மயான காண்டம்

                       வண்ணநிலவன்

புதுமைப்பித்தன் எனும் மேதமையின் தாய்வீட்டுச் சீதனமாக எழுத்தாற்றல் பெற்ற படைப்பாளி என்றும், வண்ணநிலவனின் கதைகள் தமிழ்ச்சிறுகதையை உலக தரத்துக்குக் கொண்டு சென்றவை என்றும் நாஞ்சில் நாடன் குறிப்பிடுகிறார். அப்படியான ஒரு கதைதான் மயான காண்டம். 

கடல்புரத்தில் நாவலின் உன்னதமான காதல்/கடல் சித்திரங்கள் இன்றும் நினைவாக உள்ளன. நான் எப்போதும் கடலுக்குப் போகுந்தோறும் இந்நாவலின் வர்ணனைகள் நினைவோடையாகத் தோய்ந்து எழும். கதைகளில் கவித்துவத்தை வைத்து எழுதும் மிகச் சில எழுத்தாளர்களில் வண்ணநிலவனும் ஒருவர். 

மயான காண்டம் கதை பற்றிக் கூறமுதல் அதன் உரைநடையின் சிறப்பம்சம் ஒவ்வொரு ஆரம்ப எழுத்தாளனும் கற்றுக்கொள்ள வேண்டிய பருமை கொண்டது. 

செல்லையா பண்டிதன் என்ற வெட்டியான் ஊரில் பிணம் விழாமல் போனதால் தன் மனைவியுடன் பட்டினி கிடக்கும் அவல நிலைக்குத் தள்ளப்படுகிறான். மனைவியுடன் சண்டையிட்டு விட்டு சுடலைமாடச்சாமி (சொள்ளமாடசாமி) முன்சென்று சங்கை எடுத்து ஊதுகிறான். பின்பு அங்கு உள்ள உண்டியல் பணத்தைத் தானே தனது பையில் எடுத்துக் கொண்டு செல்கிறான். 

கதையை இப்படிச் சொல்லும்போது மிக எளிதாகவே தோன்றும். ஆனால் இக்கதையின் உள்ளர்த்தங்கள் மரபார்ந்த புதுமை கொண்டவை. 

பிற்படுத்தப்பட்டவர்கள் என்ற நோக்கு இதில் உள்வாங்கப்படுகிறதே தவிர அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற வாதம் ஒருபோதும் எழவில்லை. அத்துடன் செல்லையா பண்டிதன் என்ற வெட்டியானின் குலதெய்வம் சொள்ளமாடசாமி. அந்தச் சிலையைச் செய்தவன் பாண்டி வேளாளன்.  முரணான சமூகங்கள் சிறுதெய்வத்துக்குள் அய்க்கியம் கொள்ள வைக்கப்படுகிறது. அதனால்தான் வேளாளன் செய்த தன் குல தெய்வச் சிலையை எண்ணி வெட்டியான் வியப்புடன் மனதால் ஆரவாரங்கொள்கிறான். 

ஊருக்குள் இருப்பவர்கள் வெட்டியானைக் கைவிட்ட போதும் தனது குலதெய்வம் தன்னைக் கைவிடாது என்ற நோக்கு அவனுக்கு ஆழமாகத் துளைத்துநிற்கிறது. தனது தந்தையின் மூதாதையரின் வழக்கத்தின் மீது மீறலையே பண்டிதன் மேற்கொள்கின்றான். அதாவது ஊரார் வரும்வரை, வந்து பணம் பொருள் தரும்வரை காத்திருக்காமல் தன்னளவில் ஒரு தீர்மானத்துக்கு வருகிறான். அதுதான் உண்டியலைத் தன்வசப்படுத்துகிறான். கடவுள் யாருக்கானவர்? ஏழைக்கானவர் இல்லையா? அதுவும் சொள்ளமாடசாமி பண்டிதனின் குலதெய்வம் அல்லவா? 

ஆரம்பத்தில் நாஞ்சில் நாடன் புதுமைப்பித்தனுடன் வண்ணநிலவனுடன் இணைத்துப் பேசியதைக் குறித்து இருந்தேன். பல வரலாற்றுப் புராணக் கதைகளை மீட்டுருவாக்கம் செய்தவர் புதுமைப்பித்தன். அந்த மீட்டுருவாக்கத்தில் பல சேதிகள் தொக்குநிற்கும். நல்ல உதாரணம் சாபவிமோசனம் என்ற கதை. இங்குள்ள மயான காண்டம் என்ற கதை அரிச்சந்திரன் புராணத்தை ஞாபகப்படுத்தக்கூடியது. ஆனால் தன்னிலை வழுவாத அரிச்சந்திரனும் வெட்டியான் செல்லையாவும் ஒன்றல்ல. இக்கதையில் உண்டியலைப் பிடுங்கிச் செல்லும் வெட்டியானின் நியாயம் தேவையான ஒன்றுதான். 

கதைகளின் வழியே நான் நீண்ட தூரம் வந்திருக்கிறேன். ஆனால் வண்ணநிலவன் எனக்கு என்றுமே உவப்பான ஒரு எழுத்தாளராகவே இன்றளவும் இருக்கின்றார். அவர் நம் மரபின் தரிசனம் என்றாலும் மிகையில்லை. கவித்துவத்தின் கதை ஆயுதம் என்றாலும் வழுவன்று. 


