வடபுலத் தமிழர்களின் மாட்டுவண்டிச்சவாரியும் தமிழர் பாரம்பரியமும்.வன்னியில் பிறந்து வளர்ந்து முப்பது வயதைத் தாண்டிய எனக்கு மாட்டுவண்டிச்சவாரியை எனது முப்பதாவது வயதில்  இருந்துதான் கண்டு ரசித்து கொண்டுவருகிறேன் என்பது ஒருவகையில்  வருத்தமளித்தாலும், நூல்களின் வழியிலும், பயணங்களின் மூலமும், ஏனைய ரசனை மட்டங்களைக் கொண்டும் உயர்வான நிலையில் கலைகளின் ஊடாக மனதை லயிக்கத் தெரிந்த எனக்கு மாட்டுவண்டிச் சவாரி மீது ஆர்வம் ஏற்பட்டது என்பது அந்தப் பாரம்பரிய  விளையாட்டின் முக்கியத்துவம்,  தமிழர்களின் ஒன்றுகூடும் விதம் என்பவற்றைப் பார்க்கும் போது எனக்கு இன்னொரு வகையில் பெருமகிழ்வை ஏற்படுத்தியுள்ளது என்றே கருதமுடிகிறது. 


மிகநீண்ட காலமாக இலக்கிய வாசிப்புக்கள், இயற்கையைப் புகைப்படமாக்கல், பயணங்கள் என்று நகர்ந்து கொண்டிருந்த எனக்கு இவை மூன்றும் வழங்கும் உற்சாகத்தினை இந்தச் சவாரித்திருவிழாவும் ஏற்படுத்துகின்றது என்றே கூறவேண்டும். 

சங்க இலக்கியங்களில் ஏறு தழுவுதல் என்ற விடயம் கலித்தொகை, ஐங்குறுநூறு போன்ற தொகை நூல்களின் செய்யுட்களால் அறிந்து கொள்ள முடிகிறது. "கொல்லேறு சாட இருந்தார்க்கு எம் பல்லிரும்
கூந்தல் அணைகொடுப்பேம் யாம்" என்ற கலித்தொகைப்பாடலில் ஏறுதழுவும் ஆண்மகனுக்கே பெண்களை மணம்முடித்துக் கொடுப்போம் என்று  கூறப்படும் அதேவேளை, "கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆயமகள்" என்று காளைகளை அடக்காத  ஆண்களை அடுத்த பிறவியிலும் கூட பெண்கள் விரும்புவதில்லை என்று இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகால இலக்கியப் பாரம்பரியத்தில் காளைமாடுகளை அடக்கும் விதம் சமூகரீதியில் பெற்றிருந்த முக்கியத்துவம் கூறப்பட்டுள்ளது. இதேபோல ஆநிரை கவர்தல் என்ற விடயமும் சங்க காலத்தில் இருந்தமையையும் இலக்கியங்களின் வழியாக அறிந்து கொள்ள முடிகிறது. 
பின்வந்த திருக்குறளில் கூட ஏறுபோல பீடுநடை என்று காளையின் நடையுடன் ஆண்மகனின் நடை ஒப்பிக்கப்பட்டுள்ளது. இலக்கியங்களின் வழியாக நாம் அறிந்த வரலாறு இரண்டாயிரம் ஆண்டுகளாகும். இந்த ஏறுதழுவுதல் என்ற விடயம் பின்னாட்களில் மாடுகளைப் பழக்கிச் செலுத்துதல் என்றாகியுள்ளது. உழவுக்குப் பின்னராக பண்டங்களை ஏற்றவும் பயணம் செய்யவும் பின்னர் அதுவே ஒரு விளையாட்டாகவும் மாற்றியுள்ளது. 


