நதி

01

வைகாசியின் வெறுமை பரந்து இருந்தது. அதனை எப்படிக் கடத்துவது என்று தெரியாமல் கொன்றைப்பூக்களை வாரிப்போட்டுக் கொண்டு ஓடைகள் கரைகளை முட்டிச் சாய்ந்து ஓடின. 


என்றைக்குமான வானம் நதிகளுக்கு வழியமைத்துப் பார்த்துக் கொண்டிருக்க ஒரு பறவை பறந்து வந்து நதியின் கரையில் குந்தியது. இருக்கும்போது கற்பாறை அங்குமிங்கும் அசைவது போலிருந்தது. உள்ளே மறைந்திருந்த கறுப்புச் சிறகுகளை வெளியே எடுத்து ஓய்வு கொண்டது. 


இந்த நதிக்கு என்று ஒரு வரலாறு இருக்கிறது. இதனை இங்குள்ளவர்கள் ஆறு என்று சொல்வார்கள். இதன் வேகத்தைப் பார்த்து காட்டாறு என்று சொன்ன கவிஞர்களும் உண்டு. 


யுத்த வீரர்கள் தமக்கான களமுனை என்றும் சொன்னார்கள். முடிவில்லாத யுத்தத்தை இந்த நதிகளின் நடுவில் இருந்தே தொடங்கினார்கள். 


எந்தக் கவிஞரும் மானுடரும் சொல்லும் பொருளுக்கு ஆட்படாத அமானுஷ்யமாக அவள் பாய்ந்துகொண்டிருந்தாள். ஓய்வற்று வன்னிச் சமவெளிகளில் பசுமை பரப்பியிருந்தாள். அவளின் ஆழங்கள் எந்தவொரு இடத்திலும்  நிரந்தமற்று மேவியிருந்தது. மணல் கொள்ளையர்கள் கற்பழித்துப் போட்ட அவள், தன்னைத் தொட்டுத் தடவி நிற்கும் 

மருதமரங்களின் வேர்களை எடுத்து வெளியில் போட்டு கேள்வி கேட்டுக் கொண்டிருந்தாள். 


இராத்திரியில் நிலாவில் தெரியும் அதன் தடித்த வேர்கள் ஆண்குறிபோலப் புடைத்து நின்றன. அவள் அதற்கு நீர்பாய்ச்சாமல் ஓடிக்கொண்டிருந்தாள். 


எந்த முனியும் தவம் செய்யாத கற்பாளைகளில் கறுப்பு மந்திகள் இரவு பகல் பாராமல் துள்ளியும் தூங்கியும் குதூகலத்தால் விடந்து இருந்தன. ராமனாக இல்லாத மந்திகளுக்கு அகலிகைகள் மீதுதான் எவ்வளவு பிரியம். நான் அகலிகைகள் போன்ற அழகுள்ள மாதவி மனத்தவள்களை இங்குதான் கூட்டிவருவேன். 


 முதலில் தயங்கினாள். நான் இந்த நதியைப் போன மார்கழியில் A6000 கொண்டு எடுத்த போட்டோக்களை அவளுக்குக் காட்டினேன். அதில் ஒரு புகைப்படத்தை சிற்றிதழ் ஒன்று தனது முகப்பில் அலங்கரித்து கவர் படமாக்கியிருந்தது. அதைக் காட்டி அவளை அவ்விடத்துக்கு வர வசீகரித்தேன். அன்றைக்குத்தான் நான் கவனித்தேன் அவள் அந்த இதழை முழுவதுமாக வாசித்திருந்தாள். அதில் காவேரித் தொன்மம் பற்றிய நீண்ட கட்டுரையும் வந்துள்ளது. என் போட்டோவைப் பார்க்கும் ஆர்வத்தில் அதை மேலோட்டமாக மேய்ந்திருந்தேன். 


யாரும் பார்த்துவிடக் கூடாது என்ற பயத்தில் நான் அவளை அன்று மதியம் நதிக்கு உள்ளால் நடத்திக் கூட்டிப் போனேன். நான் மட்டுமே அந்த இடத்தில் மானுடனாக இருந்தேன். 


