பயணியின் சுவடுகளும் காட்சியென்று பல நினைவுகளும்.


ஒரு நிரந்தர பணி கிடைத்ததும் பலர் கேட்கும் கேள்விகளில் ஒன்று இதற்கு முன்பு என்ன வேலை செய்து கொண்டு இருந்தீர்கள் என்பதுதான். நான் இரண்டு பதில்கள் வைத்திருப்பதுண்டு. ஒன்று நான் ஒரு வாசகன் என்பதும், மற்றையது யாத்திரீகன் அல்லது பயணி அல்லது ஊர் சுற்றுபவன் என்பதும்தான். இதனைக் கேட்பவர்களின் புரிதலுக்கு அமைய  இடம், பொருள், ஏவல் என்ற மட்டில் வைத்துச் சொல்வதுண்டு. வாசகனாக இருக்கும் போது வீட்டை விட்டு வெளியே வராத சமைந்த பெண்ணின் மனம் போலவும், பயணியாக ஊரைச் சுற்றும் போது விடலைப் பொடியன்களின் மனநிலையுடனும் என்னை மாட்டி விட்டுக் கொள்வதுண்டு. இந்த இரண்டாகவும் இருக்கும் போது எனக்கான கடமைகள் எவை என்று எந்த கட்டுப்பாடும் இருந்துவிடவில்லை. அதே நேரம் ஒரு நிரந்தர பணியில் இணைந்த பின்னர்தான் முன்சொன்ன இரண்டையும் முகாமை செய்து மூன்றாவதாக உள்ள பணியை இந்த இரண்டுக்குள்ளும் மேலாதிக்கம் கொள்ள விடக்கூடாது என்ற வழக்கத்தை வைத்திருக்க முயல்வதுண்டு.  

"பயணத்தில் உற்சாகமான ஒரே அம்சம் வீட்டுக்குத் திரும்பி வருவதுதான்" என்று கலாப்ரியா ஒருமுறை கூறியிருந்தார். அதே போல "இடத்தையும் மனிதர்களையும் நாம் அறியும் போது அந்த அறிதல் சார்ந்து அவை குறுகி விடுகின்றன" என்று ஜெயமோகன் தனது பயணக்கட்டுரைகளில் கூறும் மேற்கோள்களில் ஒன்றுண்டு. இந்த இரண்டு கருத்துக்களிலும்   பயணத்திலுள்ள ஒற்றுமையும் வேற்றுமையும்  சொல்லப்படுகிறது. ஒன்று பெருவெளியிலிருந்து ஓய்வினைச் சேருதல். மற்றையது ஓய்வற்ற வெளியின் உள் அர்த்தங்களைப் புரிந்து கொள்ளுதல். இவை இரண்டும் ஒரு பயணத்தின் பொதுவான அம்சங்கள்தான்.

( திருக்கோணேச்சரம் சிவன் சிலை )
ஆரம்பத்தில் கூறியதுதான், வாசகனாக ஒருவன் தனது பொறுமையையும், பயணியாகத் தனது அக வெளிகளையும் விஸ்த்தரித்துக் கொள்ள முடியும். முன்னதும் பின்னதும் ஒருவனது அன்றாட நினைவுகளையும் நினைவோடைகளையும் பின் தொடர்ந்து வரும் நிழல்கள்தான்.
பாரதி கூறிய "காலமென்றே ஒரு நினைவும் காட்சியென்றே பல நினைவும்" என்ற வரியில் இதனை வைத்துப் பார்த்தால் சூனியம்தான் ஸ்திரமாக மையமிடும். ஆனாலும் பயணத்தின் பாதை நீண்டு கொண்டே தான் இருக்கும்.

அநேகமான எனது பயணத்தின் தெரிவுகளில் மலையால் ஆன குறிஞ்சி நிலமும் கடலால் சூழப்பட்ட நெய்தல் நிலமும் வயல்களாலும் காடுகளாலும் குளங்களாலும் நிரப்பப்பட்ட மருத நிலமும் எப்போதும் இருப்பதுண்டு. நெய்தல் நிலத்தின் பார்வைக்கு என்னைக் கொண்டு சேர்ப்பது எனது முதன்மைத் தெரிவாகவே இருக்கும்.