ஈழத்தின் வடபுலத்தில் நடைபெறும் மாட்டு வண்டிச்சவாரி 1930களில் இருந்தே மிகப்பிரபலமாக இருந்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன. மாடு என்பது தமிழ்ச்சொல். சவாரி என்பது உருது மொழிச்சொல்லாகும். வண்டி முதலியவற்றில் செல்லுதல் என்பது அதன் பொருள். நீளமான குறித்த தமிழ்ச்சொல் தமிழுக்கு வந்த பிறமொழிச் செல்வாக்கினால் மாட்டுவண்டிச் சவாரி என்று அழைக்கப்படலாயிற்று. 


முதன்முதலில் நான் வவுனிக்குளம் பகுதியில் நடைபெற்ற மாட்டுவண்டிச் சவாரியினைப் பார்வையிடும் வாய்ப்புக் கிடைத்தது. வவுனிக்குளம் எனக்கு மிக அண்மித்த உறவுள்ள ஊர். எனது தாயாரின் பூர்வீகம் பனங்காமம். அதற்கு அயலூர்  வவுனிக்குளம். பாலி ஆற்றின் மூலம் நீரைப்பெறும் குளம் வவுனிக்குளம். இந்த இடங்கள் கடந்த காலங்களில் நடைபெற்ற யுத்த மோதல்களில் ஒரு குறியீடாகக் கவிஞர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. குறிப்பாக நிலாந்தனின் வன்னி மான்மியம் என்ற கவிதை நூலில் கொந்தக்காரன் குளத்தில் இருந்து நட்டாங்கண்டல் வழியாக மடுவுக்கு போதல் பற்றிய குறிப்புகள் மிகச் சுவாரசியமானவை. வாசித்த நூல்களைப் பற்றிப் பேசப்போனால் பக்கங்கள் போதாது. 

மிக அருமையான ஒழுங்கமைப்புடன் தாடிமாமா என்றழைக்கப்படும் ஊர்ப்பெரியவர் ஒருவரின் ஓராமாண்டு நினைவாக அந்தச் சவாரி நடைபெற்றது. இந்தச் சவாரியினை அவரது மகன்மார் ஒழுங்கமைத்திருந்தனர்.  இரண்டு பக்கமும் கயிறு கட்டி அதற்குள் பார்வையாளர்களை உட்செல்ல விடாமல் கட்டுக்கோப்புடன் இந்நிகழ்வினை அமைத்திருந்தனர். 

இரண்டு மணிக்குப் போட்டிகள் ஆரம்பமானது. உ பிரிவு காளைகள் நான்கு சோடிகள் ஒவ்வொரு கட்டமாகக் களமிறக்கப்பட்டன. இவை மூன்று அல்லது நான்கு வருடங்கள் வயதுள்ளவை.  400 மீட்டர் கொண்ட சவாரித் திடலின் தூரத்தை A பிரிவுக் காளைகள் 18 தொடக்கம் 24 நொடியிலும் B பிரவுக் காளைகள் 21 தொடக்கம் 29 நொடிகளிலும்  C பிரிவுக் காளைகள் 23 தொடக்கம் 30  நொடிகளிலும் உ பிரிவுக் காளைகள் 30 தொடக்கம் 38 நொடிகளிலும் கடக்க வேண்டும் என்பது பொதுவான நியதியாகும். 

இரண்டு பற்களும் பற்கள் உடைக்காத கன்றுகளும் D பிரிவில் அனுமதிக்கப்படுகின்றன. இரண்டு பற்களுக்கு மேற்பட்ட காளைகளும் நலம் போடப்படாத காளைகளும் C பிரிவில் அனுமதிக்கப்படுகின்றன. நலம் போடப்பட்ட காளைகள் A,B பிரிவில் அனுமதிக்கப்படுகின்றன.

காளைகள் ஓடும்போது ஒன்றோடு ஒன்று மோதி விபத்து நேர்வதைப் பல விடந்தைகளில் கண்டுள்ளேன். குறிப்பாக வவுனிக்குளம், வற்றாப்பளை, மட்டுவில் விடந்தைகளில் இந்த விபத்துக்களைப் பலமுறை கண்டுள்ளேன். அவற்றைப் புகைப்படமும் ஆக்கியுள்ளேன். 

