நீலிக்கண்ணீரின் தொல்கதை: சில இலக்கியப் பதிவுகள்.

நீலிக்கண்ணீர் என்ற தொல்லெச்சம் எப்படி நமது அன்றாட வாழ்வில் உரையாடுகிறது என்பதற்கு நீண்டகால ஆதாரப் பதிவுகள் உள்ளன. எப்படி நற்றிணையில் இருந்த முலை அறுத்தெறியும் காதை கண்ணகி காதைக்கு இளங்கோவுக்கு பாடுபொருளானதோ, அதுபோல தமிழ் வாழ்வியல் வரலாற்றில் நீலி என்ற பெண் பாத்திரம் போலியின் ரூபமானது.

அதாவது காஞ்சிபுரத்து வணிகன் தனது முதல் மனைவியை வஞ்சகமாகக் கொலை செய்துவிட்டு இரண்டாம் திருமணம் செய்கிறான். அவன் வணிக நோக்கமாக பழையனூர் வழியாகப் பயணமாகிறான். அப்போது அவனது முதல் மனைவி பேயாக மாறி அவனைப் பழிவாங்கத் துடித்து மனைவி போல உருமாற்றம் கொள்கிறாள். ஒரு தீய்ந்த கட்டையைப் பிள்ளையாக்கி இடுப்பில் வைத்தும் கொள்கிறாள். அப்போது அவன் அவளை மனைவியென ஏற்க மறுக்கிறான்.

திருவாலங்காட்டுக்கு வேளாளர்களுக்கு இந்த வழக்கு வந்து சேர்கிறது. வணிகன் தனது மனைவி இல்லை என்றும் இவளோடு சென்றால் தன்னை இந்தப் பேய் கொன்றுவிடுமு என்றும் கூறுகிறான்.  வேளாளர்களிடம் வணிகன் அவ்வாறு கூறும்போது அவளது இடுப்பிலிருந்த பிள்ளை அப்பா என அவனை அழைக்கிறது. அப்போது திகைத்துப் போன வேளாளர்கள் நீ இவளோடு ஒரு வீட்டில் தங்கு. அப்படி உன்னை இவள் கொன்று விட்டால் நாங்கள் எழுபது பேரும் தீக்குளிக்கிறோம் என்று வேளாளர்கள் கூறுகின்றனர். அப்படியே தங்கிய ஒரு இரவில் நீலிப்பேயும் வணிகனைக் கொன்று விட்டு மறைந்து விடுகிறது. இதனால் அதிர்ச்சியுற்ற எழுபது வேளாளர்களும் தமது வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக மறுநாள்காலையில் தீயில் பாய்ந்து மாண்டு போகின்றனர்.


இதுதான் நீலிக்கதை. இப்போது கூட பெண்கள் கண்ணீர் வடித்தால் நீலிக்கண்ணீர் வடிக்கிறாள் என்று பல ஆண்கள் ஒருமையில் திட்டுவதுண்டு. இந்தக் கதை ஏழாம் நூற்றாண்டில் திருஞானசம்பந்தரின் திருவாலங்காட்டு திருப்பதிகத்தில் முதல் முதலாகப் பதிவு செய்யப்படுகிறது.

"துஞ்ச வருவாருந் தொழுவிப் பாரும் வழுவிப்போய்
நெஞ்சம் புகுந்தென்னை நினைவிப் பாரு முனைநட்பாய்
வஞ்சப் படுத்தொருத்தி வாணாள் கொள்ளும் வகைகேட்டஞ்சும் பழையனூ ராலங் காட்டெம் மடிகளே"

ஏழாம் நூற்றாண்டுக்கு முன்பே இந்தக் கதை தொல்லெச்சமாக நாட்டாரியல் வடிவில் தமிழகக் கதைகளில் இருந்துள்ளது. அதனால்தான் இது பக்கி இலக்கிய காலத்தில் இலக்கியப் பதிவாக உருப் பெறுகிறது. இந்த மரபுத் தொடர்ச்சி என்பது தமிழின் இன்றியமையாத ஒரு வரப்பிரசாதம் என்றே கூறவேண்டும்.

இதே போல சேக்கிழாரின் பெரிய புராணத்தில் நீலி பற்றிய குறிப்பு பின்வருமாறு பதிவு செய்யப்படுகிறது.

"நற்றி றம்புரி பழையனூர்ச் சிறுத்தொண்டர் நவைவந்
துற்ற போதுதம் முயிரையும் வணிகனுக் கொருகாற்
சொற்ற மெய்ம்மையுந் தூக்கியச் சொல்லையே காக்கப்
பெற்ற மேன்மையி னிகழ்ந்தது பெருந்தொண்டை நாடு"

இதில் உயிர் துறந்தவர்களது நாவன்மையுடன் ஊர்ப்பெருமையும் பேசப்படுகிறது.

அடுத்ததாக உமாபதி சிவாச்சாரியாரின் சேக்கிழார் புராணம் என்கிற இலக்கியத்தில் நீலியின் கதை மிக விரிவாகப் பேசப்படுகிறது. இத்தனை விரிவாக நீலியின் கதை எந்த ஒரு பழந்தமிழ் இலக்கியத்திலும் பேசப்பட்டிருக்கவில்லை.

