கடல்புரத்தில்: கடலின் தவிப்புக்கான ஆதாரம்.
ஒரு காயல் கிராமம். அங்கு நிறையக் குடும்பங்கள். ஏராளம் வாழ்க்கை. பரந்த ஒரேயொரு கடல். மணப்பாடு என்ற கடல் கிராமத்தைப் பற்றிய கதை. கடல்வாழ்க்கை பற்றிய எழுத்துச் சித்திரங்களில் வண்ணநிலவனின் கடல்புரத்தில் நாவல் மிக முக்கியமானது. அளவில் பெரிதாக இல்லாமல் காயல் வாழ்க்கையின் நெழிவு சுழிவுகளை அவ்வளவு அழகாகக் காட்டிய நாவல். கிறிஸ்த்தவ மீன்பிடிக் கிராம மக்களின் கலாசாரம், முரட்டுத்தனம், குடி, ஒழுக்கம், கடலுக்கும் அவர்களுக்குமான அன்னியோன்யம், காதல், காமம், பரிவு என்று கதை அத்தியாயம் அத்தியாயமாக நகர்கிறது. எல்லா அத்தியாயங்களிலும் அன்பிற்குள் சர்வமும் ஒரு பொழுதுக்கு அடங்கிப்போகின்றதைக் காணமுடியும்.
குரூஸ் மைக்கல், பிலோமி, மரியம்மை, செபஸ்தி, ரஞ்சி, ஐசக், சாமிதாஸ் முதலிய கதாபாத்திரங்களுக்குள் கதை நடக்கிறது. இதில் பிலோமி என்ற பாத்திரத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. அவள் வழியேதான் வண்ணநிலவன் தான் சொல்லவந்த விடயத்தைங் சொல்கிறார். அவர் கூறவந்த பிரதான விடயம் இடையறாத அன்பும் மனிதர்களின் அதிசயமும் என்றுகூடக் கூறலாம்.
கதாபாத்திரக்களின் வழி கதையைப் பகுக்கக்கூடிய மிக நுட்பமான எழுத்து. அகங்காரம் கொண்ட முரட்டுக் குடும்பஸ்தன் குரூஸ். அவருடைய மனைவி மரியம்மை. மகள்கள் அமலோற்பலம், பிலோமி. மகன் செபஸ்தி. பிலோமியைத் தவிர ஏனைய இரண்டு பிள்ளைகளும் திருமணமாகி வேறு வேறு ஊருக்குச் சென்றுவிட்டவர்கள். பண்டிகைகள் மற்றும் இதர விஷேசங்களுக்குப் பிறந்தகம் வந்து வருவர். பெற்றோருடன் தொடர்ந்து இருப்பவள் பிலோமி. இவளுக்கு ஊரில் சாமிதாஸ் என்ற இளைஞனுடன் ஆழமான காதல். உடலுறுவரைக்கும் சென்று அது கலியாணத்தில் சாத்தியப்படாமல் மிக மோசமாக மன அளவில் நிர்ச்சிந்தை அடைகிறாள் பிலோமி. பின் சில நாட்களில் அவளுடைய தாய் மரியம்மை மரணமடைகிறாள். காதல்- தாயின் பிரிவு இந்த இரண்டிலும் பாதிக்கப்பட்டவளை அவளுடைய நண்பி ரஞ்சி பக்குவமடைந்த மனோநிலையிலிருந்து தேற்றுகிறாள். ரஞ்சி பிலோமியின் தமையனைக் காதலித்து கலியாணத்தில் நிறைவுறாத துயரமான அனுபவத்தைக் கடந்து வந்தவள். அவற்றிலிருந்து தேறியவள் என்ற ரீதியிலும் அன்பின் மகத்துவத்தைப் புரிந்து கொண்டவள் என்ற ரீதியிலும் நடந்து கொள்கிறாள் ரஞ்சி. இந்த நடவடிக்கை பிலோமிக்குள் ஒரு மாறுகையைக் கொண்டு வருகிறது. அத்துடன் ஊரின் வாத்தியார் ஒருவரின் அறிவுரைப்படியும் பிலோமி முழுவதுமாகத் தேறுகிறாள். இந்த இரண்டு பேருடனும் தொடர்ந்து பேச விரும்புகிறாள் பிலோமி. மனிதர்களுடன் பேசிப் பேசித்தான் அன்பை வளர்க்க முடியும். மிக நுட்பமான உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடியும் என்ற இலட்சியக் கதைதான் "கடல்புரத்தில்".
இந்தக் கதைகளுக்கு இடையில் மனிதர்களின் காதல், காமம், வக்கிரம், எரிச்சல், பொறாமை, ஆசை எல்லாமே சித்தரிக்கப்பட்டுள்ளன. ஒரு கடல் வாழ்க்கைப் படத்தைப் பார்த்தது போன்ற அனுபவம்தான் கடல்புரத்தில் நாவலின் வாசிப்பனுபவம்.
