எல்லா சிவப்பும் உந்தன் கோபம்


"எல்லா சிவப்பும் உந்தன் கோபம்" என்று அலைபாயுதே படத்தின் பச்சை நிறமே பாடலின் இடைவரியாக மேலுள்ள வரி இடம்பெற்றிருக்கும். தனக்குப் பிடித்த பாடல் வரிகளில் மிக முக்கியமான ஆன்மீகத்தன்மை கொண்டது இது என்று ஜெயமோகன் ஒருமுறை (2012)  கூறியிருந்தார். ( ஜெ மிகக் கடுமையாக விமர்சிக்கும் பாடலாசிரியர் எழுதிய வரி என்று தெரிந்தபோதும் அதனை அவர் பாராட்டத் தயங்கியிருக்கவில்லை. இன்றைய கட்டுரையில் அரசாங்கத்தை விமர்சிப்பதும் அவருடைய பன்மைத்தன்மைக்கு உதாரணமாகக் கூறலாம். இதுவேறு பகுதி என்பதால் இதனை இப்போதைக்குத் தவிர்ப்போம்.)

இதே போன்ற ஒரு ஆன்மீகத்தன்மை கொண்ட செய்யுளைத் திப்புத்தோளார் என்ற குறுந்தொகைக் கவிஞர் சங்ககாலத்தில் பாடியிருப்பார். காந்தள் என்பதை இங்கே கார்த்திகைப்பூ என்று நாம் கூறுவதுண்டு. அதனை வீரத்தின்- கோபத்தின் அடையாளமாகத் தமிழர்கள் காலந்தோறும் குறித்து வைத்திருப்பர். அதற்கு மிக நீண்ட வரலாறும் உண்டு. குறுந்தொகையின் முதல் பாடலாக இடம்பெற்றுள்ள இந்த பாடல்தான் அதற்கு முதலாவது ஆதாரம்.

"செங்களம் படக் கொன்று அவுணர்த் தேய்த்த செங்கோல் அம்பின் செங்கோட்டு யானை கழல் தொடி சேஎய் குன்றம்
குருதிப் பூவின் குலைக் காந்தட்டே"

தலைவியிடம் கார்த்திகைப் பூவைக் கொணர்ந்து தலைவன் வழங்கி அவளது காதலை அடைய முனைகிறான். ஆனால் தலைவி அதனை வாங்க மறுத்து விட்டு அதற்கான காரணங்களைப் பின்வருமாறு கூறுகிறாள். போர்க்களம் எங்கும் குருதியால் சிவப்பாகுமாறு செய்து எதிர்ப்பவர்களைக் கொன்று அசுரர்களை அழித்தவர் முருகன். குருதி படிந்த அம்புகளும், குத்திக்கொன்று சிவந்து நிற்கும் யானைகளும் உடையவன் முருகன். அவன் கோயில் கொண்டுள்ள இந்தக் குன்றம் முழுமையாகக் காந்தள் பூக்களால் நிறைந்துள்ளாகும். ஆகவே எனக்கு இந்தக் காதல் இலஞ்சம் தேவையில்லை என்று மறுத்துவிடுகிறாள்.

இந்தக் குறுந்தொகைச் செய்யுளுக்குப் பொருள் இவ்வளவுதான். ஆனால் அதன் திசைகள் கார்த்திகைப்பூவின் இதழ்கள் போல ஆறு ஏழு பக்கமாக விரிவடைகிறது.

எளிய உதாரணமாக கடல் இருக்கும் மாவட்டத்தவர்கள் கடலில் சென்று காற்று வாங்குவதில்லை. அல்லது மிகக் குறைவாகவே கடலைத் தேடிச் செல்வர். கடல் அரிதாக உள்ளவர்கள் அடிக்கடி கடலைத் தேடிச் செல்ல எண்ணுவர். உதாரணமாக வவுனியாவில் கடல் இல்லாததை ஒரு குறையாக எண்ணி கடலுள்ள மாவட்டத்தின் கரைகளைச் சென்று ரசித்து விட்டு வரும் பலரை இங்கு நாம் காண்பதுண்டு. அந்தப் பலருள் நானும் ஒருவனாக இருப்பதுண்டு. அதுபோலத்தான் இந்தப் பாடலின் காந்தள் மலரும். காந்தள் மலரால் நிறைந்துள்ள இடத்தில் இருந்து கொண்டு அதனைத் தலைவி சூடுவாளாக இருந்தால் மாற்றான் கொடுத்து இவள் சூடியுள்ளாள் என்று ஊரார் நினைப்பார்கள் என்று தலைவி மறுக்கிறாள். அல்லது மொத்தமாகக் காந்தளால் சூழப்பட்ட இடத்தில் இருந்து கொண்டு "எல்லா சிவப்பும்" இவளை இன்னும் சேரவில்லை என்று பிறர் கருதுவார் என்ற கௌரவக் குறையாகவும் இருக்கலாம். 

'எல்லா சிவப்பும் உந்தன் கோபம்' என்ற தற்கால வெகுஜனப் பாடல் வரியை சங்ககாலம் தொட்டு காந்தளுடன் பொருத்திப் பார்த்தால் அகம்-புறம்: காதல்-வீரம் என்று வளர்ந்து வந்துள்ளதை நாம் அவதானிக்கலாம்.

இலங்கையில் தமிழ்த் தனிநாடு கோரியவர்கள் தமது தேசியப்பூவாகக் காந்தள் பூவையே அறிவித்திருந்தனர். அதுபோல சங்ககாலத் தலைவிக்குக் தலைவன் காந்தள் பூவைப் பரிசாகக் கொடுக்கிறான். அதனை ஏற்கமறுக்கும் தலைவி எல்லா சிவப்பும் சேர்ந்தவளாக இருக்கிறாள். அதற்கு அவள் வீரத்துடன் ஒட்டிக் கதை சொல்கிறாள். அது பிற்காலத்தில் அகம்-புறம் என்ற தன்மைகள் கலந்து ஆன்மிகமாகிவிட்டதுதான் காலம் நமக்களிக்கும் களிம்பு. இரண்டாயிரம் வருடமாகத் தொடரும் இந்தத் தமிழ் மரபு இந்திய உபகண்டத்தில் மிக ஆச்சரியம் அளிக்கும் நாகரிகம். அதற்குத் துலாபாரம் இந்து ஞானமரபு என்பதை ஏற்றுத்தான் ஆகவேண்டும். 

எல்லா சிவப்பும் உந்தன் கோபம்!!!! எவ்வளவு ஆக்கினை தரும் ஆன்மீக-காதல்-வீரம் கலந்த ஒரு வரி. இதற்கு அஸ்திவாரம் போட்டது சங்ககாலத்துத் திப்புத்தோளார் என்பதை மறுக்கமுடியாது.

00

Comments