சோலை எனும் வாழிடம்.எந்தத் துறையில் இருந்தாலும் அதில் ஒவ்வொரு துறைக்கும்  மாஸ்டர்கள் இருப்பர். உதாரணமாக நவீன இலக்கியமும் தத்துவமும்- ஜெயமோகன், பண்பாட்டு ஆய்வுகள்- தொ.பரமசிவன், நவீன இலக்கிய ஆய்வுகள்- ராஜ் கௌதமன், சிறுகதைகள்- புதுமைப்பித்தன், பயண இலக்கியம்- அ.முத்துலிங்கம் என்பது போல இயற்கையியல் மற்றும் சூழலியல் சார்ந்த விடயங்களுக்கும் சு.தியோடர் பாஸ்கரன் உள்ளார். இவர் இலங்கை போன்ற இடங்களில் பரவலாக அறியப்படவில்லை. கிட்டத்தட்ட அய்ம்பது வருடங்களுக்கு மேலாகப் பல இயற்கையியல் சார்ந்த கட்டுரைகளையும் கள ஆய்வுகளையும் கரிசனையுடன் மேற்கொண்டு வருகிறார். அத்துடன் சினிமா பற்றிய ரசனை அனுபவங்களையும் அதிகம் எழுதியுள்ளார். கூடவே இலக்கிய ஆர்வமும் மிக்கவர்.

கே. உல்லாஸ் கரந்த் எழுதிய The Way of the Tiger எனும் நூலை கானுறை வேங்கை என்ற பெயரில் தமிழில் தியோடர் பாஸ்கரன் மொழிபெயர்த்திருந்தார். இது தமிழில் புலிகள் பற்றி சூழலியல் கண்ணோட்டத்தில் எழுதப்பட்ட சிறந்த நூல். புலிகளைப் பற்றிய முன் அறிமுகத்துக்கு இது ஒரு கையேடாகவும் இருக்கும். இதுதான் நான் முதலில் வாசித்த பாஸ்கரனின் நூல். அடுத்து சோலை எனும் வாழிடம் என்ற நூலை படித்திருந்தேன். உயிர்மை பதிப்பகம் 2014 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளது. இந்நூலில் பேசப்பட்டுள்ள விடயங்கள் உலகெங்கும் பொதுவானவை. அவை சூழலியலின் தளத்தில் இருந்து பேசப்படுகின்றன. 

வாழிடம், காட்டுயிர், விவாதம், கருத்துக்கள் என்ற நான்கு கோணங்களில் இயற்கையியல் சார்ந்த விடயங்கள் அனுபவப் பகிர்வுடன் வெளிப்படுத்தப்படுகின்றன. வெறும் கற்பனைகளுக்குள்ளும் தரவுகளுக்குள்ளும் நின்றுவிடாது சமகாலத்தில் இயற்கையின் கூறுகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் வரலாற்றில் இருந்தும் அனுபவத்தின் ஓடையிலிருந்தும் தார்மீக கோபத்தில் இருந்தும் வெளிக்காட்டியுள்ளார். நம் சந்ததிகள் அறியாத பல விடயங்களை அறிந்து கொள்ள தியோடர் பாஸ்கரனின் இயற்கையியல் கட்டுரைகள் அவசியமானவை. 

இலங்கையின் கருங்காலி மரத்துக்கு உள்ள சிறப்பு வேறு எந்த இடத்திலும் இருப்பதில்லை. இதனால்தான் 19 ஆம் நூற்றாண்டில் வெறும் நான்கே வருடங்களில் முல்லைத்தீவு பகுதியில் இருந்து ஆறாயிரம் கருங்காலி மரக்குற்றிகள் அய்ரோப்பாவுக்கும் உள்ளூரின் சில இடங்களுக்கும் ஏற்றப்பட்டுள்ளன..இது பற்றிய விடயங்களை இங்கு ஆட்சி செலுத்திய ஆங்கிலேயர்கள் எழுதிய குறிப்புகளில் காணலாம்.  
காலனிய நாடுகளில் ஆங்கிலேயர்களால் சுரண்டப்பட்ட வளங்கள் அளவுகணக்கு இல்லாதவை. இந்த வழி வந்த பழக்கமே இன்றைய மணல், கருங்கல், மரம், காட்டுயிர் வேட்டை முதலானவற்றின் சுரண்டல் என்று கூறவேண்டும். 
                                      தியோடர் பாஸ்கரன்

