காடு நாவல்: ஒரு வாசிப்பு.

 நவீன இலக்கியம் பலரது படைப்பின் தொடக்கத்துடன் நம்மிடையே அறிமுகமாகிறது. அந்தப் படைப்புக்களில் ஒரு சிலவே நம்மை அதற்குள் செல்ல அனுமதிக்கிறது, நம்மை அப்படைப்பின் சூழலுடன் ஒன்றிணைய வைக்கிறது, நமக்கான இலக்கியம் இதுதான் என்று உணரவும் தலைப்படுகிறது. 

ஜெயமோகனின் மகத்தான படைப்புக்களில் ஒன்றாகக் காடு நாவலைக் கூறுவேன். அதனை அவரது படைப்பாக மட்டுமன்றி தமிழின் சிறந்த செவ்வியல் கூறுகள் கொண்ட ஒரு நாவலாகவும் குறிப்பிடலாம். 


கிரிதரன் மலைக் காட்டுக்குள் சென்று மாமனாரின் கொன்ராக்ட் வேலைகளுக்கு உதவி செய்வதும் அங்கு வேலையாட்களாக உள்ள குட்டப்பன், ரெசாலம், குரிசு மற்றும் எஞ்சினியர் நாகராஜ அய்யர் போன்ற கதாபாத்திரங்களும் கிரிதரன் காதலிக்கும் மலைவாழ் பெண்ணாகிய நீலியும் இந்நாவலில் அழியாத சித்திரங்களாகப் படைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ஜெயமோகன் பல இடங்கள் அலைந்து திரிந்து தனக்குள் ஒரு காட்டையே உருவாக்கியுள்ளார் என்றே கூறமுடியும். சங்க இலக்கியங்களும் அவ்விலக்கியங்களின் தலையாய கவிஞரான கபிலரின் காதல் இயற்கை ஒப்பீட்டுப் பாடல்களும் நாவலை மேலும் செழுமையடையச் செய்துள்ளது. 


குட்டப்பன் கதாபாத்திரம் தன் மத மரபுகளின் மீது நம்பிக்கை கொண்டவனாகவும் காமம் என்ற அலைமீது புரண்டு அனுபவிப்பபவனாகவும் உள்ளான். ஆனால் அவனுக்குள் ஒரு அறம் தொடர்ந்து இயங்கிக் கொண்டே உள்ளது. இந்நாவலின் கதைசொல்லி கிரிதரன்.  கிரிதரன்தான் பிரதான கதாபாத்திரம். எனினும் குட்டப்பன் பல விடயங்கள் அறிந்த ஒருவனாகவும் அவனுக்கு இலக்கியங்களோ ஏனைய எதுவுமோ பரிச்சயமில்லை. ஆனால் அவன் நாட்டாரியல் தன்மை கொண்டவன். ஊமைச்செந்நாயில் வரும் நாய் போன்றவன். இருந்தும் அறம் மிகுந்த சுயாதீனமானவன். அதனால்தான் குட்டப்பனால் தன்னுடைய எஜ(ஏ)மான் பிழை செய்தபோது அவரைத் தட்டிக் கேட்டுத் தாக்கி அடக்க முடிகிறது. ஊமைச்செந்நாயில் எஜமானுக்கு விசுவாசம் உள்ளவனாக வரும் நாய் என்பவனின் கதாபாத்திரம் அறம்மிகுந்த சுயாதீனமற்றவன். இங்கு அதுவேறுகதை. குரிசு என்ற கிறிஸ்த்தவரை குட்டப்பன் வார்த்தைகளால் எள்ளி நகையாடுவதும் தன்னுடைய மத நம்பிக்கைகளை செக்கியூலர் தாண்டியதாகச் சொல்வதும் குட்டப்பன் என்ற கதாபாத்திரத்தின் வாசகத் தொடர்பை வலுப்படுத்துகிறது. 


கிரிதரன் காடு மீது வேட்கை கொண்டவனாகிறான். அவன் தானாகவே கற்ற சங்க இலக்கியங்களை காட்டில் பொருத்திப் பார்க்கிறான். வறன் உறல் அறியாச் சோலை என்று பாடி களிப்புறுகிறான். சங்க அகத்திணை இலக்கியங்களில் தலைவி வராமல் தலைவனின் பாடலா. ஆம் இங்கு அவனது தலைவியாக குன்றக் குறவன் மலையனின் மகள் நீலியை அடையாளம் காண்கிறான். அவள் மீதும் மலைக்காட்டின் மீதும் சங்கப்பாடல்களையும் கபிலனையும் கடத்திப் பார்த்து மகிழ்கிறான். தன்னை சங்கத் தலைவனாக உருவகிக்கிறான். 

சுனைப்பூ குற்று தொடலை தைஇவனக்கிளி கடியும் மாக்கண் பேதைதானறிந்தனளோ என்றெல்லாம் பாடி அலைகிறான். 