வடக்கில் வவுனியா மாவட்டத்தைத் தவிர ஏனைய இடங்களில் பல விடந்தைகளில் மிகச் சிறப்புடன் மாட்டு வண்டிச் சவாரியினை ஒழுங்கமைத்து நடாத்தி வருகின்றனர். குறிப்பாக வவுனிக்குளம், வட்டக்கச்சி, விசுவமடு, பூநகரி, வற்றாப்பளை, மட்டுவில், நீர்வேலி, வட்டுக்கோட்டை என்பன பிரபலமான சவாரித் திடல்களாகும். இவற்றுள் வற்றாப்பளையில் கண்ணகை அம்மனை ஒட்டியுள்ள விடந்தையின் வடக்கில் பனைமரங்கள் நடப்பட்டு அவற்றின் வழியே வந்த ஆலமரங்கள் நிழல்தரும் அழகான அமைவிடத்திலுள்ளது. அதேபோல வட்டக்கச்சியிலுள்ள விடந்தை கண்ணன் கோவிலுக்கு மேற்காக அமைந்துள்ளது. இந்த விடந்தையின் கிழக்கு மற்றும் மேற்குப் பக்கங்கள் கிளுவை வேலிகள் அடைக்கப்பட்ட ஒரு இடமாகும். இரு பக்கமும் மரங்கள் நிறைந்துள்ள நிழல் பகுதி. விசுவமடு சற்றே ஒடுக்கமான திடல். பிள்ளையார் கோவிலுக்கு வடகிழக்கில் அமைந்துள்ளது. பூநகரி திடல் பரந்தன்-பூநகரி B357 வீதியின் தெற்கிலுள்ளது. பரந்த வெளியில் அமைந்துள்ளது. மேற்கில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. வவுனிக்குளம் திடல் வவுனிக்குளம் குளத்தின் வடக்கில் உள்ள ஒரு சிறப்பான திடலாகும். இதன் மேற்குப் பக்கமாக நிழல்தரு மரங்கள் வைத்துப் பராமரித்தால் மேலும் அழகுபெறும். 

தமிழ் மக்கள் அதிகம் உள்ள வவுனியாவில் சவாரித் திடல்கள் அமையப் பெறாமை துரதிருஷ்டவசமானது. வவுனியாவுக்கு வடக்கிலுள்ள ஓமந்தையில் சவாரித் திடல் அமைப்பது தொடர்பாகக் கிராமத்தின் இளைஞர்களுடன் பேசியிருந்தேன். இங்கு வருகின்ற புதுவருடத்துக்கு முன்பாக ஒரு திடல் அமைத்து சங்கங்கள் பதிவு செய்து சவாரியினை வைப்பது தொடர்பாகக் கலந்துரையாடியிருந்தேன். இளைஞர்கள் மிகவும் ஆர்வத்துடன் இருப்பதைக் காணமுடிந்தது. விரைவில் வவுனியாவிலும் ஒரு திடல்  அமைத்தே தீரவேண்டும் என்ற உறுதியில் உள்ளேன். 


மாட்டு வகைகள்

தமிழகத்தில் எண்பத்து ஏழு வகையான காளை வகைகள் இருந்ததாகக் குறிப்புகள் உள்ளன.  அவையாவன,