"வடிவாயிருக்குடா, இந்த நதிக்கு ரெண்டு கரைதானா,ஏன் இவங்கள் எல்லாரும் மூன்றாவது கரை எண்டு கதைகள் எழுதுறாங்கள் "  என்றாள்.


லத்தீனில் பாயும் அமேசன் நதியின் மூன்றாவது கரையை அங்குள்ள எழுத்தாளர்கள் பார்த்திருப்பார்கள்.இல்லையென்றால் அவர்கள் தமது நதியைக் கௌரவப்படுத்தி  உலகக் கவனத்தை ஈர்த்திருக்க எழுதியிருக்கக் கூடும். இத இவளிட்டச் சொல்ல முடியுமா? எனக்கு இங்கு விவாதம் செய்யும் நோக்கமில்லை. நான் என்னுள் கொதித்துக் கொண்டிருந்தேன்.


"இல்லட்டி நதிக்கு மூண்டாவது கரை கடல்தான் அந்த கடலத்தான் அப்படிச் சொல்றாங்கள்" என்றேன். 


தன்னுடைய பூனைக் கண்களை என்மீது தடவிக் கூசினாள்.பின்னர் நதியின் இரண்டு கரைகளையும் பார்த்துக் கொண்டு ஒரு சாய்ந்த பனிச்ச மரக் குற்றியில் சென்று அமர்ந்து கொண்டாள்.


போன மார்கழிக்கு நான் அந்தப் பனிச்சை மரத்தின் மேலால் நதி வெள்ளம் மேலெழுந்து ஓடியதைப் பார்த்திருந்தேன்.

அது எனக்கு பெருத்த மார்புடைய பெண்ணை நிர்வாணமாக ரசிப்பது போன்ற வக்கிர எண்ணத்தை உண்டாக்கியது. பாயும் நீர் ஊறிக்கொண்டே எனை நோக்கி விரைந்தது. நான் நதியை விட்டு வெளியில் ஓடி வந்து விட்டேன். இரவு முழுக்க என்மீது நதிவெள்ளம் கரைபுரண்டு ஓடியிருந்தது. அதனை ஒரு பரிசோதனையாகச் செய்ய என்மனம் விசும்பிக் கூடலுற்றது.


பனிச்சைக் குற்றியில் அமர்ந்தவள் என்னைச் சைகையில் அழைத்தாள். நான் ஆழமற்ற நதியின் நடுவால் நடந்து நடந்து அவளைச் சேர்ந்தேன். தன் கால்களில் ஒன்றை எடுத்து என் மெல்லிய தோள் மீது போட்டாள். நதியும் காடும் சன்னதமாய் உரையாடிக் கொண்டிருந்தன. 


நான் அவளது மற்றைய கால் நதியில் தழுவுப்பட்டுக் கொண்டிருப்பதைக் கண்டேன். அங்கு ஓரிரு மீன்கள் அவளது கால் நகங்களைத் தீண்டி உணர்வூட்டியிருக்க வேண்டும். என்னை மெல்ல மெல்ல தன்னருகே இழுத்தாள். நான் மந்திகள் குந்திய கற்குவியலை பார்த்தேன். அவை எங்கோ போய்விட்டன. அவள் அருகே சென்று 


"இன்றைக்கு இங்கே தங்குவோமா"  என்று கேட்டேன்.


 மீன்கள் உணர்வூட்டிய காலை மரத்தின் கட்டையில் ஊன்றிக் கொண்டு என் இளநரைகளில் விரலைக் கோதி தலை சாய்ந்தாள். ஒரு பதிலும் சொல்லவில்லை. ஒரு தற்காலிகப் பிடியில் இருந்துகொண்டு நிரந்தர தகிப்பைத் தேடும் அவள் என்னில் முயங்கினாள். என் வெப்பச் சுழல் நதியிலும் அவளிலும் பற்றிக் கொண்டது.  