( கோயிலின் திசையில் கடலின் தொலைவு )
கிழக்கு மாகாணத்திலுள்ள திருகோணமலைக்கும் அதன் எல்லையாக வடமாகாணத்திலுள்ள முல்லைத்தீவுக்கும் செல்லும் பயணங்கள் எப்போதுமே பொதுவாக அயர்ச்சி தராதவை. இதற்கு முதன்மையான காரணம் மத்திம தூரம். அடுத்தது பாதைகளைச் சூழவுள்ள காடுகள். இறுதியாக அரச கொள்கைக்கு அமைவாக அமைக்கப்பட்ட பாதைகளின் ஒழுங்கு. வவுனியாவிலிருந்து திருகோணமலைக்கும் வவுனியாவிலிருந்து முல்லைத்தீவுக்குமான தூரம் கிட்டத்தட்ட ஒரே அளவானதுதான். வவுனியா-திருகோணமலை- முல்லைத்தீவு-வவுனியா என்ற ஒழுங்கில் பயணத்தை அமைக்கும் போது நேர விரயத்தைக் குறைத்துக் கொள்வதுடன் பயணத்தின் போக்கு திருப்தி தரக் கூடியதாகவும் அமையும்.

( குளக்கோட்டன் சிலை )
2009 க்கு முன்னர் இலங்கையின் மாவட்டங்களுக்கு இடையில் பயணம் செய்துவிட்டு வீடு திரும்புவது என்பது மிக அரிதான சாதனைகளில் ஒன்றாகவே இருந்து வந்தது. ஒரு பக்கம் அரசாங்கமும் இன்னொரு பக்கம் பயங்கரவாதமும் மோதிக்கொண்ட இக்கட்டான சூழல் அது. அதனை இன்று நாம் காணமுடியாது. இலங்கைப் பிரஜைக்கு அரசியலமைப்புச் சட்டத்திலுள்ள, இலங்கையின் எப்பாகத்துக்கும் யாரும் சென்று வரலாம். யாரும் எங்கும் வசிக்கலாம் என்ற கருத்தின் செயற்பாட்டு ரூபத்தை இன்று நாம் கண்ணெதிரே காணமுடியும். உயர்தரம் படித்துக் கொண்டிருந்த போது ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களுக்குச் சார்பான ஒன்று என்ற ஒற்றைப்படையான கருத்தினை நம் இளைஞர்கள் மத்தியில் அன்றைய தமிழ் போராட்டத் தலைமைகள் தீவிரமாகப் போதித்து வந்தன. அப்போது அதிதீவிர ஆட்சேர்ப்பு நடந்தது. எனது உயர்தரப் படிப்பு முடிந்தபோது யுத்தமும் முடிவுற்றிருந்தது. முற்றிலும் வன்முறையை நம்பி இயங்கிய ஒரு தீவிரவாதக் குழுவினை நாமும் கண்ணை மூடிக் கொண்டு ஆதரித்து வந்தோம். இதனை இந்த இடத்தில் ஏன் சொல்கின்றேன் என்றால், இரண்டாயிரங்களின் மத்தியில் சமாதானம் சீர்குலைந்து பயங்கரவாதிகள் சிங்கள மக்களின் பேரூந்துகளை வெடிவைத்துத் தகர்த்து அவர்களுக்கான பயிர்ச்செய்கைத் தண்ணீரை வழங்க மாட்டோம் என்று இடைமறித்த போது யுத்தம் மிகக் கொடூரமாக ஆரம்பமாகத் தொடங்கியது. அக்காலத்தில் எல்லைப்புறக் கிராமத்தைச் சேர்ந்த சிங்கள இளைஞர்கள் பலர் இராணுவத்தில் இணையத் தொடங்கினர். இந்த இளைஞர்களிடம் இருந்தது முற்றிலுமான சிங்கள வெறி. அதற்குக் காரணம் எல்லைப் புறக் கிராமங்களில் வாழ்ந்த ஏழைச் சிங்களவர்களின் படுகொலைகள்தான். உதாரணமாக வவுனியாவிலிருந்து திருகோணமலை போகும் வழியில் கெப்பதிக்கொல்லாவ என்ற ஒரு இடம் உள்ளது. அங்கு 2005 இன் பின்னரும் முன்பும் புலிகள் நிகழ்த்திய அட்டூழியங்களும் படுகொலைகளும் ஏராளமாகும். 2006களில் புலிகள் பேரூந்துக்கு குண்டு வைத்த போது பல சிங்களப் பாடசாலை மாணவர்கள் பலியாகினர். இது ஒட்டுமொத்த சிங்களவர்களின் வெறியைத் தூண்டிவிட்டது. இது போலப் பல சம்பவங்கள் தொடர்ந்து நடந்தன. இதற்குச் சார்பாக அப்போது ஆட்சியிலிருந்த அரசாங்கம் சிங்கள கிராமத்து இளைஞர்களிடம் வெறியை ஊட்டி வளர்த்தது. பெறுபேறு புலிகள் மேற்கொண்டதை விட பலலட்சம் மடங்கு கொடூரமான முறையில் யுத்தம் முடிக்கப்பட்டது. தமிழ் வெறி அழிக்கப்பட்டு அதன் மீது சிங்கள வெறி படுத்துக் கொண்டது. எல்லைப் புறச் சிங்களக் கிராமங்களைக் கடந்து  செல்லும் போது ஒரு வித குற்றவுணர்வு பட்டு வீழும். இன்னமும் வெறி குறையாத சிங்களவர்களைக் காணமுடியும். ஒப்பீட்டளவில் நட்பாகப் பழகும் சிங்கள பௌத்தர்களையே அதிகளவில் காண முடியும்.

