கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

 
கம்பீரமும், தீர்க்கதரிசனமும்; அ.முத்துலிங்கம் எனும் கதையாளன்

சொல்வனம் தமிழக இதழில்.....

நல்ல கதை என்பது எலியின் உயிர்வாதையையும்,
பூனையின் கொடும்பசியையும் ஒரே சமயத்தில் சொல்வதாகும்.
-யாரோ-


சிறுகதை படிப்பது கம்பிமேல் நடப்பதைப் பார்ப்பது போன்றது. அதையே எழுதமுனைவது கம்பிமேல் நடப்பதற்கே ஈடானது என்று ஒருவர் சொன்ன கருத்து முத்துலிங்கத்தின் சிறுகதைகளை வாசிக்கும் போது ஞாபகம் வருகிறது. அசுத்தமான சிந்தனைகள்(Impure Thought) கதாசிரியனின் கரங்களில் அற்புதமாக மாற்றமடைகிறது. அதுவே பின்னாட்களில் Immortal கதைகளாகவும் ஆகிவிடுகிறது. புதுமைப்பித்தனின் ‘பொன்னகரம்’ சிறுகதை அதற்குத் தக்க சான்றுபகரும்.

கதாசிரியர், கட்டுரையாளர், கல்வியியலாளர், நேர்முகவாளன் என்று முத்துலிங்கத்தின் இலக்கியப் படைப்பாளுமை பன்முகம் கொண்டது. இவரது சிறுகதைகள் மீது அநேகமானோருக்குத் தனிவிருப்புண்டு. அதில் நானொன்றும் விதிவிலக்கானவனல்ல. ஈழத்தவர், உலகம் சுற்றிய நாடோடி என்பதைத் தாண்டி இவர்தம் அனுபவப் பின்னணி அவரது கதைகளில் சதா ஓங்கி ஒலித்துக் கொண்டேயுள்ளது. மிகைப்படுத்தியும், யதார்த்த நியதிக்குள் அடங்கிவிடுவதுமான பல சிறுகதைகள் முத்துலிங்கத்தின் படைப்புலகம் எனலாம். இந்தவருடத்தின் ஜனவரி 19 ம் திகதியன்று இவர் தனது எண்பதாவது வயதையும், இலக்கியத்துக்குள் வந்து 53 வருடங்களையும் பூர்த்திசெய்கிறார். இடையில் 31 வருடங்கள் தொழில்சார் பணியிலும் இயங்கி இருந்தார்.

சினுவா ஆச்சிபி (Chinua Achebe) என்ற கிழக்கு நைஜீரியாவின் எழுத்தாளரையும் இங்கு அறிமுகப்படுத்தி விடுவோம். நைஜீரியாவின் முதன்மைப் பல்கலைக்கழகமான இப்தான் இல் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவர்தான். காலனித்துவத்தின் முந்தைய மற்றும் பிந்தைய வாழ்க்கை நிரல் சம்பந்தமாக “Things Fall Apart” என்ற நாவலை எழுதியிருந்தார். உலகம் முழுமைக்கும் இந்நாவலின் புகழ் நாளுக்குநாள் பெருகியிருந்தது. தனது இக்போ (Igbo) இனமக்கள் சார்ந்த ஒருவரை அதில் நாயகனாக்கி அழகியல் ரீதியில் அந்நூலை அமைத்திருந்தார் சினுவா. அவர் எழுதிய நாவல் முற்றும் ஆங்கிலத்திலேயே அமைந்திருந்தது.

