். கிளிநொச்சி பரந்தன் வழியாக முட்கொம்பன் சென்று பூநகரி- மன்னார்- வவுனியா சேர்வது என்பதே சடுதியான திட்டம்.
2009 க்கு முந்தைய ரணில்- சந்திரிக்கா காலத்தில் ஏ9 வீதியால் யாழ்ப்பாணம் செல்லும் போது வீதிகள் மிகவும் சேதமடைந்து காணப்படும். அப்போது எமது வடபகுதிக்கு கார்ப்பட் அறிமுகமாகி இருக்கவில்லை. இப்போது போல மின்சாரம் கூட இல்லை. செம்மண் புழுதிகளும் கிடங்குகளும் என்றே இருக்கும். ஒரு புறம் இராணுவ மற்றும் புலிகளின் வீதித்தடை பரிசோதனைகள் மறுபுறம் அச்சம் என்றுதான் செல்லவேண்டும். யாரும் பயணம் போக வேண்டும் என்று அப்போது செல்வதில்லை. யாதேனும் தவிர்க்கமுடியாத முக்கிய காரணங்களுக்காகத் தான் சிங்கம் மற்றும் புலியின் வீதியால் பயணிப்பர். எனக்கு அப்போது பதின் மூன்று வயது. ஜெயசிக்குறு என்ற பெருஞ்சமர் முடிந்து அய்ந்து வருடங்கள் ஆகியிருந்தது. ஜெயசிக்குறு என்பதன் தமிழ் அர்த்தம் வெற்றி நிச்சயம். புலிகளை மொத்தமாக ஒடுக்க என்று அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வலிந்த தாக்குதல் முயற்சி அல்லது முற்றுகை ஏற்பாடு என்றும் கூறலாம். அந்நேரத்தில் எனக்கு ஆறு வயதாகி இருந்தது. எனக்கு அந்த வயதில் ஞாபகம் இருப்பது நாங்கள் இப்போது இருக்கும் இடத்தை விட்டு இடம்பெயர்ந்து புளியங்குளம் சென்றது. அங்கு என் தாயாரின் இரண்டு கால்களிலும் இராணுவ உலங்கு வானூர்தி மேற்கொண்ட தாக்குதலில் கால்கள் இரண்டும் ஊறமுற்றது. அடுத்து நாம் இடம்பெயரும்போது எம் மீதாக மிக அண்மித்த உயரத்தில் பறந்து செல்லும் ஹெலிகொப்டர்கள்.
அப்போது நமது இடங்களில் செல்போன் கோபுரங்கள் இருப்பதில்லை. இருப்பதிலேயே உயரமான வானளாவிய பொருள் அதுதானே. அதனாலும் புலிகளின் தாக்குதலுக்கு ஆளாகக் கூடாது என்ற நோக்குடனும் அப்போது ஹெலிகள் பதிவாகப் பறந்து செல்லும்.
அப்போது RoundUp என்பது இங்கு பிரபலம். தினமும் பல தமிழ் இளைஞர்கள் தலையாட்டிகளால் இழுத்துச் செல்லப்படுவர். புலிகள் ஆட்சேர்ப்பு என்ற பெயரில் எத்தனை தமிழ் இளைஞர்களின் வாழ்க்கையில் விளையாடினார்களோ அதைவிட அதிகமாக இராணுவம் தமிழ் மக்களை அழிப்பதில் தெளிவாகவே இருந்தது. இரண்டு தரப்பும் தீவிரமாக மோதிக்கொண்டு ஒரு தரப்பு முழுதுமாகத் தோற்ற போது எனது பதினெட்டு வயதை நான் எட்டியிருந்தேன்.
அவற்றை இன்றைய பயணத்தில் எண்ணிப் பார்க்கிறேன். ஆறு மணிக்குப் பிறகு ஊரை விட்டு வெளியேற முடியாது. இராணுவ மிலேச்சத்தனம் பகலில் தலைவிரித்தாடியது என்றால் இரவில் அது சலங்கை கட்டி ஆடத் தொடங்கியது. தமிழ்த் தேசியம் மற்றும் போராட்டம் பற்றிய எனது பார்வை காலகதியிலும் கற்ற வழியிலும் அனுபவ வெளியிலும் மாறிய போதும் இராணுவ அடக்குமுறைகள் மற்றும் புலிகளின் அராஜகங்கள் பற்றியும் எப்போதும் ஞாபகமிருக்கும்.