கதையிலிருந்து:

//பண்டிதனின் குலதெய்வம் சொள்ளமாடசாமி. ரொம்பவும் கஷ்டம் வரும்போது அந்தச் சங்குகள் இரண்டையும் வாயில் வைத்து, சொள்ளமாடசாமியின் சந்நிதியில் நின்றுகொண்டு ஆங்காரத்துடன் அவன் ஊதுகிறது உண்டு. இந்தச் சங்கொலியில், தாங்கமுடியாத சோகம் கவிந்து மனசையே அலசிப் பிழிகிறபோது, ‘சுடுகாட்டு வெட்டியானுக்கு ரொம்பக் கஷ்டம் போலிருக்கே. அதனாலதான் சாமிகிட்ட மொறையிடுதான்’ என்று ஊர் முழுக்கப் பேச்சு நடக்கும். பண்டிதனுக்கு ஏழெட்டு வயதிருக்கும்போது இந்த மாதிரி, இதே சொள்ளமாடசாமியின் முன்னால் நின்று அவன் தகப்பன் ஊதினதைப் பார்த்திருக்கிறான். அதன்பின் அவன் சாகும்வரை இப்படி முறையீடு செய்ததே இல்லை. தகப்பன் செத்துப்போன பிறகும் இவ்வளவு வருஷங்களுக்கு இடையில் செல்லையா பண்டிதன் இப்போதுதான் முறையீடு செய்யப் போகிறான். அவர்களுக்குள் அப்படிச் சாமி முன்னால் நின்று இழவுச் சங்கெடுத்து ஊதுவது ரொம்பவும் கேவலமானதுதான். பண்டிதனுக்கோ வேறு வழியில்லை. தன் கஷ்டத்தை ஊர்க்காரர்களுக்குத் தெரிவிக்க, அவன் குல வழக்கப்படி இதுதான் கடைசி முயற்சி. நாளைக் காலை ஊர் பெரிய மனிதர்கள் எல்லோரும் அவன் வீட்டுக்கு வந்து அவனுக்கு ஏதாவது பணமோ, தானியமோ கொடுத்து உதவுவார்கள். ஆலமரத்தடியை நோக்கி நடக்கும்போது பண்டிதனுக்குக் கண் கலங்கிவிட்டது. அந்தக் கருக்கல் அமைதியில் சருகுகள் காலில் பட்டுச் சரசரக்க, சாமியின் முன்னால் போய் நின்றான். ஆலமரத்தின் பின்னால் உயரமாக வளர்ந்து கிடக்கும் எருக்கஞ் செடிகளினூடே தகர ஷெட்டுகள் தெரிந்தன. கண் இமைக்காது சாமி சிலையையே பார்த்துக் கொண்டிருந்தவன் ‘பாண்டி வேளாளன்னா பாண்டி வேளாளன்தான். உசிரோட நேரா நின்னு, ‘என்னடா வேணும்’னு கேக்க மாதிரி என்னம்பா துடிப்போட செஞ்சிருக்கான்’ என்று மெதுவாகத் தனக்குள் சொல்லிக்கொண்டான். ‘சாமி எங்கஷ்டத்தைத் தீருமையா...’ என்று சத்தம் போட்டு ஆலமரமே அதிர்ந்து விழுகிற மாதிரி கத்திவிட்டு, தோளில் கிடந்த சங்குகளை எடுத்து வாயில் வைத்து மூச்செடுத்து ஊதினான். மரத்திலிருந்த நாரைகள் கிளைகள் முறிவதுபோல் சடசடவென்று இறக்கை அடித்துக்கொண்டு பறந்தன. அக்கரை ஏறிவிட்ட வண்டிக்காரர்கள் வண்டியை நிறுத்திவிட்டுத் திரும்பிப் பார்த்துக்கொண்டார்கள். வயிற்றுப் பசியையெல்லாம் வாய் வழியே காற்றாக்கி சங்குகளை ஊதினான். செல்லம்மா வீட்டு வாசலுக்கு வந்து எட்டிப் பார்த்து அப்படியே நின்றுவிட்டாள். பண்டிதனின் சங்கொலி ஆற்றங்கரை மணல், ஆற்றுத் தண்ணீர், அக்கரையில் உள்ள பச்சை வயல் வெளிகள், வண்டிப் பாதை சுற்றிக்கொண்டு போகிற வெள்ளிமலைக் குன்று இவற்றையெல்லாம் தொட்டுத் தாண்டிப் போய்க்கொண்டே இருந்தது. அன்றைக்கு ரொம்ப அபூர்வமாக, ஒரு சங்கீதக்காரனைப் போன்ற கம்பீரத்துடன் மூச்சடைக்க, கண்களில் நீர் வழிய வழிய ஊதினான். மனசில் கொட்டிக் கிடந்த ஆவேசம் தீரும் மட்டும் ஊதிவிட்டு நிறுத்தினான். கொஞ்ச நேரத்துக்குச் சாமியையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான். ஆலமரத்தடியில் முழுவதுமாக இருட்டு கவிந்துவிட்டது. திடீரென்று சாமி முன்னால் நகர்ந்துபோய் ஆலமரத்தில் தொங்கிக்கொண்டிருந்த சிறிய தகர உண்டியலைப் பிடுங்கி, இடுப்பில் வேஷ்டி முந்தியில் கட்டிக்கொண்டு, ஆலஞ் சருகுகள் சரசரக்க வீட்டை நோக்கி நடந்தான்.//

Comments

Popular Posts