  வளர்முக நாடுகளில் களவாடப்படும் மிக முக்கியத்துவம் கொண்ட ஒரு கனியம் மணல். அந்த முக்கியத்துவம் அதனை அவ்வண்ணமே வைத்திருப்பதில்தான் உள்ளது. அதன் முக்கியத்துவங்களை வலியுறுத்தியும் அதனை இங்குள்ளவர்கள் எப்படி சூறையாடாகின்றனர் என்பது தொடர்பாகவும் "நதி" என்றொரு கதையை சில மாதங்களுக்கு முன்பு எழுதியிருந்தேன். பத்து வருடங்களுக்கு முன்பு எமது வயல் பக்கத்தில் உள்ள ஆற்றில் மழை இல்லாத சிறுபோக காலத்திலும் கோடை காலத்திலும் 
ஆறு பாய்ந்து கொண்டு இருக்கும். ஆனால் இப்போது அதனைக் காண முடியாது. நதிப்படுக்கையில் மணலைக் கொள்ளையடிக்கும் போது அங்கு நீர் இல்லாமல் போகிறது.  நிலத்தடி நீரையும் மேல் நீரையும் மணல் தக்க வைக்கிறது. இவற்றை அவதானிக்காமல் பெறப்படும் மணல் அருந்தும் நீரோட்டங்களையே மாற்றி அமைக்கிறது. நதியின் அகப்புறச் சூழல்களையே சிதிலமடையச் செய்கிறது. ஆற்றுப்பெருக்கும் ஊற்றுப்பெருக்கும் என்று பழைய இலக்கிய செய்யுள் உள்ளது. இதிலுள்ள இரண்டு பெருக்கிற்கும் மணல்தான் ஆதாரம். இந்நூலில் மணற்கொள்ளை பற்றிய ஒரு கட்டுரை இடம்பெறுகிறது. சூழலியல் சமநிலைக் கேடு பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனைச் சூழலியல் அட்டூழியம் என்றே குறிப்பிடுகின்றார். 

