அதிகாலையில் ரகஷியம் சொன்னவர்



1. தூக்கத்துக்கு முன்.

சில காலங்கள் இணையங்களில் இருந்து தள்ளி இருப்போம் என்ற நோக்கில், பேரிலக்கியங்களை வாசித்துக் கொண்டிருந்தேன். நீண்ட பயணங்கள் போகவேண்டும் என்ற அவா வேறு உருக்கொண்டு ஆட்டுவிக்கிறது. 

நேற்று வள்ளுவரின் காதல் வரிகளைப் படித்து விட்டுத் தூங்கச் சென்றேன். அந்த வரியை அப்படியே நினைத்துக் கொண்டிருந்தேன். இப்பொழுது வரையும் நினைத்துப் பார்க்கிறேன். 

'மலரினும் மெல்லிது காமம். சிலரதன் செவ்வி தலைப்படுவர்' 

பொதுவாகவே வள்ளுவரும் கம்பரும் நமது பாடசாலை நாட்களில் வலிந்த ஒரு நபர்களாகவே அறிமுகமாகியிருந்தனர். நான் ஒன்பதாம் தரம் படிக்கும் போது ஒரு ஆசிரியை புதிதாக தமிழ் கற்பிக்க வந்திருந்தார். அவருடைய கற்பிக்கும் முறையை இப்போதும் எண்ணிப் பார்க்கிறேன். தற்போது மனதில் நினைக்கிறேன் "அந்தத் தேவடியாள் என் கண்ணில் படும்போது, கண்டபடி ஏதும் கேட்கவேண்டும்" என்று.  

கம்பனைக் கற்பிக்கிறேன் என்று கூறி அதன் நயங்களை விடுத்து சந்தங்களுக்கு ஏற்ப முழுமூடத்தனமாக மனப்பாடம் செய்விக்கும் முறையை அவர் ஊக்குவித்தார். இந்த வலிந்து திணிக்கப்படும் மனப்பாடம் என்ற பாடபேதம் எவ்வளவு அபத்தமான ஒன்று பாருங்கள். 

இரவு வள்ளுவரின் அந்தக் குறளை நினைத்துக் கொண்டு கிடந்தேன். எவ்வளவு அழகான காதல் கவிஞன் இந்த வள்ளுவன். இவனை மனப்பாடம் என்ற அரைவேக்கட்டுத்தனத்தைக் காட்டி இந்த ஆசிரியர்கள்தான் எவ்வளவுக்குச் சீரழிக்கிறார்கள். இவர்களிடமிருந்து வள்ளுவரையும் கம்பனையும் காப்பாற்ற பாடசாலைப் பாடப்புத்தகங்களில் செய்யுளை விடுத்து உரைநடைவடிவில் அவற்றை அளித்திருக்கலாம். 

இப்படியே வள்ளுவனின் நேரெதிர்ச் செவ்வியைக் கண்டு வியப்புடன் தூங்கினேன். அந்தச் செவ்வி காமத்துக்கும் காதலுக்கும் இடையில் நிகழ்ந்தது. இந்தத் தூக்கம் சாவுக்கும் பிரக்ஞைக்கும் இடையில் நிகழ்வது. 

2. தூக்கத்துக்குப் பின்.

இன்று அதிகாலை சரியாக மூன்று மணிக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. யாரென்று கண்ணைக் கசக்கிக் கொண்டு எழுந்தேன். திரையில் ஷேவ் செய்யப்பட்ட நம்பரில் இருந்து அழைக்கப்பட்டது. வேறு யாருமல்ல, கலகக்கார எழுத்தாளர் விமலாதித்த மாமல்லன் அழைத்திருந்தார். 

என்னையா தூங்கேல்லயா என்று கேட்டார். 

இல்லை அண்ண தூங்கி பின் எழும்பிவிட்டேன் என்று கூறினேன்.

உங்களிடம் இப்பொழுதுதான் குரலில் பேசுகிறேன் என்று கூற நானும் ஆமாம் என்றேன். 

சுகநலத்தை விசாரித்துக் கொண்டு பேசத் தொடங்கினார். மூத்த எழுத்தாளர் என்னுடன் அழைத்து உற்சாகமாகப் பேசிக் கொண்டிருக்க நான் தூக்கத்தில் வழிந்து கொண்டு அவரது சுவாரசிய உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்தேன்.

முகநூல் என்ற பொறியின் சூட்சுமங்களை விளக்கித் தந்தார். தான் எழுதப்போகும் கதைகள் பற்றிச் சில ரகஸ்யங்களைப் பரிமாறினார். வைத்தியர் ருத்ரன் என்பவரின் ஜாதி மாற்றுத் திருகுதாளங்களையும் ருத்ரனின் பெண்பித்து மனநிலைகளையும் விவரபாக உரையாடினார். 

மிக முக்கியமாக வெளியில் கூற வேண்டாம் என்று ஒரு ரகஸ்யம் கூறினார். இரண்டு எழுத்தாளர்களின் நேரிடை அந்தரங்கச் சம்பவங்கள். மூன்றாவதாகத் தனக்குத் தெரிந்ததாகவும், அதனை அவர் எனக்கு மட்டும் கூறுவதாகவும் கூறினார். நான் வியப்பின் விளிம்பில் இருந்தேன். இந்த வியப்புக்கு இரண்டு காரணங்கள். ஒன்று மாமல்லனின் உரையாடல். மற்றையது அவர் கூறிய அந்த ரகஸ்யம். 

பிராமணர்கள், வேளாளர்கள், தேவர்கள், தலித்கள் என்று விரிவான உரையாடலை நிகழ்த்தினார். அந்த உரையாடல்களைக் கேட்கும் போது எனக்கு சற்று பதட்டமும், ஆர்வமும் தொற்றிக் கொண்டது. 

உண்மையைச் சொன்னால் விமலாதித்த மாமல்லன் மிகப்பெரிய சர்ச்சையை நிகழ்த்தப் போகிறார். அது உண்மையின் சர்ச்சை என்பதைப் பேசிய ஒன்றரை மணிநேரத்தில் புரிந்து கொண்டேன். 

உண்மை மனிதர்களின் கதை வெளியில் வர இருக்கிறது. காத்திருங்கள். இப்போது தூங்குங்கள் என்றார். நேரத்தைப் பார்த்தேன் நான்கரை தாண்டி இருந்தது. எங்கே தூங்குவது. அந்த ரகஸ்யத்தை நினைத்தால் ஒரு பக்கம் ஏதோ மாதிரி இருந்தது. இன்னொரு பக்கம் சிரிப்புவேறு. 

சரி, இவற்றை அந்த மனிதன் என்னை எழுப்பி ஒரு பிரம்ம முகூர்த்தத்தில் கூற காரணம் என்னவோ???.... அந்த ரகஸியம் தான் எவ்வளவு கனமானது...  கடவுளே என்று வாயை அவ்வப்போது திறந்து மூடிக்கொள்கிறேன்....

ரகஸ்யம்......ரகஸ்யம்..... ஒன்றே காரணம். 


  

Comments

Popular Posts