 உண்மையில் இரவு வேளைகளில் இங்கு தங்குவது ஆபத்தானது. மரக்கட்டையில் துளைத்துள்ள பொந்துகளில் நாகமும் புடையனும், சில நேரங்களில் இரு கரைகளிலும் யானையும் உலாவித்திரியும். நதியின் மீதுள்ள விருப்பில் கேட்டு விட்டேன். அவள் ஏற்கவோ மறுக்கவோ இல்லை. எனக்கு ஒரு வியப்பும் இருக்கவில்லை.


02 


அவள் எனக்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு அறிமுகமாகியிருந்தாள். அப்போதும் இதுபோல் தான் பேச மாட்டாள். அவளிடமிருந்து  ஒரு கதையை உருவி எடுக்கவே எனக்கு ஒரு வாரப் பயிற்சி தேவை என்று தோன்றியது.


ஜெயசிக்குறு காலத்தில் தமது பூர்வீக வீட்டை ஆமிக்காரங்கள் இடித்துத் தரைமட்டம் ஆக்கியிருந்தார்கள் என்றும், தாம் இப்போது வெளிநாட்டிலுள்ள சித்தப்பா வழங்கிய பணத்தில் ஒரு வீடு கட்டி இருப்பதாயும் கூறினாள். அதனால் அரசாங்கம் வழங்கும் வீட்டுத்திட்டத்தில் தாயும், தானும் உள்ள குடும்பத்துக்கு ஒரு வீடு தரச்சொல்லிக் கோரிக்கைக் கடிதம் தந்திருந்தாள். அப்போதும் அவள் பெரிதாகப் பேசவில்லை.


என் உத்தியோகக் கௌரவத்தை விட்டு நானும் பெரிதாகப் பேசவில்லை. கடிதத்தைக் கூர்ந்து பார்ப்பது போலப் பாசாங்கு செய்தேன், இது இங்குள்ள அரச அதிகாரிகள் செய்யும் வாடிக்கைதான்.


இடப்பக்கமாக முகவயியிட்டு வலப்பக்கமாகக் கையெழுத்து வைக்கும் கடிதங்களைத்தான் நான் கண்டிருக்கிறேன். அவைதான் இங்கு வழக்கம். ஆனால் இவளது கடிதத்தில் முகவரியும் கையெழுத்தும் இடப்பக்கத்திலேயே அமைந்தன. ஒரு கணனி மனம் அவளுக்குள் இருந்திருக்க வேண்டும்.  


 நான் அடிக்கடி என் வேலைத்தளத்து நண்பர்களிடம் கேட்கும் கேள்வி எங்களை நாங்களே விமர்சனம் செய்து கொள்வதில் இருக்கும் மனத்தடையை எதை வைத்து அகற்றுவது, நாங்கள் அரசாங்கம் மீது வைத்திருக்கும் விசுவாசத்தை விட துரோகத்தனங்கள்தான் அதிகம். அதை விட அதிகம் அரசிடமிருந்து பெறும் இலாபங்கள். ஆனால் நாம் ஒன்றையே பிடித்துத் தொங்கிக் கொண்டு இருக்கின்றோம்.


அவள் மீது அனுதாபப் பட்டேன். ஏதோ அரச வேலைக்குப் போய் வீட்டைப் பார்க்கிறாள். ஆனால் கஸ்டம் என்றில்லை. அவளது கோரிக்கையில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. ஏனென்றால் நான் வேலை செய்யும் இடத்தில் தற்காலிகக் கொட்டில் வீட்டில் குமரிகளை வைத்துக் குடும்பம் நடாத்தும் நிறையக் குடும்பங்கள் உண்டு. அவர்களுக்கு வீடு இல்லை. கக்கூஸ் போனாலும் கதவைத் தூக்கி வைத்துத்தான் போக வேண்டும். குளிப்பது கூட பொதுவில் தான். 