00
பூநகரி-பரந்தன் வீதியில் ஆடி மாதத்தில் பைக்கில் செல்வதில் உள்ள சௌகரியம் யாதெனில் அப்போதுதான் அங்கு சிறுபோக சூடடிப்பு (அறுவடை) ஆரம்பமாகி இருக்கும். வயல் வாசம் மூக்கையும் மனதையும் பரபரப்பாக்கும். அதேபோல அசௌகரியம் ஒன்றும் உள்ளது. கடும் காற்று தொடர்ந்து வீசிக்கொண்டு இருக்கும். கடற் காற்றும், தென்றலும் சேர்ந்து வீசுவதால் ஒரு தூக்க நிலைக்கு மனம் சென்று மீளும். அதே போல ஒரு வறன்ட பூமியை சில இடங்கள் நெடுகிலும் காணவேண்டி வரும். இவ்வீதியால் மார்கழி மற்றும் தை மாதங்களில் செல்வது எப்போதும் உவப்பான ஒன்று.
இங்குள்ள வயல் வெளிகளில் பனைமரங்கள் செறிவாக உள்ளன. ஒரு சில இடங்களில் பனையினை அழிக்க அதன் குருத்துக்குள் மண்ணெண்னெய் ஊற்றிவிடுவது உண்டு. பனை இரண்டு மாதங்களில் மொட்டையடித்து தனித் தனியே நிற்கும். தமிழ் வரலாற்றில் தொடர்ச்சியான எழுத்துப்பதிவு கொண்ட மரம் என்று பனையைக் கூறவேண்டும். பனையின் நீள்கரம் என்று கம்பரும் குரும்பனை ஈன்குலை ஓத்தூர் என்று சம்பந்தரும் குறிப்பிடுவர். திருப்பனங்காடு, திருப்பனந்தாள், திருப்பனையூர் என்று தமிழகத்தில் உள்ள ஆறு தலங்களில் பனை தலவிருட்சமாக உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் 800க்கு மேற்பட்ட பயன்பாடுகளையும், நூற்றுக்க மேற்பட்ட பெயர்களையும் பனைமரம் கொண்டுள்ளது என்று ஆ.சிவசுப்பிரமணியம் குறிப்பிடுகிறார். முற்றிய பனைகளே ஆரம்ப காலங்களில் தச்சு வேலைக்கு வெட்டப்பட்டன. ஆனால் இன்று கட்டிடம் கட்டும் பணிக்காக அதிகமான பனைகள் இங்கே வெட்டப்படுகின்றன. பனைமரங்கள் வளர்ந்துள்ள பகுதிகளில் நிலத்தை மழைக்காலத்துக்கு முன்பு உழுதுவிடுவார்கள். பனைமரத்தின் வேர்களில் மேலோட்டமானவை அறுபட்டு புதிய வேர்கள் உருவாகும். மழைபெய்யும்போது மழைநீர் ஓடிச்செல்லாமல் உழுத பகுதிகளில் தேங்கி நின்று நிலத்தின் ஈரப்பதத்தைப் பனை காக்கும். இந்த வழக்கம் சில இடங்களில் பின்பற்றப்படுவதை அவதானிக்க முடிந்தது. ஆனால் இன்று பனையின் நிலையோ வேறு.