அத்தக்கருப்பன். அழுக்கு மறையன் ஆணறிகாலன் ஆளைவெறிச்சான்: ஆனைச் சொறியன், கட்டைக்காளை கருமறையான் கட்டைக்காரி, கட்டுக்கொம்பன் கட்டைவால் கூளை, கருமறைக்காளை கண்ணன் மயிலை, கத்திக்கொம்பன் கள்ளக்காடன், கள்ளக்காளை, கட்டைக்கொம்பன், கருங்கூழை, கழற்வாய்வெறியன், கழற்ச்சிக்கண்ணன், கருப்பன், காரிக்காளை, காற்சிலம்பன். காராம்பசு, குட்டைச்செவியன். குண்டுக்கண்ணன், குட்டை நரம்பன், குத்துக்குளம்பன், குள்ளச்சிவப்பன், கூழைவாலன் கூடுகொம்பன் கூழைசிவலை, கொட்டைப் பாக்கன். கொண்டைத்தலையன் ஏரிச்சுழியன், ஏறுவாலன், நாரைக்கழுத்தன். நெட்டைக்கொம்பன் படப்புபிடுங்கி, படலைக்கொம்பன், பட்டிக்காளை, பனங்காய்மயிலை பசுங்கழுத்தான் பால்வெள்ளை பொட்டைக்கண்ணன். பொங்குவாயன் போருக்காளை, மட்டைக் கொலம்பன், மஞ்சள் வாலன், மறைச்சிவலை மஞ்சலிவாலன், மஞ்சமயிலை , மயிலை, மேகவண்ணன், முறிக்கொம்பன் முட்டிக்காலன். முரிகாளை சங்குவண்ணன், செம்மறைக்காளை செவலை எருது. செம்மறையன் செந்தாழைவயிரன்,
சொறியன், தளப்பன், தல்லயன் காளை தறிகொம்பன். துடைசேர்கூழை. தூங்கச்செழியன் வட்டப்புல்லை வட்டச்செவியன், வளைக்கொம்பன். வள்ளிக்கொம்பன் வர்ணக்காளை 
வட்டக்கரியன் வெள்ளைக்காளை வெள்ளைக்குடும்பன், வெள்ளைக்கண்ணன், வெள்ளைப்போரான், மயிலைக்காளை. வெள்ளை, கழுத்திகாபிள்ளை 
கருக்கா மயிலை 
பணங்காரி, 
சந்தனப்பிள்ளை செம்பூத்துக்காரி, 
காரிமாடு, 
புலிருளம் போன்ற வகைக் காளைகளாகும். இவற்றில் பெரும்பாலானவை ஈழத்திலும் இருந்தன என்ற கருத்து உள்ளது. 

சவாரி மாட்டினைப் பழக்கி எடுப்பது என்பது மிகப்பெரிய பணியாகக் கருதப்படுகின்றது. ஒவ்வொரு கட்டமாக அதன் வகைகள் உள்ளன.
1. கன்றைத் தெரிவு செய்தல்
வடக்கில் சவாரி மாட்டினைத் தெரிவுசெய்யும் போது அவற்றை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பார்கள். 
1.நாட்டான். 
2. வன்னியான்.
நாட்டான் என்பது யாழ்ப்பாணத்திலேயே பிறந்து வளர்ந்த மாடுகளையும், வன்னியான் என்பது முல்லைத்தீவு முதல் மன்னார் வரையுள்ள வன்னிப்பகுதிகளில் பிறந்து வளர்ந்த மாடுகளைக் குறிக்கும். யாழ்ப்பாணத்து மாடுகளுக்குக் கிடைக்கும் உணவினைவிடவும் வன்னி மாடுகளுகளுக்கு அதிகளவு உணவு கிடைக்கும். தாராளமாகவுள்ள மேய்ச்சல் தரைகளே இதற்குக் காரணம். வன்னிமாடுகளை வாங்கிப் பழக்கவே யாழ்ப்பாணத்தவர்கள் விரும்புவார்கள். 

2. கன்றைத் தேற்றி உணவுகளைத் தாராளமாக வழங்கிக் கொழுக்க வைத்தல்.
மாட்டைத் தேற்றுவது தனிக்கலை என்றே கூறவேண்டும். தாய்ப்பாலை மறந்த கன்றிற்கு கறியுப்பு, தவிடு, எள்ளுப்பிண்ணாக்கு, சுண்ணாம்புத் தண்ணீர், பச்சையரிசி, பனைவெல்லம் என்பன வழங்கிக் கொழுக்க வைப்பர். 

