புயலிலே ஒரு தோணி: எக்காலத்துக்குமான படைப்பு.
எளிய வாசகனாக இருந்த எனது வாசிப்பின் தொடக்கம் கல்கியில் இருந்து ஆரம்பித்தது. சடுதியாக ஜெயமோகனை வந்தடைந்தேன். பாலையில் இருந்து மருதம் வந்தது போன்ற ஆதூரவுணர்வு என்னுள் ஏற்பட்டது என்றே கூறுவேன். அதன் பின்பு ஒரு காலமும் நான் வணிக எழுத்துக்களின் பக்கம் சென்றதில்லை. அதனை ஒரு பொருட்டாக மதிக்கவும் கூடாது என்ற எண்ணத்தையும் மனதில் கொண்டுள்ளேன். அ.மாதவையாவின் பத்மாவதி சரித்திரத்தில் இந்த வணிக எழுத்துக்கான எதிர்ப்பு விதைகள் உள்ளன என்று அதனை வாசிக்கும் நாம் ஒவ்வொருவரும் உணரமுடியும்.
அண்மையில் ப.சிங்காரம் அவர்களின் புயலிலே ஒரு தோணி நாவல் வாசித்து முடித்தேன். இதனை வாசித்ததும் என்னுள் ஒரு விபரீதமான எண்ணம் தோன்றியது. ஆங்கில யுத்தத் திரைப்படங்களைக் காணும் எந்த எளிய ரசிகனுக்கும் உண்டாகும் யுக்தியற்ற எண்ணப்பாடு இது. அதாவது இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கினால் எந்த இயக்குநருக்கும் நடிகருக்கும் பொருத்தமாக இருக்கும் என்று. உண்மையில் என்னிடம் தெரிவுகளே இல்லை. இந்நாவலைத் தமிழில் திரைப்படமாக்கும் தொழிநுட்ப மற்றும் ஏனைய உத்திகள் இல்லை. இம்முயற்சி இந்நாவலைச் சிறுமைப்படுத்தும். அந்த அளவுக்கு இந்நாவலின் தரம் அதீதமானது. இந்நாவலின் வாசிப்பு எனக்கு அபரிமிதமான அனுபவங்களை உண்டாக்கியது. குறிப்பாக வணிக எழுத்துக்கும் தீவிர எழுத்துக்கும் இடையிலான வித்தியாசத்தை அறியத்தந்தது என்றும் கூறமுடியும்.
பாண்டியன் என்ற கதாபாத்திரம் ஒரு இலட்சிய பாத்திரமாகப் படைக்கப்பட்டுள்ளது. பலர் இக்கதாபாத்திரத்தை அராஜநாயகன் என்று குறிப்பிடுகின்றனர். அது மேலோட்டமான வாசிப்பின் வெளிப்பாடு.
நாவலில் "தமிழ்ப் பேரவை" என்றொரு அத்தியாயம் வருகிறது. இது நாவலில் முக்கியமான உரையாடல்பகுதி. பாண்டியனின் (சிங்காரம்) உலகளாவிய குரல் முரண்பட்டு ஒலிக்கும் இடம் இது. தன் நாவல் முழுக்க அங்கதம் கொண்டு நிரப்ப பாண்டியனை அதிகம் பயன்படுத்தியுள்ளார் சிங்காரம். அத்துடன் அவனை இலட்சிய நாயகனாக்கப் பல இடங்களில் முனைகின்றார்.
கு.அழகிரிசாமிக்கு பழந்தமிழ் இலக்கியங்களில் அதிலும் குறிப்பாக முத்தொள்ளாயிரம் என்ற இலக்கியத்தில் அதீத ஆர்வம் இருந்துள்ளது. அதை ஒரு முக்கியமான பழந்தமிழ் இலக்கியம் என்றும் கு.அ குறிப்பிட்டுள்ளார். அதுபோல ப.சிங்காரம் தனது மேற்படி புனைவில் முத்தொள்ளாயிரத்தின் தமிழ்க் குறியீட்டை மூன்று பாடல்களைக் கொண்டு விபரித்துள்ளார். அடுத்துவரும் அத்தியாய உரையாடல்களுக்கு அதுவே துணையாக நிற்கிறது.