சினுவாவை இவ்விடத்தில் அறிமுகம் செய்யக்காரணம். முத்துலிங்கம் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்த போதும் ஆங்கிலத்தில் தனது படைப்புக்களைப் புனைந்திருக்கவில்லை. (ஒரு நேர்காணலில் தான் தனது பள்ளிவயதிலேயே ஆங்கிலத்தில் சிறுகதை எழுதியதாகவும் கூறியிருந்தார்.) அங்கிருந்து அடைந்த விடயங்களை அனுபவ முதிர்ச்சியின் வழிகொண்டு இங்களித்திருந்தார். ஆனால் சினுவா அப்படியானவரல்ல. தனது தாய்மொழியான Igbo வினை விடுத்து ஆங்கிலத்தில் மட்டுமே படைப்புக்களை உலகுக்கு அளித்திருந்தார். “உங்களுடைய படைப்புக்கள் இக்போவில் மொழிபெயர்கப்பட்டுள்ளதா?” என்ற கேள்விக்கு “இக்போவில் ஏராளம் கிளைமொழிகள் கொண்டது. மொழியுடன் சிலபல பிரச்சனைகள் உள்ளது அதனால் மொழிபெயர்க்கப்படவில்லை.” என்ற பதிலைக் கூறியிருந்தார். இது நிச்சயமாக ஒரினக்குழும எழுத்தாளன் தன்மொழியில் தனது படைப்புக்களை எழுதியிருக்கவில்லை. உலகமொழியில் எழுதித் தனது மொழியை நிராகரித்து உலக அங்கீகாரம் பெற்றிருந்தார். இது ஒரு தவறும் அல்ல. அந்த மொழி செவ்வியல் இலக்கியங்களோ பண்பட்ட இலக்கண மரபுகளோ இல்லாததாக இருக்கலாம். ஆனால் முத்துலிங்கம் அப்படியல்ல. அவர் எந்த தேசாந்திரங்களுக்குப் போனபோதும், மூன்று தசாப்தங்கள் வெளிநாடுகளில் வாழ்வினை நகர்த்தியிருந்தாலும் தனது மொழியினை, மண்ணின் காயங்களை. பிரதலுக்குள்ளான நேசங்களைக் கைவிட்டவரன்று. தொடர்ந்து எழுதி வந்துள்ளார்.

1996ம் ஆண்டு வம்சவிருத்தி என்ற இவரின் சிறுகதைத் தொகுப்பொன்று வெளிவந்திருந்தது. அதேயாண்டில் இத்தொகுப்பு இந்திய ஸ்டேட் வங்கியினதும், தமிழ்நாடு அரசினதும் முதற்பரிசினைப் பெற்றிருந்தது. அதிலிடம்பெற்ற “பீனிக்ஸ் பறவை” என்ற கதை தமிழுக்கு மிகமுக்கியமான ஒரு கதை எனலாம். இதனைப்பற்றிப் பேசியிருந்தவர்கள் சற்றே குறைவு என்று நினைக்கின்றேன்.

ஒரு Experimental சிறுகதை என்றுதான் இதனைக் கூறவேண்டும். தனது இலக்கியப் பரிசோதனைக்குப் பீனிக்ஸ் பறவையைப் பயன்படுத்தியுமுள்ளார். சிலநேரங்களில் புதுமைப்பித்தனின் கதானுபவமும் இணைந்துவருவது தவிர்க்க முடியாத ஒன்றாகும். கி.ராவின் கதைசொல்லிமுறையுடன் முரண்படா வகையில் முத்துலிங்கத்தின் அநேக கதைகள் இருந்துள்ளன. இது அவற்றினின்று சிறிதளவு வேறுபட்டுள்ளது. அந்த வேறுபாடு வெறுமனே கதையின் கருவில் மட்டும்தான். மற்றையவை இயல்பான தளத்தில் இருந்துவிடுகிறது.

“நான் திருகோணமலை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிக்கிட்டு அர்லாண்டா விமான நிலையத்தில் வந்திறங்கினேன். ………..ஸ்டோக்ஹோமில் நான் வந்திறங்கிய வருடம் 2018. என் மகன் என்னை விட்டு பிரிந்து ஸ்வீடனுக்கு படிக்கப்போன வரும் 1998. அப்ப அவனுகு வயது 15. என்னால் நம்பவே முடியவில்லை. இருபது வருடங்கள் என் ஒரே மகனைப் பிரிந்து வாழ்ந்திருக்கிறேன். இப்போது அவனுக்கு வயது 35; மணமாகி ஆறு வயதில் ஒரு மகனும் உண்டு….”


என்று கதையின் தொடக்கம் அமைந்து விடுகிறது. வாசிக்கத் தொடங்கும் போதே சுவாரஸ்யத்தை மூட்டிவிடுகிறார் முத்துலிங்கம். இன்றுவரையிலும் திருகோணமலையில் சீனவளைகுடா விமானநிலையம் (China bay) ஒன்றுதான் உண்டு. அதுவும் ராணுவத் தேவைகளை மட்டுமே பூர்த்திசெய்கிறது. பிறகெங்கே சர்வதேச விமானநிலையம் என்ற அதிர்ச்சியை ஈடுசெய்ய 2018ம் வருடத்தை அடுத்த பந்தியில் அளித்துவிடுகிறார்.