( கோணேச்சரம் லிங்கம் )
திருகோணமலை என்றதும் இந்துக்களின் புனிதத் தலமான திருக்கோணேச்சரம்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும். இலங்கையில் இரண்டு பிரதான இந்துக் கோயில்கள் பௌத்தர்களின் மேலாண்மைக்கு உட்பட்டுள்ளது. ஒன்று திருக்கோணேச்சரம். மற்றையது தெற்கிலுள்ள கதிர்காமம். இவற்றின் பொதுத் தன்மை யாதெனில், இந்துத் தமிழர்களின் மேற்பார்வையிலுள்ள ஏனைய கோயில்களை விடவும் பௌத்த சிங்களவர்களின் மேலாண்மைக்குட்பட்ட இவ்விரு தலங்களும் சுத்தமாகவும் அதன் இயற்கைத் தன்மையிலும் அப்படியே உள்ளது என்பதுதான். உதாரணமாக மன்னாரிலுள்ள திருக்கேதீச்சரத்தை எடுத்தோம் என்றால் அங்கு அத்தலத்தின் கண்ணியத்தைச் சமீப காலமாகக் கெடுக்கும் வேலைகளையே பலர் செய்து வருகின்றனர். வெளிப்படையாகச் சொல்வதென்றால் கிறிஸ்த்தவ  பிஷப்புகளின் மேலாண்மைக்கு உட்பட்ட மன்னாரில் இந்துக் கோயில்களின் புனிதப் பகுதிக்குள் கிறிஸ்த்தவ தேவாலயங்கள் அமைக்கும் போக்கு அதிகரித்துள்ளது. சைவத்துக்குள் கிறிஸ்த்தவம் அடங்கும் என்று தமிழ்த் தேசியவாதிகள் இதனையும் பூசி மெழுகத் தொடங்கியுள்ளனர்.