தென்னன் நெடுமாடக் கூடல் அகம், பூம்புனல் வஞ்சி அகம், வேல்வளவன் பொற்பார் உறந்தை அகம் என்று முடிவுறும் மூன்று பாடல்களிலும் தமிழ்வாழ்வின் போகம் முழக்கமிடப்பட்டுள்ளது. இதுதான் ஆரம்பகாலத் தமிழ் வாழ்வுக்கான அழிவின் சான்று என்று ஒரு தத்துவமும் எள்ளலும் கலந்த அத்தியாயத்தைக் கொண்டுவருகிறார் சிங்காரம். இதனை பாபிலோனியனின் வீழ்ச்சியுடன் ஒப்பிட்டு கதை சொல்லும் விதம் மிக உன்னதமான ஒரு உத்தி. புதுமைப்பித்தன் தன் மரபின் மூடத்தன்மைகளை எள்ளிநகையாடும் அதே போதம் சிங்காரத்திடம் சன்னதமாக வெளிப்படுகிறது.
தமிழ்ப்பெருமை பேசுபவர்களைப் பார்த்து "தவறான நம்பிக்கைகளின் மீது எழும் தற்பெருமை உண்மையைச் சந்திக்க நேரிடின் தன்னிளப்பமாக மாறிவிடும்" என்கிறார்.
'கால இடத் தேவைகளுக்கு ஏற்ப சமுதாய அமைப்பு முறை தோன்றுகிறது, மாறுகிறது. ஜாதிமுறை வெவ்வேறு பெயர்களுடன் எல்லாச் சமுதாயங்களிலுமே இருந்திருக்கிறது. இருந்து மாறியிருக்கிறது. எனவே நமது ஜாதிமுறை பற்றி நாம் வெட்கப்படத் தேவையில்லை. இன்றைய சூழ்நிலையில் இப்போதிருப்பது போன்ற ஜாதிமுறை தேவையா என்பது கேள்வி. எனக்குத் தெரிந்த வரையில் ஜாதி ஒழிப்பு வேலையல்ல முதற்கடமை. நம் மக்களிடையே பரந்த மனப்பான்மையை வளர்ப்பதையே முதல் வேலையாகக் கொள்ள வேண்டும். அறிவு வளர்ச்சி காரணமாகத் தோன்றும் பரந்த மனப்பான்மைக்கு ஜாதி சமய இனமொழிப் பிரிவுகள் யஆவுமே வெறும் விளையாட்டு வேலிகள்'
இது ஜாதிமுறை தோன்றியமைக்கான காரணத்தை நாடகத்தன்மையில் பாண்டியன் கூறிய பதில்.
நாவலின் தொடக்கம் எந்தத் தமிழ் நாவலும் தராத ஒரு உற்சாகத்தை அளித்தது. மெடானின் போர்க் காட்சியும் ஜப்பானியர்களின் ஊடுருவலும் இயற்கை இகந்த விதத்தில் வர்ணிக்கப்படுகிறது. பாண்டியனின் அறிமுகம் ஒரு திரைநாயகனுக்கான அறிமுகம் போன்றது. முதல் ஆறு அத்தியாயங்கள் ஒரு போர்நாவலுக்கான சுவாரசியத்துடன் விரிவுறுகின்றது. பின்னர் திடீரென செட்டியார்களின் வணிக எழுச்சி வீழ்ச்சி பற்றிய விவரணைகள் இடம்பெறுகின்றன. அவை அங்கங்கே சலிப்பை உண்டாக்கினாலும் நாவலின் நகர்வில் தளர்வை ஏற்படுத்தவில்லை. அதற்கு சிங்காரம் கையாண்ட மொழிநடையும் இயற்கை வர்ணனையும் இன்னொரு காரணம் என்பேன்.