“தொழிநுட்ப உலகில் சிக்கிக்கொண்ட பாசப் பிணைப்புணர்வுகள்” என்ற ஒற்றை வசனத்தால் இச்சிறுகதையின் பூரணத்தையும் அடக்கிவிடமுடியும். சிறுகதையின் அகமாட்சி என்பதே அதை எவ்விதத்தில் எங்ஙனம் வெளிப்படுத்தப்படுகிறது என்பதுதான். ஒரு ஆங்கிலப் படம் பார்க்கும் போது அதில் வரிசைப்படுத்தி வரும் திரில்லர் உணர்வில் கதையின் இறுவரைப் பயணிக்கக் கூடியதாயுள்ளது. ஹாலிவூட் திரைப்படங்களில் பலவருடங்கள் தாண்டிச் சென்று எதிர்காலத்தைப் பார்ப்பது போன்ற ஒரு கதை இது. ஆனால் கதை சுவீடனில் நடந்தாலும், தமிழ்ப்பண்பாட்டினாலான தளங்களை கதையின்கூடவே எடுத்தும் செல்கிறார். Avant-Garde எனும் புதுமைவிரும்பும் எண்ணக்கரு கதையின் அம்சமாகும். அதில் சமூக, பொருளாதார, வயோதிக, அரசியல் முதலான இன்னோரன்ன அனுபவங்களை அகத்துவங்கொண்டு சொல்லிய சிறப்பு “அ.மு” வையே சாரும்.

பௌராணிகக் கதைகளையும், விஞ்ஞான உலகின் நடப்புகளையும் அரங்குதல் போன்ற தாயுணர்வுடன் இக்கதை நகர்ந்து செல்கிறது. 1996ம் ஆண்டில் எழுதப்பெற்ற இக்கதையில் சில தீர்க்கதரிசன விடயங்கள் அக்காலப்பரப்பினைத் தாண்டிக் கூறப்பட்டிருந்தது. அவற்றுள் சில யதார்த்தத்துடன் ஒட்டிவிடுகின்றன. பல மறுதலிக்கப்படுகின்றன. காலம்காலமாக சுவீடன் சனத்தொகையைத் தளம்பாமல் பேண பல யுக்திகளைக் கையாண்டு வருகிறது. அதன் தற்போதைய சனத்தொகை 95 லட்சமாகும். 1996ம் ஆண்டுக் கதையில் 2018ல் சுவீடனின் சனத்தொகை 110 லட்சம் என்று முத்துலிங்கம் கூறியுள்ளார். புள்ளிவிபரங்களைப் புரட்டும் போது ஒரு துல்லியம் வெளிப்பட்டுள்ளது. 20 வருடங்களுக்கு முன் எதிர்வு கூறியது ஏறத்தாள சரியாகவே அமைந்துள்ளது. இன்னுமொரு வருடத்தில் அது சாத்தியமாகலாம்.

முத்துலிங்கம் புராணக்கதைகள் மீது அதீத விருப்பம் கொண்டவர். சிறுவயதில் தாயார் தனக்குச் சொல்லித் தந்ததாகவும், அதனை இன்னும் தான் மறக்கவில்லை என்றும் அவரது உணர்வினை அநேக கதைகளில் ஊகிக்கலாம். கதையில் அர்ஜீன் என்று மகனுக்கு வைத்த பெயர் மகாபாரதத்தின் பின் தொடர்தலையும், கர்ணன், விதுரன், அஞ்ஞாதவாசம் முதலான சொற்பிரயோகங்கள் அதன் மேற்கண்ட தொடர்ச்சியையும் சொல்கிறது. அத்துடன் தனது பேரன் கதாபாத்திரத்துக்குக் ஹோர்கன்(Horgan) எனும் பெயரை அளித்திருந்தார். ஐரிஷ் மொழியில் இதன் அர்த்தம் வீரன் அல்லது வெற்றியாளன் என்பதாகும். அவர் Western Canon இல் பிற்கால வாழ்க்கையை வாழ்ந்து பெற்றதன் தொடர்ச்சியாகக்கூட இதனைக் கருதலாம்.