சில நாட்களுக்கு முன்பு இரண்டு இடங்களுக்குப் பயணம் செய்ததில் எனக்குத் திருப்தி இருந்தது. ஏனெனில் அங்கு இரண்டு வருடங்களுக்கு முன்பு செல்லும்போது எந்தமாதிரியாக அந்தச் சூழல் இருந்ததோ அதே போன்ற சூழல்தான் இப்போதும் அங்கு நிலவுகின்றது. இங்கே நிழல்வாகை என்று குறிப்பிடுகின்ற நாற்பது வயையான மரங்கள் இருமருங்கும் கிளிநொச்சி கோணாவில் பகுதியில்  வைக்கப்பட்டு விண்ணைப் பிளக்கும் அளவில் வளர்ந்து உள்ளன. இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஞாபகமாக தனிநபரால் எண்பதுகளில் வைக்கப்பட்டுள்ளது. இன்று இம்மரங்கள் அவ்வீதியால் செல்லும் நபர்களுக்கு ஒரு இடைத்தங்கல் முகாம் போலுள்ளது. அதுபோல மன்னார் அடம்பன் பகுதியில் விவசாயச் செய்கையின் பொருட்டு மருத மரக் கட்டைகளை இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னதாக ஊன்றியுள்ளனர். கிட்டத்தட்ட இருநூற்றுக்கும் மேற்பட்ட பெருமரங்களாக இன்று நிற்கின்றன. இன்று அவை அந்த ஊரின் Landmark. வெளியில் வெயிலடிக்கும் போது அந்த இடத்தில் மட்டும் குளுகுளு உற்சாகம் உண்டாகிவிடுகிறது. இந்த அழகு எத்தனை வருடங்கள் ஆனாலும் இருக்க வேண்டும். இயற்கையாக அழிய நேரும் போது மாற்று மரங்களை நடவேண்டும். அங்குள்ள பெரியவர்களிடம் பேசும்போது இந்த விடயத்தைக் கூறிவைத்துவிட்டே வந்தேன். 
இந்நூலில் மிக்க நலமுடைய மரங்கள் என்ற கட்டுரை மரங்களின் முக்கியத்துவத்தை சுவைபடக் கூறுகிறது. நாகலிங்கம் என்பது இந்திய இலங்கை பூர்வீக மரம் என்றே நினைத்திருந்தேன். ஆனால் தென்னமரிக்காவில் இருந்து இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கே கொணரப்பட்ட மரம் என்ற விளக்கம் இதில் கூறப்பட்டுள்ளது. நாகலிங்கப் பூவில் லிங்கமும் படமெடுத்த நாகமும் இருக்கும் அல்லவா?.  இன்று நமது மதத்தில் நாகலிங்கம்  தொன்மமாக ஆகியுள்ளது. இதனையே "நம் கோயில்களில் பல வகையான மரங்கள் ஸ்தல விருட்சம் என வழிபடப்படுவது நம் பாரம்பரிய சுற்றுச்சூழல் அக்கறையின் ஒரு வெளிப்பாடே" என்று குறிப்பிட்டுள்ளார். நம்நாட்டு மரங்களான கொன்றை, புங்கம், வேம்பு, புளி, ஆல், அரசு முதலியவை நடப்படவேண்டும். அவற்றால் சூழலுக்கு எந்தக் கேடும் இல்லை. இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணப் பகுதிகளில் உள்ள பல அரச மரங்கள் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழர்களாலும் முஸ்லிம்களாலும் வெட்டி இடம் தெரியாமல் அழிக்கப்பட்டுள்ளன. இதற்கு இவர்கள் கூறும் விளக்கம் பௌத்த சிங்களவர்கள் அந்த மரத்துக்குக் கீழே புத்தர் சிலைகளை வைத்து விடுகிறார்கள் என்பதுதான். நான் அவர்களது பார்வையில் இருந்து எனக்குள் நினைத்துக் கொள்வதுண்டு அப்படி அவர்கள் புத்தர் சிலைகளை வைத்தால் அருகில் நீங்கள் பிள்ளையார் சிலையோ முருகன் சிலையோ வைத்திருக்கலாமே என்று. இந்த இனவாதம் பல கிலோ ஒட்சிசனைக் கக்கும் அரச மரத்தினை அரிய மரமாக்கி விடப்போகிறது. நான் சில வருடங்களுக்கு முன்புவரை கண்ட அரசமரங்களை இன்று காடமுடியவில்லை. ஆனால் பறவைகளின் எச்சத்தால் பனைமர இடுக்குகளில் உயிர்கொண்ட அந்த அரிய அரச மரங்களை எனது வீட்டில் நீர்கொள்ளும் பகுதியில் வைத்து வளர்த்துவிட்டு பின்பு அவற்றை எனது பிறந்தநாள் அன்று வஎளி இடங்களில் நட்டு விடுகிறேன். இலங்கை அரசாங்கம் மரங்கள் தொடர்பான சட்டங்களை மேலும் இறுக்கப்படுத்த வேண்டும். இல்லாது போனால் இந்த முட்டாள்கள் பிரதேசவாதம், மதவாதம், இனவாதம், ஊர்வாதம் என்று பேசி பிரயோசனமான மரங்களை அழித்தே விடுவார்கள். 