பூநகரி
சென்ற ஆண்டு போன பூநகரிக் கோட்டைக்குச் செல்லாமலும் மண்ணித்தலை சிவன் கோயிலுக்குச் செல்லாமலும் நேரே சங்குப்பிட்டி பாலத்துக்கு முன்னுள்ள வீதிகளில் நின்றிருந்தேன். பெட்டைக் கடலைப் பிளந்து கொண்டு யாழ்ப்பாணத்தையும் கிளிநொச்சியையும் இணைக்கும் பாலமாகவும் வீதியாகவும் இருந்த இடத்தில் நான் கலந்து நின்றேன். ஒப்புயர்வற்ற கடலின் ஓய்விடம் என்று அதனை நினைத்திருந்தேன். அடர்வெயிலில் கூட அவ்விடம் சூடாகவில்லை. காற்று களிப்புடன் வீசிக்கொண்டு இருந்தது. பெரும் வாகனங்களும், சிறு வண்டிகளும், பல பறவைகளும் சென்று கொண்டிருந்தன. கடலின் அலைக்கு அரிக்கக் கூடாது என்று பறிக்கப்பட்ட கருங்கற்கள் மீது கால் வைத்து கடலையும் சிறு படகுகளையும் பார்த்தபடி இருந்தேன். காற்று நீரை உசுப்பிவிட்டு அலைகளாக அடித்துக் கொண்டே இருந்தது. வீதியால் உழவு இயந்திரப் பெட்டிகளில் பன்னிரண்டு அடி உயரத்துக்கு நிரப்பப்பட்ட வைக்கோல்களைக் கொண்டு யாழ்ப்பாணம் செல்லும் ட்ரக்டர்களைக் காணமுடிந்தது. வண்டியிலிருந்த வைக்கோல்கள் சிதறி கடலிலும் வீதியிலும் வீழ்ந்து கொண்டிருந்தன. கடல் உயிரையும் ஜடத்தையும் ஒருசேர அள்ளி அணைக்கும் விந்தை கொண்டது. வைக்கோலை ஆழத்துக்குக் கொண்டு சென்றது. வீதியை அண்ணாந்து பார்த்தால் இருமருங்கும் பிரம்மாண்ட மின்விளக்குகள். இரவுகளில் ஒளிரும்போது திருவிழா போல இருக்கும்.இந்த இடங்களுக்கு அண்மையில் இருக்கும் காதலர்களும் ரசனைக்காரர்களும் எவ்வளவு கொடுத்து வைத்தவர்கள் என்ற எண்ணினேன். தனித்த படகில் மூன்று வெண் கொக்குகள் உப்பு நீரை அலகால் அளாவியபடியும் கடல்நீரில் இறங்கி காலை நனைத்தபடியும் இருந்தன. காற்றையும் நீரையும் பறவைகளையும் தரிசித்து திரும்பி மன்னார் நோக்கிச் செல்ல A32 வீதியில் பயணித்தேன்.
00
சாலை என்பது மனிதன் காட்டை உரிமை கொள்ளச் செய்யும் முதன்மையான முயற்சி என்று கூறுவார்கள். அதனைக் காண நான் இவ்வீதியை உதாரணமாகச் சொல்வேன். ஆதியிலே அனைத்து வீதிகளும் காடாகவே இருந்தன என்பது வரலாறு. ஏ9 வீதியின் இருமருங்கும் உள்ள பல நூற்றாண்டுகளாக முற்றி விளைந்துள்ள மரங்களே சான்று. சாலைகள் பல உப சாலைகளை உருவாக்கி காடுகளைத் தன்வசப்படுத்துகின்றன. பின்னர் மெதுவாக மக்கள் அங்கே நுழைகிறார்கள். உண்மையில் சாலைகள் மக்களின் நண்பன் தான் ஆன போதும் இயற்கையின் காடுகளின் முதன்மை எதிரி.
முழங்காவில் பகுதியில் சென்று கொண்டிருந்தேன். ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் யாரோ இரண்டு பக்கங்களும் கொன்றை மரங்களை நாட்டியுள்ளார்கள். மேலும் பல முதிய கொன்றைகள் அங்கே பூத்து ஓயும் நாட்களுக்காகக் காத்து நின்றன. மலர்களில் என்றும் என் பிரியத்துக்குரியது கொன்றை. தென்னாடுடைய சிவனுக்கும் அது இஸ்ரம் 'மின்னார் செஞ்சடைமேல் மிளிர் கொன்றை அணிந்தவனே' என்று பக்தியிலக்கியப் பாடல்கள் கூறுகின்றன. சங்ககாலம் தொட்டு இன்று வரைக்கும் கொன்றை பற்றிப் பாடாத ஆட்களே இல்லை. பல எழுத்தாளர்கள் தமது இலக்கியங்களில் இதனை உசத்திக் கூறியுள்ளனர். சினிமாப்பாடல்களில் கூட 'கொன்றைப்பூவில் குளித்த மஞ்சள்' என்று பாடப்பட்டுள்ளது.