 இவளுக்கு எல்லாமே உண்டு. ஆனால் அந்த மனம் அவளைச் சுரண்ட அனுமதிக்கிறது. பின்னர் அந்த அனுதாபத்தை என்னுள்ளே இறக்கி விட்டு அகங்காரத்தை ஏற்றிக் கொண்டேன். கொஞ்சம் எரிச்சலடைந் தேன். ஆனால் அதைக் காட்ட முடியாது. ஏனென்றாள் அவள் பெண். அதிலும் அழகான பெண். அதைவிட நான் அரசாங்க உத்தியோகத்தன். இரண்டு வேலிகளுக்குள்ளும் இருந்து கொண்டு அவளை நோக்கினேன்.  ஒரு போலியான உரையாடலை என்று எனக்குள் இருந்து கூறினேன்.


"இந்தக் கடிதத்தை நான் திட்டமிடல் கிளைக்கு அனுப்பி வைக்கிறேன்"என்று ஒரு தற்காலிகத் தீர்வினை அவளது ஆசைக்கு முன் நீட்டினேன்.


நன்றி சொல்லி விட்டுப் போய்விட்டாள்.


பின்னர் இரண்டு முறை இது பற்றித் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியிருந்தாள். அந்த உரையாடல் நதியின் கரைவரை கொண்டு வந்தது சேர்த்தது.


03


பெண்களின் மனம் , அவர்களின் துரோகங்கள் போலவே அறியாமையில் ஆனது. அவர்களின் அறியாமையின் ஊற்று முகம் ஆசைகளில் ஆரம்பமாகிறது. நான் அவளது அறியாமையில் குளிர் காய்ந்தேனா? ஆசையில் முகம் புதைந்தேனா என்று யோசித்துப் பார்க்கிறேன். 


நாங்கள் நதியிலிருந்து நதிக்குள் நடந்து போய்க்கொண்டிருந்தோம். வெளியில் சூரியன் மறையவில்லை என்பதை மணிக்கூட்டை வைத்து உறுதிசெய்தேன். உள்ளே இருள் சூழ்ந்து கொண்டது. அவளது நிறம் குழந்தையின் உள்ளங்கை போன்றது. அதனைப் பற்றும் போது உருவாகும் வெப்பம் நதியில் வீழ்ந்து ஓடியது. 


நான் கீழே பார்த்துக் கொண்டிருந்த போது, 


"நீ என்னை கலியாணம் செய்ய மாட்டாய் என்று தெரிஞ்ச பிறகும் உன்னோட சுத்துறனே, என்னை யாரும் கண்டால் எப்படிச் சொல்வார்கள்" என்றாள். 


நான் கொஞ்சம் யோசித்துவிட்டுக் "காதலர்கள்" என்றேன். 


எனக்குக் காதல் ஒன்ற மிகைப்படுத்தப்படாத காமம் மீது ஒரு நம்பிக்கையுமே இல்லை. அது காமத்தை ஒளித்து வைக்க நாம் பாவிக்கும் குகை. அந்த குகையில் வாழும் மான்களை ஓநாய்கள் உண்ணும். அந்த ஓநாய்களை புலிகள் துரத்தும்.  அவ்வளவு தான் காதல், காதலர்கள், காதல், காதல் ......காமம் என்ற குகை புடைத்து வளரும். 


அந்த பதில் அவளை அதிர்ச்சி அடையச் செய்யவில்லை என்பதை அவள் கதிரின் ஓட்டத்தைப் பார்ப்பதை வைத்து அறிந்து கொண்டேன். திடீரென்று அவள் சுபாவம் மாறியது. 


என்னவென்று அவள் பார்வை செல்லும் நதிவழியைப் பார்த்தேன். பெரிய பாலை மரத்தை வெட்டி வீழ்த்தி அதில் மரம் அரிந்து பலகை எடுத்துள்ளார்கள். அந்த மரத்தின் வேரை அடியோடு கிளறியுள்ளார்கள். இப்போது புதிய மெஷின் இங்கு வந்துள்ளது. இந்த வன்னியில் ஓடும் நதிகளை அழிக்க இங்குள்ள அதிகாரிகளும் மக்களுமே போதுமானவர்கள்.  நதியின் கரையில் வேர் பாறியதால் பெரிய துளை ஏற்பட்டுள்ளது. பெரிய மணல் திட்டு களவு போய்க்கொண்டு உள்ளது. 