வேணி என்ற பெண்ணைத் திருமணம் செய்யும் வரை அவனது நினைவில் இருந்து நீலி அகலவில்லை. நீலி ஒரு தொன்மமாக அவனுள் படிந்திருக்கிறாள். மலையில் கிரிதரனுடைய ஒயுதலைக் காதலுக்கு அய்யர் உதவுகிறார். 


அய்யர் என்ற கதாபாத்திரம் மீறல்களால் உருவானது. இந்த நாவலை நான் வாசிக்கும் போது கிரிதரன்- குட்டப்பன் உரையாடல், கிரிதரன்- அய்யர் உரையாடல், கிரிதரன் கதை சொல்லல் என்று மூன்றையும் மிகத்தீவிரமாக என் முன்னே கொண்டுவந்து படித்துக் கொண்டிருந்தேன். அய்யருடனான உரையாடல்கள் மிகச் சிறப்பானவை. அய்யர் கடந்த கால அனுபவங்களையும் சங்க இலக்கியங்களுடனான தனது பரிச்சயங்களையும் பகிர்ந்து கொள்கிறார். அந்தப் பகுதிகளை கதையாசிரியர் தனது அதீதமான இலக்கிய ஞானங்களையும் அனுபவத் தெறிப்புக்களையும் கொண்டு உருவாக்கியுள்ளார். அய்யருடைய வாழ்க்கை நீண்ட காலம் மலைகளில் தனிமையில் வாழ்வதாகவே உள்ளது. அந்த வாழ்க்கை கிரிதரனுக்கு ஒரு நம்பிக்கையையும் அளித்து விடுகிறது. இருவரும் விரைவிலேயே நண்பர்களாகின்றனர். 


மலைவாழ் மக்களுடைய அன்றாட வாழ்க்கையும் அங்கு நடைபெறும் மதமாற்றங்களும் இயற்கை அழிப்பும் காமக் களியாட்டங்களும் மற்றும் பல்வேறு இயற்கையின் கூறுகளும் மிக அழுத்தமாக இந்நாவலில் கூறப்பட்டுள்ளது. யானைதான் காட்டுக்கு ராஜா..அது கறுப்பாக உள்ளதால் சிவப்பாக உள்ள சிங்கத்தை வெள்ளையர்கள் ராஜா ஆக்கி புனைந்துவிட்டார்கள் என்றும் பிரம்மாண்ட காஞ்சிரை மரத்தை வெட்ட திருவிதாங்கூர் சமஸ்தான நாயர்படைகளில் பெரும்பகுதியினர் எப்படி இறந்தனர் என்றும் புதுப்புது உட்கதைகள் புகுத்திச் சுவாரசியமாக்கப்படுகிறது. காட்டில் எத்தனை மரம் உண்டோ அதைவிட அதிகளவு தெய்வங்களு உண்டு என்ற கருத்து திரும்பத் திரும்ப வலியுறுத்தப்படுகிறது. 


சினேகம்மை உள்ளிட்ட வேலைக்காரப் பெண்கள் காமக் கிழத்திகளாக உபயோகிக்கப்படுவதும், குட்டப்பனின் ஆக்ரோஷமான வயைமுறையற்ற காமக் களிப்புகளும்   வெளிப்படையாகவே காட்டப்படுகின்றன. ஆனால் கதையின் நிறைவில் குட்டப்பன் என்ற கதாபாத்திரம் நம்மில் நிறைந்திருக்கும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. 


புதுமைப்பித்தன், ப.சிங்காரம் போன்றவர்களின் இலக்கியத்திலுள்ள பல்லாயிரம் வருடத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சியை நாம் ஜெயமோகனின் படைப்புக்களில் காணலாம். அதற்குக் கைவிளக்கு என்று காடு நாவலைச் சான்று பகரலாம். 


இட்டகவேலி நீலியும் மேலங்கோடு யட்சியும் தன்னுடைய இஸ்ர குலதெய்வங்கள் என்று ஜெயமோகன் ஒரு கட்டுரையில் எழுதியிருந்தார். இவை நாட்டாரியல் பண்புள்ளவை என்பதை அவைபற்றித் தெரிந்த பின்பு அறிந்து கொண்டேன். இந்நாவலில் கிரிதரன் விரும்பும் மலையனின் மகளும் நீலிதான். காமரூபிணி என்ற கதையில் நீலி பற்றி ஒரு சித்திரம் வரைந்திருப்பார். இந்நாவலில் ஆரம்பப் பாகங்களில் நீலியைப் பிடித்து காட்டு மரம் ஒன்றில் அறைந்ததாக ஒரு நாட்டாரியல் வழக்காறினை புனைந்தும் எழுதியுள்ளார். அ.கா.பெருமாள் எழுதிய வயக்காட்டு இசக்கி என்ற நூலில் தமிழகப் பழங்குடிகள் என்ற ஒரு கட்டுரை உள்ளது. அந்த அல்புனைவிலுள்ள பாகத்தின் ஒரு விரிந்த புனைவுகளில் ஒன்றாக இந்நாவலின் மலையன் மகள் எனக்குத் தோற்றமளிக்கிறாள். 