பொன் சொரியும் காலம் என்று கொன்றைகள் பூக்கும் காலத்தைக் கூறவேண்டும். முல்லை மற்றும் மருத நிலங்களில்தான் இதனை அதிகம் காணமுடியும். வளர்ந்து வருவதற்கு ஏனைய மரங்களின் அனுசரணை இதற்குத் தேவை.இவற்றை விதைபோட்டு வளர்த்து எடுப்பது கடினம். ஈரப்பதம் தேவை. ஒரு வருடம் வளர்த்து விட்டால் பின்னர் மழை மட்டுமே போதும். பத்தாண்டுகளுக்குள் பொன் பூச் சொரியும். இந்தப் பயணத்தில் உனக்கு என்ன லாபம் கிடைக்கும் என்று வாசிப்பு அறிவற்ற நண்பர்கள் கேட்பார்கள் அதற்கு விடை இந்தக் கொன்றை பூக்கிறது அல்லவா, அதன் பூவை விற்க முடியாது அதனை வேறெதுவும் செய்யமுடியாது சில மருத்துவப்பயன்கள் மட்டுமே உள்ளன.அதுதான் எனக்கும் இப்பயணங்களின் மூலம் கிடைக்கிறது என்பேன். பூத்து ஓயவுள்ளதால் தன் மொத்த பலத்தையும் கொன்றைப பூக்கள் இப்போது காட்டுகின்றன. அவ்வளவு வாசம் நாசியை நகரவிடாமல் அவ்விடமே வைத்திருக்கவல்லது. பச்சை மரங்களுக்கு நடுவே மஞ்சள் பூக்கள். அழகான பெண் பச்சைப் பாவாடையும் மஞ்சள் சட்டையும் அணிந்திருப்பது போன்ற சன்னதம் என் மனதுள் நிறைந்தாழ்ந்தது.
இடையில் இருந்த சர்பத் கடையில் வண்டியை நிறுத்தினேன். சுற்றியும் காடு. சாலை மட்டுமே அந்தக் கடைக்கான வியாபாரம். இப்போது பாடசாலைகள் மூடப்பட்டு உள்ளதால் பாடசாலை மாணவர்களைக் கடை நடாத்த பெற்றோர் வீதிகளில் விட்டுள்ளனர். தென்னங் கிடுகால் வேயப்பட்ட குச்சுக்கடை. குளிர்கட்டியும் சில பழங்களும் அதில் இருந்தன. "சர்பத்" என்று விளம்பரப்பலகை இருந்தது. பழச்சாறு என்றாலும், சர்பத் என்றாலும் என் முதல் தெரிவு அன்னாசி தான். அதன் சுவையே தனியானது. எந்தப் பழக் கலவைக்கும் அன்னாசி இடும்போது அதன் வாசமும் சுவையும் பலபுலன்களுக்கு இன்பமளிக்கும். அந்தக் கடையில் இருந்தது பப்பாசி மட்டும்தான். சரி என்று இரண்டு நிமிடங்களில் சர்பத் செய்து அந்த இளைஞன் தந்தான். எஸென்ஸ், பாற்கலவை, குளிர்கட்டி இவை இணைந்து பப்பாளியின் சுவையை ஓரங்கட்டியது. இருந்தாலும் பாதியைக் குடித்துவிட்டு மீதியை நாய் நீரருந்தும் சட்டியில் ஊற்றிவிட்டுக் கிளம்பினேன். கடுங்கோடைக்கு அழுக்கு நீரும் இன்சுவையாகும். அதுபோலத்தான் இந்த சர்பத்தை நினைத்துக் கொண்டேன்.