( மான்கள் )
திருக்கோணேச்சரத்தின் வடக்குப் பகுதியும் கிழக்கு பகுதியும் கடலால் ஆனது. தென் கிழக்குப் பகுதியில் இராவணன் வெட்டை என்று பலரால் நம்பப்படுகின்ற மலைப் பிளவு ஒன்று உள்ளது. அதற்கு அருகில்தான் குளக்கோட்டனின் சிலையும், பிரம்மாண்ட லிங்கம் ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது. கோணேச்சரத்தின் மத்தியில் பிரம்மாண்டமான சிவனின் சிலை ஒன்று கட்டி முடிக்கப்படுகின்றது. அத்துடன் அந்த சிலை கர்நாடகத்தில் கட்டப்படுகின்ற சிவனின் சிலைகள் போன்ற கட்டுமான வடிவம் கொண்டதாகும். இந்து மதத்தின்  ஒரு பிரிவான சைவத்தின் முழுமுதற் கடவுளான சிவன் பற்றிய பிம்பம் வெறுமனே தென்னாட்டுக்கு மட்டும் உரியதல்ல. அந்த வழிபாட்டு மரபு காஷ்மீர், பெங்காளம், ஒடிசா போன்ற இடங்களிலும் உள்ளது. இந்து என்ற சொற்பதத்தினை ஆங்கிலேயர் கொணர்ந்தனர் என்பதற்காக தமிழர்கள் இந்துக்கள் அல்ல என்று கூறும் மொன்னைத் தனமான விவாதங்கள் ஒரு போதும் பெறுமதியற்றவை. தொ.பரமசிவன் தனது சமயங்களின் அரசியல் என்ற நூலில் சொல்கிறார் கிறிஸ்த்தவ, இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறிக்கவே ஆங்கிலேயர் இந்து என்ற சொற்பதத்தினைக் கொண்டுவந்தனர் என்று. ஆனால் ஆங்கிலேயரால் கொணரப்பட்ட பல திரிபுகளை இவர்கள் ஏற்றுக் கொள்கின்றனர். உதாரணமாக ஆரிய-திராவிட வாதம்.  ஆனால் ஒரே வகையான வழிபாட்டு முறையாலும் தரிசனங்களின் வடிவாலும் உந்தி எழுப்பப்பட்ட கூட்டு மதங்களின் நம்பிக்கைகளின் கோவையை இந்து என்று ஏற்றுக் கொள்ள மாட்டோம். அது பார்ப்பணியத்தின் மதம் என்று கூச்சலிடுவது வெறும் சப்பைக் கட்டுத்தான். அதாவது மதமாற்றங்களை ஊக்குவிப்பதற்கான ஆயுதம்தான் இது. ஸியா, சன்னி, சலாபி என்றுள்ள இஸ்லாமிய மதத்தவர்கள் தம்மை குறித்த தனி அடையாளங்களால் அழைப்பதில்லை. அவர்களின் மதம் இஸ்லாம் என்றாகிறது. அதே போலத்தான் கத்தோலிக்கம், சபை போன்றவற்றால் ஆன கிறிஸ்த்தவமும் தம்மை தனித்துப் பிரித்துக் கொள்வதில்லை. ஆனால் இங்குள்ள மூடத் தமிழ்த் தேசிய வெறியர்கள் தம்மை சைவர்கள் என்று மட்டும் பிரித்துக் கொண்டு நிறுவனமயப்பட்டுள்ள ஏனைய மதங்களின் வெறியை எதிர்கொள்ள முடியாமல் திணறுகின்றனர். சொல்லப் போனால் மகாயான, தேராவாத என்றுள்ள பௌத்த பிரிவினரின் ஆன்மீக தேடல்கள் வெவ்வேறானவை. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பௌத்தம் என்றாகிறது. இங்கு இந்து என்ற கூட்டுக்குள் இணையவிடாமல் தடுப்பவர்கள் அல்லது பிழையான வழியைக் காட்டுபவர்கள் இரண்டு பேர்தான். அவர்களது நோக்கங்கள் இரண்டாகவும் உள்ளன. ஒன்று இனத் தூய்மைவாதத் தேசியவாதிகள். இரண்டு மதமாற்றக் காரர்கள். முன்னவர்களது நோக்கம் தனிநாடு மற்றும் தனித்தேசியம். பின்னவர்களது நோக்கம் பணத்துக்கான மதமாற்றம் மேற்கொள்வது. இதனை இங்கு ஏன் தெளிவாகக் கூற வேண்டியுள்ளது என்றால் இந்துக்களின் புனிதத் தலம் திருக்கோணேச்சரம் என்று கூறியதும் பலர் அது சைவர்களின் கோயில் என்று வம்படியாக மொன்னைக் கருத்துக்கள் கூறத்தொடங்கினர். அவர்களுக்கு ஓரளவென்றாலும் மதங்களின் அரசியலாக்கத்தைப் புரிய வைப்பதற்கான விளக்கமாகவும் இதனைக் கூறலாம்.
திருகோணமலையில் காட்டு மான்களை அதிகம் காணமுடியும். அவை வளர்ப்பு மான்களாக கோயில்களிலும், கடற்படைத் தளங்களிலும், பொலிஸ் நிலைய வளாகங்களிலும் மிரட்சியான கண்கள் கொண்டு உலாவித் திரிகின்றன. ஒன்று இரண்டு என்றுதான் நினைத்திருந்தோம். ஆனால் அவற்றின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40-60 வரை இருக்கின்றது. இவற்றை வேட்டையாடுவதோ தாக்குவதோ பாரதூரமான குற்றமாகக் கருதப்படுகிறது. இவை நேரடியான இராணுவ மேற்பார்வைக்கும் கோயில் நிர்வாகத்தின் பார்வைக்கும் உட்பட்டு உள்ளது. சில மான்களை அருகில் அழைத்ததும் விர்ரென்று தாவிக் குதித்து ஓடுகின்றன. அதில் மிக இளைய மான்கள் சில  அருகில் வந்து கையை மணந்து பார்த்தும் செல்லும் வெள்ளந்தியான மனம் கொண்டவையாகவும் உள்ளன. அப்போது தேவதேவன் கூறிய ஒரு கவிதைவசனம்தான் ஞாபகம் வந்தது. "அமைதி என்பது வந்தமர்ந்த பறைவையினால் அசையும் கிளையோ"  இங்கு பறவை என்பதை மான் என்றும் கிளை என்பதை மனம் என்றும் பொருத்திப் பார்த்து ஒருவிதமான லௌகீக சூழலுக்குள் ஆட்படுத்திக் கொண்டிருந்தேன். உன்னதமான மனம் என்பது என்னவென்று அதன் தீண்டலில்தான் உணரலாம். சண்டையிட்டு நீண்ட காலத்துக்குப் பிறகு சந்தித்த காதலனின் கண்களை நேரடியாகப் பார்த்துப் பேசமுடியாத தவறிழைத்த காதலி போல அந்த மானின் மிரட்சியான பார்வைக் கோணம் நெளிந்தது.