அவர்கள் மணலை இலகுவாக அள்ள மரத்தை வேருடன் வெட்டி எடுத்திருக்கிறார்கள்.அந்தக் குழியில் தொப்பலாக நனைந்த ஒரு வாசலுடைய தூக்கணாங்குருவி கூட்டை எடுத்து கரையில் போட்டாள் அவள்.


நான் அவளைப் பார்க்காதது போல் நின்று கொண்டேன். இவளை நம்ப முடியாது, இதற்கு பொலிஸிடம் கூறி வழக்குத் தொடுக்க சொல்லி என்னை மணல் கொள்ளைக்காரர்களின் பிடியில் சிக்க வைத்து விடுவாள்.

'பச்சைக் கள்ளன்களையும் தொந்தி வளர்க்க ஆசைப்படும் தாயோழிகளையும் தான் இங்குள்ள பொலிஸில் நாம் காணுறம்' என்று எனக்கு ஒரு வயதான ரிட்டயர் அதிபர் கூறியது ஞாபகம் வந்தது.  

உண்மையில் இங்குள்ள அரச அதிகாரிகள் சோம்பேறிகள் அல்லது லஞ்சப்பேர்வழிகள். கையில் ஒரே தாளாக அய்ந்தாயிரம் மடித்து வைத்துவிட்டால் இருக்கிற நிலத்தைக் கிரவலுக்கும் கல்லுக்கும் பேர்மிட் குடுத்து விடுவார்கள். ஆயிரம் இரண்டாயிரம் வைத்தால் அவற்றை கண்டு கொள்ளாமல் இருப்பார்கள். 


நான் என் பணியைச் சரியாகச் செய்கிறேன் என்ற திருப்தியில் நான் இவற்றைக் கவனிப்பதில்லை. என் கவனம் எல்லாம் அகலிகைகள் மீதுதான். அதனை ஒரு அவசியமான குளிகையாக எனக்கு என்மனம் உணர்த்தியது. 


நதியால் நடந்து நீண்டதூரம் வந்திருந்தோம். நதியின் கரையில் குந்தியிருந்த பறவை நிசப்தமாக எங்களைப் பார்த்து கொண்டிருந்தது. சிறிய வயதிலிருந்து வானத்தில் பறக்கும் பறவைகள் மறையும் வரை பார்த்திருப்பது என்னுள் அசாதரணமான நிகழ்வாகப் படிந்திருந்தது. அமரும் பறவைகளை அமரவிடாமல் பறக்க விட்டு வேடிக்கை பார்ப்பது என்றைக்குமான மனமாக என்னுள் ஏற்பட்டிருந்தது. அந்த பறவையின் நிசப்தம் அவளையும் என்னையும் எந்த கேள்வியும் கேட்காதபடி பார்க்க வைத்தது.


  அவள் பறவை எப்போது பறக்கும் என்ற வியப்பில் இருந்தாள். நான் அந்தப் பறவையின் எண்ணங்களுக்குள்ளே விழத் தொடங்கினேன். என்னால் எழ முடியவில்லை. அமர்ந்த பறவையை விரட்ட எறிந்த கற்கள் இன்று என் மீது வீழ்ந்தன. மணல் கொள்ளையர்களின் இரக்கமற்ற செயின்சோர்கள் என் கூட்டை வெட்டி வீழ்த்தின. நான் அநாதரவாக வானை நம்பிப் பறந்திருந்தேன்.

வனம் அழைத்தது. நதி சுழியில் போட்டு இழுத்தது.


நான் "அகல்யா" என்று கத்தினேன்....


கற்சிலை கண்ணிமைப்பது போல அவள் என் கண்களைப் பார்த்தாள். நான் பறக்கச் சிறகுகளை எடுத்தேன்.அவள் மீதமர்ந்த பறவை என்னை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தது..

அவள் அங்கே இருக்கவில்லை.


00


சுயாந்தன். 

Comments

Popular Posts