1. இதன் இலக்கிய அழகியல் என்பது நாவலாசிரியர் எடுத்துக்கொண்ட கடல்வாழ்வு என்ற களத்தை விபரிக்கக் கையாண்ட வர்ணனைகளாலும் கதாபாத்திரங்களின் கொண்டுவருகையாலும் சிறப்புப் பெறுகிறது. இதில் ரஞ்சி மற்றும் வாத்தியார் இந்த இரண்டு பாத்திரங்களும் குறைவான இடங்களில் இடம்பெற்றாலும், நாவலுக்குள் அதன் முக்கியத்துவம் அதிகமாகவே உள்ளது. இவை இரண்டும்தான் நாவலை வாசிப்பவனுக்கு அன்பின் தத்துவத்தையும் பெரும் பிரிவிலிருந்து ஒரு மனிதன் கடந்து செல்வதையும் மிக நுட்பமாகக் கூறிய கதாபாத்திரக்களாகும்.
இணைப்பு 01
""ஸ்நேகிதம் என்றால் அது அவ்வளவு பெரியது. அதற்கு வயசு என்ற ஒன்று உண்டா என்ன? ரஞ்சியுடைய மடியில் உரிமையுடன் பிலோமி தலை வைத்துப் படுத்துக்கொண்டாள். அவர்களுடைய பேச்சில் சோகம் இருந்தது; பிரிவு இருந்தது; சந்தோஷம் இருந்தது; நீண்ட நாட்களுக்குப் பின்னால் சந்தித்துக் கொள்கிறபோது இருக்கிற தவிப்பும் இருந்தது.""
2. அடுத்து கடலின் இரைச்சல் உள்ளபோது பிலோமியின் மனமும் நினைவுகளும் வற்றிப்போய் சூனியமாகிவிடுகின்றன. அவள் அந்த இரைச்சலில் புதைந்து போகிறாள். அதே நேரம் காற்று இன்றி கடல் அமைதியாக இரைச்சலின்றி இருக்கும் போது அவளுடைய மனம் மிகத் துன்பப் பட்டுப் பழையதை மீட்டுகிறது. நினைவுகளால் உழலுகிறது. அன்பின் எந்தத் தத்துவங்களும் கடலையும் அவளையும் பிரிக்கமுடியாதபடி தடுத்து விடுகிறது. இந்த அன்னியோன்யத்தையும், நுட்பத்தையும் இந்நாவலின் எந்தக் கதாபாத்திரங்களிலும் காணமுடியாது. இக் கதாபாத்திரத்தின் உருவாக்குகை இலக்கிய முக்கியத்துவம் மிக்கது.
இணைப்பு 02.
""எல்லாவற்றையும் மீறிக்கொண்டு கடலினுடைய இரைச்சல் கேட்டுக் கொண்டிருந்தது. அந்த இரைச்சலில்தான் அவளுடைய மனசு ஈடுபட்டது. அவளுக்குச் சங்கடமாக இருக்கும் போதெல்லாம் அந்த ஊரில் எந்த மூலையில் இருந்தாலும் கேட்க முடிகிற கடலின் ஓய்வற்ற இரைச்சலில்தான் அவளுடைய எல்லா நினைவுகளும் வற்றிப்போய் மனசு வெறுமையாகி இருக்கிறது. அப்போது அந்தக் கடல் கண் முன் வரும். எத்தனை எத்தனை தோற்றங்கள்.""
3. காதலின் இணையரான காமம் பற்றிய சித்தரிப்புக் கடல்புரத்தில் நாவலில், குற்றவுணர்வுடன்தான் ஒரு வாசகனால் அணுகமுடிகிறது. பிலோமியைச் சாமிதாஸ் புணர்ந்த பின்னரும் சரி, இடையிடையே வரும் பிலோமியின் ஞாபக அலைகளிலும் சரி, சாமிதாஸின் கலியாண நிகழ்விலும் சரி அதனை ஒரு வாசகன் என்ற முறையில் குற்றவுணர்வுடன்தான் அணுகமுடிகிறது. அன்பை வெளிப்படையாகச் சித்தரித்த அளவுக்குக் காமத்தின் நுட்பங்களைச் சித்தரிப்பதில் வண்ணநிலவன் தோற்றுப் போகிறார். அல்லது அதனைக் குற்றவுணர்விலிருந்து மீட்டெடுப்பதில் விலத்தி நிற்கிறார். இங்கு அன்பையும் கடல் வாழ்வையும் பிரதானப்படுத்திக் கூற வந்ததால் காமம் அந்நியமாகியுள்ளது என்று அமைதிகாணலாம்.