இங்வார் கார்ல்ஸன் சுவீடன் நாட்டின் பொப்பிசைப் பாடகர். (இதே பெயரில் அந்நாட்டின் பிரதமராக ஒருத்தர் இருந்துள்ளார். அது வேறு) அவரது சில கிட்டார் இசைத் துணுக்குகள் ராகத்தின் முழுமையான சாயலுக்காட்பட்டிருக்கும். அதனை ‘ஸ்வாலா ஸ்வாலா’ என்ற பாடலுடன் ஒப்பிட்டுக் கூறுகிறார். இவ்விடத்தில் முக்கியமான விடயம் யாதெனில் ‘ஹோர்கன்’ என்ற பெயர் வாயில் வராத பெயரென்று சொல்லி விட்டு, கார்ல்ஸனின் பெயர் முதல் அவரது பாடல் வரிவரை கூறப்படுகிறது. இது புதுமைப்பித்தனின் யுக்தி. ஆரம்பத்தில் கதாபாத்திரம் கதை சொல்வது போன்ற தொடர்ச்சியும், கதாசிரியருடன் இணைந்து கதாபாத்திரம் ஒரு விளக்கம் கூறுவதுமான பாணி.

“நான் வியந்த இன்னொரு காட்சி வழியிலே விளம்பர போர்டுகள் ஒன்றும் இல்லாததுதான். அர்ஜுனிடம் அது பற்றி விசாரித்தேன். அரசாங்கம் விளம்பரங்களையெல்லாம் பத்து வருடங்களாக ஒழித்து விட்டதாக அவன் சொன்னான். அதனால் பொருள்கள் மக்களுக்கு இருபது வீதம் மலிவாகவே கிடைக்கிறதாம்…….”
-பீனிக்ஸ் பறவை-
எவ்வளவு அழகானதொரு பொருளாதார முன்னெண்ணக்கரு. தற்போது இந்த விளம்பர இம்சை நமது நாடுகளில் அதிகரித்துள்ளன. மேற்குலகில் தேவைக்கேற்ப பயன்படுகின்ற அதேவேளை தேவையற்ற விளம்பர கருவை இங்கனுப்பி விடுகின்றனர். கி.ராவின் படைப்புக்களில் கதையின் தொடக்க பகுதிகளில் வியக்கத்தக்க ஆனால் நம்பத்தகுந்த வார்த்தை/வசன உரைநடை மேலோங்கியிருக்கும்.

“ஒருநாள் தெருவில் ஒரு தீப்பெட்டிப் படம் ஒன்றை லட்சுமி கண்டெடுத்தாள். படத்தில்
ஒரு நாய் இருந்தது. அழுக்காக இருந்ததால் படத்தில் எச்சிலைத் துப்பி தன்
பாவாடையால் துடைத்தாள். இதனால் சில இடங்களில் இருந்த அழுக்கு படம் பூராவும்
பரவிற்று. ஆனால் லட்சுமிக்கு மிகவும் திருப்தி, படம் சுத்தமாகிவிட்டதென்று.”
கதவு– 1959 – கி.ரா


முத்துலிங்கம் மற்றும் ராஜநாராயணனின் கதை சொல்லும் யுக்திகள் ஒரே விதமாக இருந்தாலும், கி.ராவின் கரிசல் வெளிக்குள் அ.மு வந்தவருமல்ல. அ.முவின் Experimental மற்றும் பிரபஞ்ச பொதுமைக்குள் கி.ரா சென்றவருமல்ல. ஆனால் இருவருமே நிறைவான கதைசொல்லிகள்தாம்.

கல்வி மூலம் பெற்றதையும் அனுபவம் மூலம் கடந்ததையும் தனது சிறுகதைகளில் கொண்டு வரும் முத்துலிங்கம் இச்சிறுகதையில் இரண்டையும் கொஞ்சம் அதிகமாகவே கையாண்டுள்ளார். கணினி, தொலைபேசி, GPS, சூரிய சக்தி, IT.பட்டி, கதிற்றோன், DNA என்று பல விஞ்ஞான-தொழினுட்ப உலகின் காத்திரமான விடயங்களை அன்றைய நாளில் கூறியிருந்தார். அவையனைத்தும் இன்று அருகிருக்கும் தொலைநோக்கு யுக்திகள் என்பதாக அமைந்துவிடுகிறது.