இந்நாவலுக்கான தகவல்களும் தரவுகளும் மிகத் துல்லியமானவை. இரண்டாம் உலகப்போரில் சோவியத் யூனியன்- ஜெர்மனி- அமெரிக்கா- பிரிட்டன்- ஜப்பான் முதலிய நாடுகள் தமது ஆதிக்கத்தை உலக அரங்கில் நிலைநாட்ட மேற்கொண்ட அழிச்சாட்டியங்கள் சித்திரமாக்கப்பட்டுள்ளது. அப்போர்களுக்குத் தலைமை தாங்கிய ஜெனரல்களின் பெயர் விபரம் தொட்டு அந்தச் சமர்களின் முக்கியத்தூவம் இழப்புக்கள் வரையும் பதிவு செய்யப்படுகிறது. மேலும் முக்கியமாக இந்திய தேசிய இராணுவம் மற்றும் இந்திய விடுதலை பற்றி மிக முக்கியமான சித்திரம் பதியப்படுகிறது. அது பாண்டியனின் உள்ளார்ந்த விருப்பம். அதற்காகத் தன்னையே இறுதியில் இழக்கிறான். சுபாஸ் சந்திர போஸ் வழங்கிய வேலையை முடித்து அவரிடம் பாராட்டை வாங்கி மேலும் தனது திறமைகளைக் காட்டுகிறான். இந்தோனேசியாவில் இருந்து டச்சுப் படைகளைத் துரத்த வேண்டும் என்று அங்கேயே போராளிக்குழு அமைத்து இணைகிறான். அந்த இலட்சியத்துக்காகவே பாண்டியன் இறந்து போகிறான்.
இந்நாவல் என்னைப் பொறுத்த வரை ப.சிங்காரத்தின் மிக உச்ச படைப்பு என்றே கூற வேண்டும். எக்காலத்துக்கும் உரிய நாவல் இது. இதிலுள்ள வாழ்க்கைப் படிப்பினைகள் இலட்சிய வேகங்கள் மிகப்பழுத்த அத்வைதிக்குரியவை. அதே நேரம் லௌகீகத்தின் பகட்டு மற்றும் நம்பிக்கைகள் வெளிப்படுத்தப்படுகிறது. அதனால்தான் செட்டியார்களின் வாழ்க்கை நீண்ட அத்தியாயங்களில் எழுதப்பட்டுள்ளது. அத்துடன் சிங்காரத்தின் பழந்தமிழ் அறிவு பிரமிக்க வைக்கிறது. மிகச் சிலரே தமது படைப்புக்களில் துல்லியமாக செவ்விலக்கிய பேரிலக்கியக் காட்சிகளைக் காட்டுவார்கள். அவர்களில் தலையாயவர் சிங்காரம். சிலப்பதிகாரம், சீவகசிந்தாமணி, சங்க இலக்கியம், கம்பராமாயணம், திருக்குறள் என்று இன்னோரன்ன இலக்கியச் சுவைகளைத் தனது படைப்புக்களின் பொருத்தமான இடங்களில் பொருத்திவிடுகிறார்.
இந்நாவல் பற்றிப் பலர் விரிவாக எழுதியுள்ளனர். அதில் ஜெயமோகனின் 'வரலாற்று அபத்தத்தின் தரிசனம்' மிக முக்கியமானது. மற்றும் சி.மோகனின் கட்டுரைகளும். இந்நாவலைப் படித்த பின்னர் இவற்றையும் வாசிப்பது நாவலின் உபரி அர்த்தங்களை நமக்களிக்கும்.
எனது அண்மைய பயணங்கள் நீண்டதூரங்களுக்கு மோட்டார் வண்டியில்தான் அமைகின்றது. முன்பும் அப்படித்தான். இனியும் அதுவே என் விருப்பு. அப்போது நான் இந்நாவலை எண்ணிக் கொள்வேன். புயலிலே சிக்கிய பாண்டியன் என்ற கதாபாத்திரமாக என் பயணத் தூரங்களின் விருப்பு வெறுப்புக்களை மாற்றிக் கொள்வேன். அதுவே என் மீவிருப்பு.
உங்களில் யாருக்காவது பயணம் , யுத்தம், உளவு, போராட்டம், இலக்கியம் என்ற வகையில் ஒரு படைப்பை வாசிக்க ஆர்வம் இருந்தால் புயலிலே ஒரு தோணி வாசியுங்கள். அதன் ஆழங்கள் எந்தக் கடலிலும் கப்பலுக்கு இலகுவில் நங்கூரம் போடக்கூடியது.
Comments
Post a Comment