இணைப்பு 03.
""சாமிதாஸுக்கு அவளை சமாதானம் செய்யத் தோன்றவில்லை. அவன் மேலேயே அவனுக்குக் கோபம் கோபமாக வந்தது. ‘சே... எவ்வளவு அற்பமாகக் கொஞ்ச நேரத்தில நடந்திட்டோம். இந்தப் பிலோமிக் குட்டிதான் என்ன நெனப்பா? இதுக்காவத்தானா இவ்வளவு நாளும் இவ நமக்குன்னு நெனச்சிருந்தது? இம்புட்டுத்தானா அவள் மீது உள்ள பிரியமெல்லாம்?’""
4. சித்தரிக்கும் நில வாழ்வின் மீதான புனைவுகள், அந்நிலத்தையும் மக்களையும் ஒருசேர இணைத்து அவர்களது அன்னியோன்னியத்தை அழகுணர்வு கூட்டிச் சொல்லவேண்டும். அதன் மீதான இலக்கிய வாசிப்பு ஒரு கவிதைக்கான கெட்டியான உணர்வைத் தரவேண்டும். அதனை வண்ணநிலவனின் நாவலின் அநேக அத்தியாயங்களில் வாசித்து உணரமுடிகிறது.
இணைப்பு 04
""அந்தக் கடல்புரத்தில் எந்தக் குழந்தை பிறந்தாலும், எவ்வளவு பெரிய வீட்டில் பிறந்திருந்தாலும் அது முதலில் தன் அம்மையினுடைய முலையைச் சப்புவது கிடையாது. பூமியில் விழுந்ததும் அதனுடைய வாயில் உவர்ப்பான கடல் தண்ணீரைத்தான் ஊற்றுகிறார்கள். அந்தத் தண்ணீரானது ஆண் பிள்ளையானால், அவனுக்கு வலிய காற்றோடும் அலைகளோடும் போராட உரமளிக்கிறது; பெண் பிள்ளைகளுக்கு, வாழ்க்கையில் எதிர்ப்படுகிற ஏமாற்றங்களையும் துக்கங்களையும் தாங்குவதற்கான மன தைரியத்தைக் கொடுக்கிறது. அவர்களுடைய வாழ்க்கை அநாதி காலந்தொட்டு கடலுடனே பின்னிப் பிணைந்து கிடக்கிறது. கடல் அம்மையை அவர்களுடைய சேசுவுக்கும் மரியாளுக்கும் சமமாகச் சேவிக்கிறார்கள். அவள் பதிலுக்குத் தன்னுடைய பெரிய மடியிலிருந்து மீன்களை வாரி வாரி அவர்களுக்கு வழங்குகிறாள். அவர்களுக்குள்ளே ஒருபோதும் ஒற்றுமை இருந்தது கிடையாது! அவர்களுடைய ஒழுக்கங்களும் சீரானதில்லை. எத்தனையோ சம்பவங்கள் எல்லாவற்றையும் கடல் அம்மை சகித்திருக்கிறாள். ஏனென்றால், அவளுடைய பிள்ளைகளின் மீது அவள் கொண்டிருக்கிற பிரியம் அவ்வளவு.""
அண்மையில் மன்னாரிலுள்ள தாழ்வுப்பாடு என்ற கடற்கிராமத்துக்குச் சென்று திரும்பும் போது நான் எப்போதோ வாசித்த கடல்புரத்தில் நாவலில் வந்த மணப்பாடு கிராமம் ஞாபகம் வந்து தலையைக் குடைந்து கொண்டிருந்தது. அநேகமான இடங்களுக்கு மீனை அனுப்பும் மீனவக் கிராமங்களில் ஒன்று தாழ்வுப்பாடு. அங்குள்ள வாழ்க்கை மட்டுமல்ல அநேக மீனவக் கிராமங்களின் வாழ்க்கைதான் கடல்புரத்தில் நாவலின் சித்தரிப்பு. எம்மால் அவர்கள் பிடித்துத் தரும் மீன்களை உண்டு அந்த உணவுடன் பேச முடிகிறதே தவிர, அம்மீனவர்களின் வாழ்வை- துயரங்களை அறிய முடிவதில்லை. கடல் வாழ்வையும், சக மனிதர்களின் மீது இனம்புரியாத புரிதலை அறிந்துகொள்ளவும் இந்நாவல் கொஞ்சம் உதவக்கூடும். இது அனுபவ ரீதியிலான மதிப்புரை. இதில் இடம்பெறாத விடயங்களைச் சுட்டிக்காட்டலாம். இணைப்பு என்று இதில் இணைக்கப்பட்டுள்ளவை என் சுய கருத்துக்களுக்கான நாவலிலுள்ள ஆதாரங்கள்.
Comments
Post a Comment