இந்நாவலில் உள்ள அய்யர் கதாபாத்திரம் கபிலரை பார்ப்பனர் என்று கூறுவதாக வருகிறது. அதற்குச் சான்றாகக் கபிலரின் பதிற்றுப்பத்துப் பாடல் ஒன்றையும் அய்யர் கூறுகிறார். அய்யர் தன் சொந்தச் சாதியைக் கடக்காத அதேவேளை விமர்சனவாதியாகவும் அவ்வப்போது அடையாளப்படுத்தப்படுகிறார். இந்நாவலில் மிகப் பலமான உரையாடலை நிகழ்த்தும் முக்கியமான கதாபாத்திரம் என்று அய்யரைக் கூறலாம். கிரிதரனுக்குச் சங்கீத ரசனையையும் நீலியைக் காதலிக்க உதவிகளையும் மன அளவில் தயார்செய்து விடுகிறார்.


ரெசாலம் என்ற கதாபாத்திரம் வளர்க்கும் தேவாங்கு கதையில் வளர்ந்து கொண்டே வருகிறது. அதன் மீது ரெசாலம் கொண்ட பிரியம் அளவற்றது. அத்துடன் தேவாங்கை சிறுத்தை கவ்விக் கொண்டு போனதும் ரெசாலம் தன்னிலை இழந்து விடுகிறார். அவரது கதாபாத்திரம் தேவாங்கு என்ற உயிரை ஏந்தியதாக இருப்பது எவ்வளவு நுண்ணிய காருண்யம். 


மிளா, குரங்கு, கூழக்கிடா என்று பல உயிரினங்கள் நாவலில் வெளிப்பட்டாலும் யானை மீது உள்ள கவனம் அளப்பரியது. ஒரு யானை பல்லாயிரம் ஏக்கர் காட்டை உருவாக்குகிறது என்பது உண்மை. அந்த யானைக்கு உணவு அளிப்பதாக ஏமாற்றி உணவில் வெடி வைத்து அதனைக் கொல்லும் அயோக்கியர்களும் தந்தத்துக்காக அதனை கொல்லும் பேராசைக்காரர்களும் இருக்கவே செய்கிறார்கள். ஜெயமோகனின் பல சிறுகதைகளில் யானை என்ற உயிரினம் மீது அவர் எடுத்துக்கொள்ளும் முக்கியத்துவத்தை பலமுறை அவதானித்துள்ளேன். உதாரணமாக யானை டாக்டர் மற்றும் மத்தகம். இந்த இரண்டு கதைகளில் மத்தகம் உணர்வுபூர்வமானது. யானைடாக்டர் அறிவுபூர்வமானது. காடுநாவலில் கீறக்காதன் என்ற யானை ஒரு குளியீடாக வந்து செல்கிறது. அது கழிவிரக்கத்தின் குறியீடாகவே நிறைகின்றது நம்முள். 


நாவலின் பிற்பாகத்தில் நீர்க்கோல வாழ்வை நச்சி என்று கம்பனின் பாடல்கள் வாழ்வியலுடன் இணைத்து உரையாடப்படுகின்றது. முறைதவறிய பாலியல் அவஸ்தைகள் சொல்லப்படுகின்றது. ஒரு கட்டத்தில் கிரிதரனும் அதனுள் வீழ்ந்து விடுகிறான். 


அய்யர் கிரிதரனை ஓரிடத்தில் கேட்கிறார். பிடிச்ச கவிஞர் யாரென்று? அதற்கு கிரிதரன் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்கிறான். அந்த இடத்தில் கபிலரையே கூறுவான் என்று வாசகரும் அய்யரும் எண்ணியிருக்க அவ்வாறு நிகழாமல் போகிறது. அதற்குக் காரணம் பெருங்கடுங்கோ பாடல்களில் வாழ்வின் துக்கம் இருப்பது என்பது வலியுறுத்தப்படுகிறது. காடு நாவல் அப்படியான ஒன்றுதான். கபிலர் பற்றிய மேற்கோள்களும் அய்யர், குட்டப்பன் என்று களிப்புக் கதாபாத்திரங்களும் படைக்கப்பட்டாலும் காடு நாவல் முல்லையும் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல்பு இழந்து நடுங்கு துயர் உறுத்துப் பாலையின் கதை என்றே கூறவேண்டும்.  


காடு நாவல் நம் நீண்ட தமிழ் இலக்கிய மரபுக்குக் கிடைத்த அரிய பொக்கிஷம். 


 

Comments

  1. சுயந்தன்
    உங்கள் இலக்கிய வாசிப்பின் போக்கையும் இலக்கிய ஆர்வத்தின் போக்கையும் உங்கள் எழுத்தில் காண்கிறேன்

    வாழ்ததுக்கள் பாராட்டுக்கள்

    நட்புடன்
    அசுரா ( பிரான்ஸ்)

    ReplyDelete

Post a Comment

Popular Posts