"மாறுகொடு பழையனூர் நீலி செய்த
வஞ்சனையால் வணிகனுயிர் இழக்கத் தாங்கள்
கூறிய சொல் பிழையாது துணிந்து செந்தீக்
குழியில் எழுபதுப
பேரும் முழுகிக்கங்கை
ஆறணி செஞ்சுடைதிருவா லங் காட்டப்பர்
அண்டமுற நிமிர்ந்தாடும் அடியின் கீழ் மெய்ப்
பெறும் பெறும் வேளாளர் பெருமை எம்மால்
பிரித்தள விட்டிவள வெனப் பேசலாமோ"

இது பழைய மரபுகளில் இருந்து உதிர்த்த கதைகள். அவை பழைய உபரிக் கதைகளையும் வேளாளர்களின் பெருமையையும் மட்டுமே பேசின. இதனை மரபின் பண்பாட்டின் தொடர்ச்சி என்று நாம் வரையறுக்கலாம்.

இந்த நீலி என்ற தொன்மம் நவீன இலக்கியத்தில் எவ்வாறு பிரதிபலித்துள்ளது என்பதை ஜெயமோகனின் காடு நாவலில் வரும் ஒரு பகுதியைக் கொண்டு குறிப்பிட வேண்டும். காடு நாவல் முதல் காதல் என்ற உணர்வினை மிக மென்மையாக வெளிக்காட்டிய நவீன இலக்கியப்பதிவு. ஜெயமோகன் எழுதிய கொற்றவை மற்றும் காடு ஆகிய இரண்டு நாவல்களும் தமிழ் இலக்கியத் தொல் மரபின் தொடர்ச்சிகள். அவ்வகையில் காடு நாவலில் உள்ள நீலி பற்றிய கருத்துக்கள் மிகவும் நவீன புனைவுக்குள் உட்பட்டது.

"தான் கண்ட பெண்ணுக்கு தரைவரை நீண்ட கரிய கூந்தல் எனவும், பச்சை ஒளியூட்டும் கண்கள் எனவும், ரத்தமாக சிவந்த உதடுகள் கொண்டிருப்பதாகவும் அவள் கூறுகிறாள். வெட்டி வந்த காஞ்சிர மரத்தோடு அந்த வனநீலி ஒட்டி வந்துள்ளது என மாந்த்ரீகவாதி கண்டு பிடித்து சொல்கிறார்.

வனநீலியை விரட்ட மிகப்பெரிய சாந்தி பூஜை நடத்தப்படுகிறது. வெளியேறும் நீலியை கட்ட ருத்ரசாந்தி பூஜையும் நடத்தப்படுகிறது. வெட்டி வைத்த எருமைத் தலையில் வந்து நீலி அமர்ந்தாள். எருமையின் காதுகள் அசைந்தன. கண் விழிகள் விழித்து உருண்டன. நூற்றியெட்டு உயிர்பலி தந்து சாந்தி செய்யப்பட்ட பிறகு நீலி ஒரு பித்தளை ஆணியில் ஆவாஹனம் செய்யப்பட்டுக் காட்டில் புதிதாக முளைத்து வந்த காஞ்சிரம் மரத்தில் அறைந்து விட்டு வருகின்றனர்"

இந்த தொல்மரபுகள் நமது அன்றாட இயல்பு வாழ்க்கையில் வந்துரையாடுகின்றன. அவை நவீன இலக்கியத்திலும் வெகுஜன மக்கள் வாழ்விலும் ஒரே அர்த்தத்தில் தான் உரையாடுகின்றன. ஆனால் அவற்றின் ஆழங்கள் மட்டுமே வித்தியாசப்படுகின்றன. இவற்றைக் கடந்து இன்றும் தமிழ்ச்சூழலில் உரையாடப்படும் இந்த நீலியின் அன்றாட சம்பாஷனைகளுக்கு திருஞான சம்பந்தர் முதல் ஜெயமோகன் வரையான இலக்கியப் பதிவாளர்களின் மெய்க்கீர்த்திகள் அளப்பரிய பங்காற்றுவன. இலக்கியமும் இலக்கியவாதிகளும் காலத்தின் கண்ணாடிகள் என்று பலர் கூறுவர். அதற்கு இந்த நீலி கதை மிக மிக எளிய உதாரணம்.

இதுபற்றி தொ.ப எழுதும் போது வெறுமனே சாதியப் பார்வையில் தான் எழுதியிருந்தார். இவற்றின் மீதான மாற்று அபிப்பிராயங்களை வெறுமனே வேளாளர் × வணிகர் என்ற மோதலின் அடையாளமாக மாத்திரமே பார்ப்பது என்பது துரதிஷ்டவசமானது. வெறும் பொருள்முதல்வாத நோக்கினுள் இலக்கியப் பதிவுகளும் தொல்லெச்சங்களும் அடங்கிவிடுவதில்லை. அவற்றின் அகப்புற விதிகள் தொடர்ந்து உரையாடலை நிகழ்த்திக் கொண்டே தான் இருக்கும். அதற்கு காடு நாவலின் அச்சிறு பகுதியை நாம் உதாரணமாகப் பார்க்கலாம் அல்லவா?

00
Comments

Popular Posts