Hybridization என்றொரு சொற்பதமுண்டு. இதன்பொருள் ஒட்டாக்கம்/கலப்பினம் என்பதாகும். மேற்குலக எழுத்தாளர்களின் புனைவுலகில் இந்தச் சொற்பதத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தை வெளிக்கொணரும் படைப்புக்கள் அதிகளவில் வெளிவந்துமுள்ளன. ஜெப்ரி எகலைட்ஸ் (Jeffery Eugenides) என்ற எழுத்தரின் Middlesex என்ற நாவல் இதற்கு உதாரணமாகும். இதே போல அ.மு கதையில் உணர்வுநிலை மெய்ப்பாட்டைக் கொணர முயன்றதால் தமிழ்-சுவீடிஸ் என்ற Hybridization ஐ சற்றே குறைத்து நகர்த்தியுள்ளார். எனினும் முத்துலிங்கம் போன்றோரால் ஒட்டாக்க முறையிலான கதையினை நன்கு கதைப்படுத்திவிட முடியும். ஏனெனில் அதற்கான அனுபவச் சுவைகள் அவரிடம் அதிகமாகவே உள்ளன.

 

ஆனால் இக்கதையில் லெமிங்குகள் தற்கொலை செய்துகொள்ளப் போகின்றன என்பதனை மனிதப் பெருக்கத்தையும் அடுத்த சந்ததிக்கு வழிவிடுவதற்கான கதையின் தாற்பரியத்தைச் சுவாரசியமாக்குவதற்கும் இந்த முறையில் முத்துலிங்கம் கூறியுள்ளார் எனக் கருதலாம். கதையில் வரும் கவிதைகூட அதனை நியாயப்படுத்தும்.

“…….கால்கள் துவள
நீந்தி நீந்தி
மாய்ந்துகொள்ளப் போகிறீர்களே!
வரும் சந்ததிகளுக்கு
வழிவிடும் தியாகிகளே!
சற்று நில்லுங்கள்
உங்கள் முகங்களை
நான்
இன்னொரு முறை
பார்த்துக் கொள்கிறேன்,
நினைவில் வைக்க.”


சிறுகதையின் உணர்வுப் பீலியை கவிதை கொண்டு உராய்தெடுக்கும் இன்னொருவர் கி.ரா. கதையின் மிகையுணர் தருணங்களில் கவிதைகளை இணைத்து விடுதலாகும். இதனை புனைவுப் பின்தொடர்தல் எனவும் கருதலாம்.

“கருப்பும் சிகப்புமாய் – நான்
கலந்துடுத்தும் நாளையிலே
சிகப்பும் கருப்புமாய் – நான்
சேர்ந்துடுத்தும் நாளையிலே…
…….”


கி.ராவின் கோமதி(1964) சிறுகதையில் வரும் கவிதையாகும். உரைநடை காலத்துக்கு முன்னர் கவிதைகள்தான் கதைசொல்லும் முறையை ஆண்டுவந்தன. உரைநடைகளின் ஆதிக்கம் ஆரம்பித்த பிறகு கவிதைகள் புனைகதைகளின் உரைநடைகளில் அரிதாகவே இயங்கி வந்தது. அவற்றை ஒரு உப வடிவம் என்றே கூற முடியாத அளவுக்கு இருந்தது. 1964ல் எழுதப்பட்ட கோமதி சிறுகதையில் மரபுக்கவிதையும், 90களில் எழுதப்பட்ட சிறுகதையில் இடம் பெறும் புதுக்கவிதையும் சிறுகதைகளின் மாற்றத்தைப் பிரதிபலித்திருந்தது என்பதனைக் காட்டிலும், கவிதைகளின் வடிவ மாற்றத்தையும் வெளிக்காட்டியுள்ளது என்றே கருதமுடியும்.

மனித உணர்வுச் சங்கிலியின் அன்றாட உள்ளுணர்வைத் தெரிவிக்க அஃறிணை பயன்படுகிறது. பின்னொரு இடத்தில் பீனிக்ஸ் பறவை தொடர்பான கதையும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்த கதையின் Reality Effect உம் இங்கு வெளிப்பட்டு நிற்கிறது. இறந்த சாம்பலிலிருந்து திரும்பப் பிறக்கும் தன்மையுள்ள பீனிக்ஸ் பறவையை கதையின் தலைப்பாக்கியமை ஒரு குறியீடுதான். கதையில் கருணை மரணம் சட்டபூர்வமாக்கப்பட்ட நாட்டில் சனத்தொகையினைச் சமப்படுத்த முதியவர்கள் தங்களது கருணை மரண அறிக்கையை நீதிமன்றில் சமர்ப்பித்து மரணத்தைத் தழுவலாம். “ஹன்னிங்ஸ்ரன் ஒரு சிற்றுரையாற்றினார்” “லெம்மிங் பறவை” “பீனிக்ஸ் பறவை” என்பன ஒரு குறியீடுதான்.