திருகோணமலை என்பதை திருமலை என்றும் பலர் சொல்வதுண்டு. ஆங்கிலத்தில் Tricomalee என்பார்கள். திருமலை என்றதும் பலர் கருதுவது திருப்பதியைத்தான். திரு என்பதே தமிழ் மூலச் சொல்தான். ஸ்ரீ என்பதன் தமிழ் வடிவம்தான் திரு. சிங்களத்தில் கரு என்று சொல்வார்கள். தமிழில் உயர்திரு சிங்களத்தில் தமிழில் அதிகரு என்றும் அழைப்பதுண்டு. எனது பதிவுகளில் அநேகமாகத் திருமலை என்றே குறிப்பிடுவதுண்டு. அதற்கு மிக எளிய காரணம்தான். அது திருக்கோணேச்சரம் என்ற மனதிற்கினிய அந்தத் திருத்தலம்.( முல்லைத்தீவு சுற்றுலா பகுதி )
திருகோணமலைப் பயணத்தை முடித்துக் கொண்டு முல்லைத்தீவுக்குச் சென்றபோது அங்கு தற்போது யுத்தச் சுவடுகள் இல்லாமல் மக்கள் இயல்பான வாழ்க்கையைத் தேடி முன்னகன்கின்ற ஒரு போக்கினை அவதானிக்க முடிகிறது. ஆனால் அவர்களது முன்னகர்வுக்கு மூலதனம் இல்லாமையால் வாழ்வாதாரம் அற்றவர்களாக இருப்பவர்களையும் காணமுடிந்தது. இதற்கு பிரதேச செயலக மட்டத்தில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்றும் பலர் கூறினர். கடற்கரைகளை அண்மித்துள்ள இடங்களில் சுற்றுலாப் பயணத்துறையினை மேம்படுத்த பணக்கார வர்க்கத்தினர் resort அமைக்கும் பணியினை முடுக்கி விட்டுள்ளனர்.  இது ஒட்டுமொத்த தேசிய பொருளாதாரத்துக்கு சாதகமான ஒரு விடயமாக அமையும். அங்கு பலருக்கு வேலை வாய்ப்புக்களும் வழங்கப்படுகின்றது. வழங்கப்படவுள்ளது. முல்லைத்தீவின் பிரதான வீதிகள் மிகத் தரமான முறையில்  செப்பனிடப்பட்டு அமைக்கப்பட்டுள்ளது. தேசத்தை இணைக்கும் வீதிகள் வடக்கிலிருந்து தெற்கையும் தெற்கிலிருந்து வடக்கையும் இணைக்கும் ஒரு குறியீடாக மாறியுள்ளன. ஒரு சிலர் இன்னமும் புலிகள் வருவார்கள் என்று நகைச்சுவை செய்தபடி இருந்தனர். அதில் ஒருவர் கூறினார். மீண்டும் புலிகள் உருவானால் தான் இராணுவத்தில் இணைந்து புலிகளுக்கு எதிராகப் போராடுவேன் என்று. ஏன் என்று கேட்டதற்கு கடந்தகாலப் பேரழிவிற்குப் பாதிக் காரணம் புலிகள்தான் என்று வரலாற்று உதாரணங்கள் மூலமும் ஆதாரங்கள் மூலமும் கூறினார். அப்படிக் கூறியவர் தொன்னூறுகளில் மாத்தையாவின் பிரச்சனையில் மாத்தையா புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் அவ்வமைப்பை விட்டு விலகிய ஒருவர். அப்படி விலகிய போதும் அவர் மீது புலிகள் விசாரணை என்ற பெயரில் கொடுமையை அரங்கேற்றியுமுள்ளனர்.

( முல்லைத்தீவு கடற்கரை )

( நாயாறு  )

நாயாறு வீதி

( முல்லைத்தீவு  மீன் வாடி )

வெறுமனே பயணத்தில் இயற்கையைத் தரிசித்து விட்டுத் திரும்புவதே நோக்கமாக இருந்தது. ஆனால் ஜெயமோகன் கூறியது போல " இடத்தையும் மனிதர்களையும் நாம் அறியும் போது அந்த அறிதல் சார்ந்து அவை குறுகி விடுகின்றன" மனிதர்களையும் அறியும்போது பழைய நம்பிக்கை சார்ந்த விடயங்கள் பல குறுகத் தொடங்கி விடுகின்றன. அல்லது பழைய குறுகிய விடயப் பரப்புக்கள் விரிவடைகின்றன.  பயணம் எனக்குக் பயிற்றுவித்தது இயற்கையை மட்டும் பார்த்து விட்டு வா என்றல்ல. உள்ளே குறுக்கி வைத்துள்ளவற்றை விரிவு செய்விக்கவும், உள்ளே விரிந்த நம்பிக்கையாக உள்ள பிழைகளை குறுக்கிவிடவும்தான்.

00

Comments

Popular Posts