இந்நூலில் கொன்றை பற்றி அதிகம் பேசப்படுகிறது. நம் நாட்டுக்கே உரிய மரங்களில் கொன்றையும் ஒன்று. அதனை மரமாக நாட்ட யாருக்காவது ஆர்வம் இருந்தால்   இலகுவாக வீட்டிலேயே விதைபோட்டு முளைக்கவையுங்கள். புது வீடு கட்டும்போது சுற்றி இடைவெளியில் கொன்றை மரங்களை நாட்டிவிட்டு அய்ந்து வருடங்களில் ஒரு வசந்தகாலத்தில் பாருங்கள் அதற் அழகு தெரியும். அதன் அழகியல் சொல்லொணாத கவர்ச்சி மிக்கது. நான் முன்பு பலமுறை கொன்றையின் அழகுணர்வு பற்றி அதிகம் எழுதியுள்ளேன். இதனை இங்கு வாசிக்கலாம். 
பறவைகளின் முக்கியத்துவம் பற்றி நம்மாழ்வாரின் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. புள்ளினங்கள் மறைவது சூழல் கேட்டிற்கு ஒரு குறியீடு என்று தியோடர் பாஸ்கரன் குறிப்பிடுகின்றார். சில பறவையியல் ஆர்வலர்களை மேற்கோள்காட்டி தனது கட்டுரைகளை எழுதியுள்ளார். பறவையியலாளர்களில் தலையாயவர் சலீம் அலி. நமது பிராந்தியப் பறவைகள் பற்றி அறியும் ஆர்வம் உள்ளவர்கள் சலீம் அலியைக் கட்டாயம் அறிந்திருக்க வேண்டும். அவரது பறவையியல் பற்றிய விளக்கங்களைக் கற்றிருக்க வேண்டும்.  அண்மையில் வெளியான 2.0 என்ற திரைப்படத்தின் பட்ஷிராஜன் கதாபாத்திரம் சலீம் அலியை அடியொற்றியே எழுதப்பட்ட கதையாகும். பறவைகள் இல்லாத உலகம் பயங்கரமானதாகவும் அழியும் நிலையில் உள்ளதாகவும் நாம் கருத முடியும். மன்னாரிலும் கிளிநொச்சியிலும் வவுனியாவின் பெரும் நீர்த்தேக்கங்களிலும் உள்ளூர்ப் பறவைகளையும் முல்லைத்தீவில் வலசை வரும் பறவைகளையும் நாம் அவதானிக்கலாம். 

தமிழ்த்திரையில் மிருகங்களின் முன்னைய இன்றைய நிலைப்பாடு வரலாற்றின் வழியே பேசப்படுகிறது. மேலும் இன்றைய கெமராக்களின் துடையுடன் உயிர்ப்பு இன்றி காட்டு உயிர்களை வதைக்கும் புகைப்படக்காரர்களையும் விமர்சனத்துக்கு உட்படுத்துகின்றார். மனிதர்களைக் கொல்லும் விலங்குகளை சரணாலயத்தில் இடுவதைக்காட்டிலும் அவற்றைக் கொல்வதே சிறப்பு என்ற ஜிம் கார்பெட்டின் வாதம் பாஸ்கரனால் முன்வைக்கப்படுகிறது. மேலும் குயில், மந்தி, செண்பகம், மான், வரையாடு, நாய்கள், மழைக்காடுகள் என்று இந்நூலின் வாதம் நீள்கிறது.  

இயற்கையியல் பற்றிய விளக்கங்கள் நூல்கள் சரிவர தமிழில் வருவதில்லை. நமது இயற்கையை இலக்கியத்துடனும் வாழ்வின் அனுபவத்துடனும் பகிர்ந்து கொள்ள தியோடர் பாஸ்கரனை நாம் கற்க வேண்டும். அவரது அனைத்துக் கட்டுரைகளும் பெரும் நூலாகத் தொகுக்கப்பட வேண்டும். அவரை ஆசிரியராகக் கொண்ட மாணவர்களில் இயற்கையியலின் மீது பெரும் பற்றுக் கொண்டவன் என்ற முறையிலும் அவரது ஒவ்வொரு நூலையும் பொக்கிஷமாகவே கருதுகிறேன். 

Comments

Popular Posts