3. மூக்கணாங்கயிறு எனப்படும் நாணயக்கயிறு இடுதல்.
இந்த மூக்குக் கயிற்றைக் குத்துவோர் பயிற்சி பெற்றவர்களாகவே இருப்பர். எனக்குத் தெரிந்து வன்னியில் இருந்த எனது பாட்டனார் ஒருவர் ஆயிரம் மாடுகளுக்கு மேல் தனது வாழ்நாளில் நாணயம் குற்றி நலம் அடித்ததாகக் கூறியது ஞாபகம் வருகிறது. இலையான் மாதங்கள் தவிர்த்து தைப்பூச நாட்களில் நாணயம் குற்றப்படும். இந்த மூக்குக் கயிறு குற்றுதல் சில நாட்கள் வலியைக் கொடுக்கும். அப்போது இதனை வளர்ப்பவர்கள் மிக அவதானமாகக் கன்றினைப் பார்க்க வேண்டும். 


4. பஞ்சாங்கங்களில் நல்ல நாள் குறித்து நாம்பனுக்கு ஏர் வைத்தலும் கைக்கயிற்றில் நடை பழக்கலும்.
நாணயக் கயிற்றின் மூலம் நாம்பனுக்கு வழங்கும் கட்டளைகளைக் கேட்டு நடக்கும் வண்ணம் பயிற்சி வழங்கப்படும். இந்த ஏர் வைத்தலின் போது நாம்பன் செய்யும் அட்டகாசங்களைக் கொண்டே அது சவாரிக்கு உகந்த ஒன்றா என்று கணிக்கப்படுகின்றது. ஏர் வைத்தல் பெரும்பாலும் உழவு, வயல் உழவு என்பவற்றுடன் நின்றுவிடும். 

5. காளைக்கு நலமடித்தல் எனப்படும் ஆண்மைநீக்கமும் குறிசுடுதலும் இடம்பெறும்.
ஆண்மை நீக்கம் செய்தால் மாடு கொழுக்கும். அத்துடன் மாட்டின் கீழ்ப்படிவுக் குணம் வளரும். குறிசுட்டால் மாட்டுக்கு நோய் வராது என்ற நம்பிக்கை உண்டு. குறி சுட்ட நோவினைப் போக்க பனங்கள்ளு பருக்கி வாழைப்பழம் வழங்க வேண்டும். சர்க்கரை கலந்த உணவும் வைக்கப்படுவதுண்டு. 

6. காளையைக் கயிற்றில் கட்டி வீதிகளில் கொண்டுவந்து நடாத்திப் பழக்குதல். 
இதுகாலவரை வயலில் உழுத காளையினை வீதிகளில் சனநடமாட்டமுள்ள இடங்களில் கைக்கயிற்றில் கொண்டு நடாத்த வேண்டும். இவ்வாறு செய்யும் போது வெருட்சித் தன்மை இல்லாமற் போகும்.

7. வண்டியில் மாட்டினைப் பூட்டுதல்.
இதனைக் கடைக்கிட்டி ஓட்டம் என்று கூறப்படுவதுண்டு. மாட்டினை வண்டியில் பூட்டி மாட்டின் துள்ளல் வெருளல் என்பவற்றுக்கு ஈடுகொடுத்து வழநடாத்த வேண்டும். இதே நேரத்தில் மாட்டுக்கு உரிய சோடி சேர்த்தலும் இடம்பெறும். இரண்டு மாடுகளும் பரஸ்பரம் தம்மை விளங்கிக்கொண்டு ஓடும் சிறப்புப் பெற்றிருக்க வேண்டும். சோடி ஒத்துழையாவிட்டால் சவாரியில் வெல்ல முடியாது. 

8. மாடு சவாரிக்குத் தயாராகும்.
பழக்கப்பட்ட மாடு முதலாவதாகச் சவாரிக்கு விடப்படும். இதனை முதலோட்டம், வெள்ளோட்டம் என்பர். முதல் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாட்டின் விலை உயரும். அடுத்தடுத்து வெற்றி பெற்ற மாட்டின் விலை மேலும் கூடும். சவாரி மாட்டைப் பழக்கி விற்பவர்களையும் பொழுதுபோக்காகக் கொண்டோரையும் சவாரித்தம்பர், சவாரிச்சுப்பர், சவாரிக்கந்தர் என்றழைப்பர்.