இந்த வீதியின் இருமருங்கும் கடந்த காலங்களில் கடும் யுத்தங்கள் நிகழ்ந்துள்ளது. புலிகளின் காலாட்படை வல்லாதிக்கம் இங்கு அதிகமாக இருந்தது. ஒருபுறம் கடல் இருந்ததால் இதன் முக்கியத்துவம் வழங்கல் பகுதியாக உபயோகிக்கப்பட்டது. அத்துடன் கடற்புலிகளின் கோட்டையாகவும் அருகில் தமிழ்நாடு இருந்ததாலும் இவ்விடங்கள் இராணுவத்தால் கடும் கண்காணிப்புக்கு உள்ளாகும் பகுதியாகவுள்ளது. பாரிய இராணுவத் தளங்கள் இங்கு அமைக்கப்பட்டு கண்காணிப்பு நடைபெறுகிறது. அத்துடன் மக்களின் இயல்பு வாழ்க்கையில் அந்தக் கண்காணிப்பு தடங்கலாக இருக்கவில்லை.
அங்கிருந்து வெள்ளாங்குளம், இலுப்பைக்கடவை, விடத்தல் தீவு என்று கடந்து வந்து கொண்டிருந்தேன். வெள்ளாங்குளம் தாண்டியதும் மன்னாரின் வறண்ட பூமி எம்மை அழைத்து நிற்கிறது. வெள்ளாங்குளத்தில் இருந்து மாங்குளம் வழியாக உள்ள 40Km நீளமான இருமருங்கு நிலமும் மிக வளமான பகுதி. நான் வன்னி நிலத்தில் பயணங்கள் செய்தபோது அதிக வளமான ஒரு நிலத்தை துணுக்காய், பனங்காமம், மல்லாவி பகுதிகளில்தான் கண்டுள்ளேன். இப்படி வளமான நிலம் எங்கும் இல்லை என்றே நினைக்கிறேன். என்னுடைய தாயாரின் பூர்வீகம் பனங்காமம் என்பதால் பலமுறை அந்த இடத்தின் நிலவியல் வளத்தைக் கண்டு வந்துள்ளேன். ஏற்கனவே பலமுறை அந்த இடங்களுக்கு நான் பயணம் செய்துள்ளதால் மன்னார் நோக்கி நேரே சென்றேன். உவர் காற்று தொடர்ந்து வீசியது. வெள்ளைநிலம் சூரியக்குளியல் செய்து கொண்டு இருந்தது. விடத்தல் முட்கள் பரந்து காணப்பட்டது. ஆட்காட்டி எங்கே கூடு கட்டும் என்று யாரும் அறிவதில்லை. அது கூடுகட்டாது நிலத்தில் முட்டையிடும் என்று கூறுவார்கள். ஆட்காட்டி ஒன்று விடத்தல் முட்களுக்கு மத்தியில் நுட்பமாக அமர்ந்து இருந்தது. பாம்பு கூட நுழைவது கடினம்.
