புதியகாலமும் மனுஷ்யபுத்திரனும்

யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், மணற்கேணி, குள்ளச்சித்தன் சரித்திரம். மற்றும் கதைகள்.

எஸ்.ராமகிருஷ்ணனின் உறுபசி, யாமம், நெடுங்குருதி, உபபாண்டவம்.

எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை.

ஜோ டி குரூஸின் ஆழிசூழ் உலகு.

சு.வெங்கடேசனின் காவல்கோட்டம்.

சு.வேணுகோபால் கதைகள்.

கண்மணி குணசேகரனின் அஞ்சலை.

சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி.

மற்றும் மனுஷ்யபுத்திரனின் கவிதைகள்.

முதலான தமிழின் தவிர்க்கமுடியாத எழுத்தாளர்களின் படைப்புக்கள் பற்றி நுணுக்கமான பார்வையை முன்வைத்த விமர்சனப் புத்தகம் ஜெயமோகனின் புதியகாலம்.



இதில் மிகச் சிறப்பாக மனுஷ்யபுத்திரனின் கவிதைகள் பற்றி நவீன மற்றும் செவ்வியல் பார்வையில் அவரது படைப்பின் தனித்தன்மைகளைக் கவிதைகள் பற்றிய ஆய்வு வெளிப்படுத்தியது. இதற்கான தலைப்பு "கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்" என்று அமைந்திருந்தது. இந்த விமர்சனத்தின் எந்த இடத்திலும் தனிநபர் காழ்ப்பினை ஜெயமோகன் வெளிப்படுத்தி இருக்கவில்லை. வெறும் இலக்கியப்பார்வைதான் மிகத்தரமான மொழிநடையிலும் ஒப்பியல் மற்றும் அழகியல் நோக்கிலும் அதில் எழுதியிருந்தார்.

ஆனால் மனுஷ்யபுத்திரனின் அண்மைய தேவி கவிதைகள் பற்றியும் அதன் மீதான எதிர்வினைகள் பற்றியும் ஜெமோவின் கருத்துக்களை இன்று சில முற்போக்குப் போலிகள் இந்துத்துவப் பார்வை என்று மட்டுமே முத்திரை குத்தியுள்ளனர். மனுஷ்யபுத்திரன் திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கைப் பிரச்சாரகர். சமகாலத்தில் அவரது ஒவ்வொரு கருத்திலும்  அரசியல் உள்நோக்கம் கொண்ட வரிகளே மிகுந்துள்ளன. 2010 க்கு பின்பு மனுஷ்யபுத்திரன் எழுதியவை அநேகமாகக் கவிதைகளே அல்ல. தி.மு.க இந்து மதத்தைக் கேவலப்படுத்தி மதச்சார்பின்மை என்று போலி வேடம் போடும் ஒரு கட்சி. அதற்குள் ஒரு கட்சிப் பிரச்சாரகராய் இருந்து கொண்டு இந்துத் தெய்வங்களை மலினப்படுத்துவதை  மதம்சார் நலன் விரும்பிகள் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அத்துடன் மனுஷ்யபுத்திரன் தன்னுடைய இஸ்லாமிய அடையாளங்களைத் துறக்காத ஒருவராக அடிக்கடி தனது கருத்துக்கள் மூலம் வெளிப்படுத்தியும் வருகிறார்/ வந்துள்ளார். ஒருமுறை முஹம்மது நபிக்குக் கேலிச்சித்திரம் வரைந்தமைக்குத் தன்னை ஒரு இஸ்லாமியராக முன்வைத்துத் தனது கண்டனங்களையும் பதிவு செய்திருந்தார். அனைத்து மதங்களின் நம்பிக்கைகளிலும் மூடப்பழக்கங்கள் இருக்கவே செய்கின்றன. இஸ்லாமியப் பெண்கள் பர்தா அணிவது என்பது அந்தப் பெண்களை அடிமைப்படுத்தும் எண்ணம் கொண்டது என்று யாராவது எழுதிவிட முடியுமா?.

இன்று மழுப்பலுக்காகத் தேவி என்பது இந்துத் தெய்வங்களைக் குறிக்கும் ஒன்றல்ல என்று கூறலாம்.  ஆனால் மனுஷ்யபுத்திரன் தான் சார்ந்திருந்த கட்சியின் கொள்கைப்படி அவர்கள் இந்து மதத்தையன்றி வேறு எந்த மதங்களையும் கேலி செய்து அம்மதங்களிலுள்ள மாய்மாலங்களைப் பேசியவர்களல்ல.

இந்நூலில் மனுஷ்யபுத்திரனின் 2010 க்கு முற்பட்ட கவிதைகளைப் பற்றி ஜெ எழுதிய சில விமர்சன வரிகள் கீழேயுள்ளது. இந்த விமர்சனம் ஒன்றே போதும் மனுஷ்யபுத்திரனின் சிறந்த கவிதைகளையும் அரசியல் மனத்தையும் வரையறுக்க. இவை அரசியல் தவிர்த்து ஜெமோ எழுதிய இலக்கிய அழகியல் விமர்சனம். "கடவுளற்றவனின் பக்திக் கவிதைகள்" என்ற இந்தக் கட்டுரை இதுவரைக்கும் மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பற்றி எழுதப்பட்ட மிக முக்கியமான கட்டுரைகளில் ஒன்றாகவே கருதலாம். கட்டுரையின் ஒரு சிறு பகுதி கீழேயுள்ளது:

"மனுஷ்யபுத்திரன் கவிதைகளை தமிழின் எழுச்சிவாத அழகியல்க் கூறு நவீனக் கவிதைக்குள் அடைந்த வெளிப்பாடு என்று கூறலாம். எழுச்சிவாதத்தின் கட்டற்ற இலக்கிய வடிவம், நேரடியான உணர்ச்சி வெளிப்பாடு, உச்சப்படுத்தும் போக்கு ஆகியவற்றின் மூலம் உருவானவை அவரது கவிதைகள். சுகுமாரன் கவிதைகளைவிட மேலும் நெகிழும் தன்மை கொண்டவை. அந்தவகையில் நெகிழ்ச்சியையே அழகியலாகக் கொண்ட தமிழ் பக்திக் கவிதைகளுக்கு சமகால நீட்சியாக அமைபவை அவை. ஆனால் நவீன அரசியல் மனத்தால் வெளிப்படுத்தப்படுபவை. கடவுளையும் ஆன்மீகத்தையும் வெளியேற்றிவிட்டு அங்கே அரசியலைக் குடியேற்றிக் கொண்ட மனம் அது"

Comments

Popular Posts