சவாரி மாட்டுக்கு உணவு என்பது மிக முக்கியமானது. அரிசி, கடலை, கொம்புப் பயறு, எள்ளுப் பிண்ணாக்கு, சிவப்புத் தவிடு, உழுந்து, நெல்லுமா, கடலை, பச்சை அரிசித் தவிடு, நல்லெண்ணை, முட்டை, புழுங்கல் அரிசித் தவிடு என்பன முக்கிய உணவாகக் கருதப்படும். சவாரி முடிந்ததும் சுடுநீரில் துணியை நனைத்து ஒற்றடம் பிடிப்பர். துவரந்தடியின் அடிகாயம் என்பவற்றினை ஆறவைக்க வேப்பநெய், இலுப்பைநெய், தேங்காய் நெய், கற்பூரம் என்பவற்றைக் காய்ச்சிப் பூசுவர். 


சவாரிக்குரிய வண்டில் செய்வது என்பது தனிப்பெருங்கலையாகும். வண்டிக்குரிய சில்லுகள் பூவரசு மரத்திலும் வண்டித்துலா கமுகினாலும் செய்யப்படும். நுகம் மஞ்சள் நுணாவினால் ஆனது. வண்டில்கள் பாலை, முதிரை போன்ற வைர மரங்களால் உருவாக்கப்படுகின்றது. சில்லுகளைப் பூவரசு மரத்தால் உருவாக்கி உலோகவளையம் பூசுவர். வண்டிலானது ஏழேகால் முதல் ஒன்பது அடிவரை சுற்றளவு இருக்கும். அதாவது இது சில்லின் சுற்றளவினைக் குறிக்கும்.

தமிழரசுக் கட்சியின் தலைவர் தந்தை செல்வநாயகம், அரசாங்க அலுவர் இலங்கையர் கோன் சிவஞானசுந்தரம், பி.சரவணமுத்து, ஜி.ஜி.பொன்னம்பலம், அ.அமிர்தலிங்கம், மு.சிவசிதம்பரம் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்   பலரும் சட்டத்தரணிகள் பலரும் மாட்டுவண்டிச் சவாரியினை ஊக்குவித்தனர்.  


காளைகளில் நடுச்சுழி விலங்குச்சுழி, புறாண்சுழி, பறவைச்சுழி இராஜசுழி, வழுவுச்சுழி, இராஜமந்திரிச் சுழி, முற்சுழி, பிற்சுழி, நெத்திச்சுழி என் பல வகையான சுழிகள் உண்டு.
இதில் இராஜசுழி, நடுச்சுழி இராஜமந்திரச் சுழி உடைய காளைகளே அதிக விலைபோகின்றன. நான் பார்த்த சவாரிகளி்ல் BJ  என்றொரு குறியிடப்பட்ட மாடு வியப்பூட்டு்ம் வகையி்ல் ஓடக்கூடியது.  


மாட்டுவண்டிச் சவாரி நடாத்துபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான விடயம் போட்டியில் முதலிடம் பெற்றவர்களுக்கு அளிக்கும் பரிசில்தளில் கவனம் செலுத்துவதாகும். அதாவது பலர் கூறுவது தாம் பரிசில்கள் பெறுவதற்காக மாடுகளைக் கொண்டுவரவில்லை என்றும் அது தமது பெருமை என்பதாகும். எனினும் சாதாரண பரிசில்களை விட்டு குறித்த வெற்றியாளர்களுக்குப் பெறுமதிமிக்க பரிசில்களை வழங்குவது தொடர்பாகக் கவனம் செலுத்த வேண்டும். காளைகள் மீதிருந்து சவாரி செல்வது என்பது வீரமான ஒரு காரியம். அவை உடைந்த பின்னரும் அதனை இடைவிடாது நகர்த்தி முதலிடம் பெறுவது என்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விடயமாகும். 