வெண்நிலம் தான்டி அடம்பனுக்குள் நுழைந்ததும் அந்த உவர் காற்று ஓய்ந்தது. நிலத்தில் சூரியனைப் படர்த்தி வைத்தது போல செம்மண் பரந்திருந்தது. எத்தனை மழை பெய்தாலும் மன்னார் மிக வறண்ட நிலமாகவே இருக்கும். அடம்பன் சற்று விதிவிலக்கு. அடம்பனில் பாடசாலைக்கு அருகில் பெரும் வயல் நிலம் ஒன்று உள்ளது. வயலின் நடுவால் செல்லும் அடம்பன்- ஆண்டான்குளம் வீதியின் இரு பக்கமும் ஒரு கிலோமீட்டர் நீளமாக மருதமரங்கள் வளர்ந்து கிளைபரப்பி குளிரை அள்ளி வீசிக்கொண்டு உள்ளன. அவை யாரோ நட்டமைக்கான சீரில் அமைந்திருந்தன. இந்த வீதியில் எந்தக் கோடையிலும் வெப்பம் சூழ்வதில்லை. உள்ளே போனதும் அதன் குளிர்மை என்னை வெகுவாகப் பாதித்தது. பைக்கை அருகில் நிறுத்திவிட்டு மரக்கட்டையில் அமர்ந்து இருந்தேன். வயதான ஒருவர் வீதியால் போகும் போது மறித்து யார் இந்த நல்ல காரியத்தைச் செய்தது என்று வினாவ நினைத்தேன். ஒரு பெரியவரிடம் கேட்டேன். அவர் இந்த மரம் விதைகள் தானாகவே விழுந்து முளைத்தவை என்றும் யாரும் நடவில்லை என்றும் சொல்ல, நான் கேட்டேன் இவை நேராக உள்ளனவே தானாக முளைக்க சாத்தியமில்லை என்றேன். இருந்தும் அவர் ஏற்கவில்லை. இந்த ஊரா என்று கேட்க இல்லை அயலூர் என்றார். நானும் நன்றி கூறி அனுப்பிவிட்டு, அடுத்துவந்த முதியவரிடம் இந்த ஊரா என்று கேட்டுவிட்டே கேள்வியைக் கேட்டேன். அவரும் அடம்பனில் பிறந்ததாகக் கூறினார். ஒரு சிறுபோகக் காலத்தில் மருதமரத் தடிகளை வெட்டி வயல் வேலிக்கு ஊன்றியதாகவும், ஒரு சில இடங்களில் விதைகளை போட்டதாகவும் கூறினார். பின்னர் மழை பெய்தபோது தடிகள் வேர் பிடித்து விட்டதாகத் தெளிவாக விளங்கப்படுத்தினார். எனக்கு வியப்பாக இருந்தது. மருதமரங்கள் தடிகளில் வளருமா என்று. கோசல நாட்டின் வளத்தைக் கூற வந்த கம்பர் "மயங்கும் மா மருத வேலி" என்று கூறியது எனக்கு ஞாபகம் வந்தது. எவ்வளவு அழகான சிந்தனைகளை நமது முன்னோர் அழகுணர்வுடன் செய்துள்ளார்கள்.அவர்கள் விவசாயிகளாக இருந்த போதும் வயலும் வயல் சார்ந்த மருதநிலத்தை அழகுபடுத்த மருதமரத்தையே நாட்டியுள்ளார்கள். அதை எண்ணி நான் வியந்து கொண்டேன். சங்ககாலத்தில் மருத மரத்துக்கு திருமருது என்றல்லவா கூறுவார்கள்.திருமறைக்காடு, திருப்பரங்குன்றம், திருப்பதி என்று தெய்வநிலை ஏற்றிய வாழ்வு அல்லவா தமிழர் வாழ்வு. நான் அடம்பனில் கண்டது அதைத்தான். அந்த மனம் யார்க்கும் வாய்க்காது. அனுபவிக்கவும் அரியதொன்றல்லவா?. மன்னார் செல்ல இலகு வழிகள் இருந்தும் மருதமரக் காற்றை வாங்கிச் செல்ல என்றே நெடுவழியால் செல்வேன். அங்கிருந்து செல்ல மனம் இன்றியே வீடு திரும்புவேன். பயணம் என்னும் வாழ்வு எப்போதும் சன்னதமான ஆட்டத்தை நமக்குள் நிகழ்த்துகிறது என்று ஒவ்வொருவரும் அறியும்போது பயணத்தின் திசைகளும் களங்களும் விரிவுறுகிறது.
00
இந்தப் பயணத்தின் மொத்த தூரம் 450KM. திட்டமிடப்படாத தனிமைப் பயணம் என்பதால் நான் நினைத்த வழியிலும் நினைத்த இடத்திலும் சென்று தரித்து வந்தேன்.
00
சுயாந்தன்
25/07/2020.
good read. keep exploring
ReplyDeleteGreat expression! Great writer! Great Tamil!Great service to Tamil World! Write yout biography with all aspects of life in Srilanka! God is with u all my friend!
ReplyDelete