கதையிலுள்ள மகனுக்கு ஒரு பிள்ளை இருக்கிறான். அவர்கள் இன்னொரு மகவுக்கு விரும்புகின்றனர். அதனைக் கணினி மூலம் பிறப்பிக்க சனத்தொகை மட்ட விதிகளை மீறவியலாது. ஆதலால் ஒரு ரத்த பந்தமுள்ள நபரின் கருணை மரணம் அவர்களுக்குத் தேவைப்படுகிறது. அதற்கு அவனது தாயின் விருப்பினை மகனும் மருமகளும் விரும்பியும் விரும்பாமலும் எதிர்பார்க்கின்றனர். அங்கு ஒரு விருந்தும் வைக்கப்படுகிறது. ஹன்னிங்ஸ்ரன் ஆற்றிய சிற்றுரையை இந்த மூதாட்டியும்
சொல்வது போல கதை முடிவுறுகிறது.

“……..என் சிற்றுரையை வழங்க நான் விருந்தினர்களை நோக்கி மெதுவாக நடந்தேன்.”


சட்டை செய்து வாசிப்போர்க்கு ஒருவரின் முதுமை மரணம் எங்ஙனம் அசட்டை செய்யப்படுகிறது என்பதையும் தொழிநுட்ப உலகம் உயிரையும் இரும்பாகப் பார்க்கிறதோ என்ற பிணக்கத்தை மனதெங்கும் தந்துவிடுகிறது.

நீங்கள் வாசகர் எண்ணிக்கையை வைத்தா கதைகேட்போர் தொகையை கொண்டா உங்கள் கதையை எழுதுகிறீர்கள் என்ற கேள்வியை ஒவ்வொரு கதாசிரியரிடமும் கேட்கும் போது அதற்கு வாசிப்பவரை வைத்தே என்ற பதில் அநேகமாக வருவது தவிர்க்கமுடியாத ஒன்றே. அ.மு கதைகளை வாசிக்கும்போது நமக்கும் கூட இதுபோலதொரு கேள்வியை அவரிடம் கேட்டால் என்ன பதில் வரும் என்பதற்கு அவரது படைப்புக்களே ஆதாரம்.

ஈழத்துக் கதைகளில் அழகியலுக்கும் அரசியலுக்கும் இடைப்பட்ட கொந்தளிப்பு என்பது ஈழ எழுத்தாளர்களின் எழுத்தை வேறு தளத்தில் நிறுத்துவதாக சிலகாலம் அமைந்திருந்தது. கதைகளில் சொல்லும் செய்தியைச் செய்திபோலச் சொல்லாமல் தெரிவிப்பதில் கதையின் உட்பாகங்களைக் குடைந்து, சொற்களைச் சரியான உபகதைகளுடன் இணைத்து , மொழிகக்கான வெற்றியைச் சுவைக்க அளித்து அ.மு கதைகள் பொறுப்புக் கூறுகின்றது. அரசியல் பொருளாதாரம் என்பது கலைஞர்க்கு முக்கியமன்று. தான் ஒரு கலைஞன் என்பதே அவரது கடப்பாடாகும். இந்த வகையில் முத்துலிங்கமும் தொடர்ந்திருக்கிறார் எனில் மிகையன்று.

கம்பீரம்மிக்க(Magnificence) வாய்மொழிக்கதைகள்(Oral) போலத்தான் இவரது கதைகளும். அதற்கு அவரது சிறுவயது வாழ்க்கை காரணமாயிருக்கலாம். அவர் வழங்கும் நறுக்கான உணர்வுகள் கதையை வாசித்தபிறகும் நமது உள்ளத்தை மீளவும் வாசிக்கத் தூண்டுகின்றது. சிலவேளைகளில் அது வாசகர்களை நோக்கிய அம்பாகவும் இருக்கலாம்.


http://solvanam.com/?p=48274

Comments

Popular Posts