மாடுகள் கொடுமைப்படுத்தப் படுகின்றன என்ற ஒரு பரவலான குற்றசாசாட்டு உள்ளது. உண்மையில் நமது இடங்களில் காளை மாடுகள் பல அநியாயமாக மாட்டு இறைச்சி வியாபாரிகளுக்கு விற்கப்படுகின்றன. அவை அங்கு படுகொலை செய்யப்படுகின்றன. உணவாக்கப்படுகின்றன. இதனைவிட ஒரு கொடுமை இருக்க முடியுமா. மாடுகளை அடித்து ஓடுவது பற்றி திடலில் உள்ள வயோதிபர் ஒருவரிடம் நான் கேட்டபோது அவர் சொன்ன பதில் எனக்கு திருப்தியை அளித்தது. பிறந்ததில் இருந்து மாட்டு இறைச்சினை உண்ணாத எனக்கு உடன்பாடாக இருந்தது. அதாவது தமக்கு உணவு இல்லை என்றால் கூட தமது சவாரி மாடுகளுக்கு நல்ல உணவினை அளிக்கிறோம் என்றும் அவற்றை இங்கு அடிக்காது விட்டால் இவை அடிமாட்டுக்குச் சென்றுவிடும் என்றும் கூறினார். அவை அடித்துப் பழக்கப்படுத்தி ஒரு பண்பாட்டு விளையாட்டுக்கு ஊக்குவிக்கப்படுகின்றது. இது மிகப்பெரிய ஒரு விடயம்.  
ஒரு காலத்தில் சீனா முழுவதும் பரவியிருந்த ஆசிய யானை இன்று அங்கு கூண்டோடு இல்லாமல் போனது. ஆனால் இந்தியத் துணைக் கண்டத்திலும் இந்தியப் பண்பாடு செழித்த தென்கிழக்காசியாவிலும் பல்கிப் பெருகியுள்ளது. இதற்கான காரணத்தை அண்மையில் வாசித்த நூல் ஒன்றில் இருந்து பதில் பெற முடிந்தது. அதாவது இங்கு யானைகள் இன்னமும் அழியாமல் இருக்கக் காரணம் முடியாட்சியும் போர்த் தொழிநுட்பத்தில் அது ஈடுபடுத்தப்பட்டதும் ஆகும். சோழர் அரசில் யானைப்படை என்ற ஒன்றே இருந்தது. அதுபோலத்தான் இந்த மாட்டுவண்டிச் சவாரியும். அதாவது இதன் அழிவு இரண்டு பக்கங்களில் பாதகத்தை உண்டாக்கும். ஒன்று நம் பண்பாட்டு வேர்கள் அழிவடைதல். இரண்டாவது நாட்டு இன மாடுகள் அழிவடைதல். ஆகவே இந்தப் பண்பாட்டு விளையாட்டின் மூலம் இரண்டுவிதமான முக்கிய நிலைகள் காப்பாற்றப்படுகின்றன என்பதனை நாம் நமது சந்ததிகளுக்குக் கடத்த வேண்டும். அடுத்த சந்ததிக்குக் கடத்துவதற்கான எனது பங்களிப்பு என்பது பன்னீராயிரத்திற்கு மேற்பட்ட புகைப்படங்கள் என்னால் இதுவரை மாட்டு வண்டிச் சவாரியில் எடுத்து அனைத்து இடங்களுக்கும் காட்சிப்படுத்தியமையாகும். உங்களின் பங்களிப்பு என்ன என்பதனை முடிவு செய்யுங்கள்.


எனது சில புகைப்படங்கள்.  
மேலதிக புகைப்படங்கள். 

Comments

  1. Superb ❤️❤️

    ReplyDelete
  2. Super bro 💪💪💪

    ReplyDelete
  3. சிறப்பான கட்டுரை செம்மை மிகு வாழ்வியல்❤

    ReplyDelete

Post a Comment

Popular Posts