வலசைப் பறவைகள்.

 

யுவன் சந்திரசேகரின் தீராப்பகல் கவிதைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன். அவரது முழுமையான கவிதைகளும் இதில் உள்ளன. கிட்டத்தட்ட 257 கவிதைகள். எளிய வாசகனுக்குப் புரியாத நுட்பங்கள் அவரது கவிதையில் அரங்கேறியிருக்கும். நுணுக்கமான வாசகனுக்கு பல நினைவுகளைக் இக் கவிதைகள் அசைபோட வைக்கும். அப்படி ஒரு கவிதைதான் "வெண்ணிற நாரைகள்". 


"வெண்ணிற நாரைகள் மீண்டும் பறந்தன

இன்று வலசை போகிறவையோ

எங்கிருந்து

எங்கே

என்றிலிருந்து.


பறக்கும் பழக்கம் எனக்குமுண்டு.

சொந்தமாய் உண்டு

ஓர் ஆகாயம்.

வெளியில் வெளியில் என்று 

விரிவது அல்ல. 

உள்ளே உள்ளே என ஆழ்வது. 

இருக்கட்டுமே வானம் வானம்தான்"


என்று நீள்கிறது அக்கவிதை. பறவைகள் வலசை போவதை நீண்ட நேரம் பார்த்திருக்கும் போது அவை அனைத்தும் எங்கே சென்று தரிக்கும் என்ற அரூப கற்பனை எமக்குள் ஏற்படத் தொடங்கும். சென்ற ஆண்டு முள்ளிவாய்க்கால் பகுதியில் பிளமிங்கோ வகைப் பறவைகள் ஆயிரத்துக்கும் மேல் வெளிநாட்டில் இருந்து வலசை வந்திருக்கின்றன. தென்கிழக்காசியா அல்லது ஆபிரிக்க பகுதி என்று நினைக்கிறேன். அதனை கிட்டத்தட்ட ஒருமணிநேரம் பார்த்திருந்தேன். அவற்றின் சப்தம் தமக்குள் பேசுகின்றனவோ என்ற பிரமிப்பை உண்டாக்குகின்றன. அருகிலுள்ள சிறு கடல் அலைகளற்று இருக்கும் போது இவற்றின் ஓசை அலைகளை உற்பத்தி செய்வது போல இருக்கும். அன்று நான் அவ்விடத்தில் என் அகத்தால் பறந்திருந்தேன். அந்த இடத்தின் கடந்த காலத் துயரங்கள். அங்கு வந்த பறவைகளின் துடிப்பு என்று 

"உள்ளே உள்ளே என ஆழ்வது" எனும் உள்ளாழ்வதன் அர்த்தம் இப்போது அறிந்து கொள்கிறேன். வலசை போவது பறவைக்கு மட்டுமா பொதுநியதி. பயணத்தில் உள்ளே ஆழ்பவன் ஒவ்வொருவனுக்கும் அது தனிவிதி. 


இளையராஜா பாடல்களில் இருந்து விடுதலையாக பழைய பாடல்களைக் கேட்பது என் வழக்கம். அதுபோல சமீப காலத்து புதிய பாடல்களில் இருந்து மனதைக் காப்பாற்ற பழைய பாடல்களைக் கேட்கும் வாடிக்கை என்னிடமுண்டு. மங்கல அமங்கல பரஸ்பரங்களின் இணைப்பு பழையபாடல்கள் என்பதுதான் என் ரசனையின் வெற்றி என்று நினைக்கிறேன். 

வாராய் நீ வாராய்

சில பழைய பாடல்களை  கேட்கும் பழக்கம் முன்னரைவிட இப்போது அதிகமாகியுள்ளது. பி.பி.ஶ்ரீநிவாஸ் மற்றும் ஏ.எம்.ராஜா பாடல்களை அதிகம் கேட்டுக் கொள்ளும் வழக்கம் எனது பதினெண் வயதில் தொடங்கியது. இப்போது போகுமிடம் வெகு தூரமில்லை நீ வாராய் என்ற அய்ம்பதுகளில் வந்த பாடல் ஒன்றைத் திரும்பத் திரும்பக் கேட்கிறேன். மிக அருமையான பழைய பாடல். அதன் கம்போஸிங்கை விட அதனைப் பாடியவரின் குரல் அபிநயம் இசைக்கான ஈர்ப்பினை அதிகமாக்கி விடுகிறது. இளையராஜாவிடம் இருந்து வலசை போவதற்குச் சிறந்த இடம் பழைய பாடல்கள்தான். அதே பழைய பாடல்கள் இளையராஜா எனும் தமிழிசை ஆகாயத்தை எமக்குக் காட்ஞி உள்ளே உள்ளே ஆழ்த்துகின்றன. நான் இளையராஜாவின் பாடல்களையும் பழைய பாடல்களையும் வலசைப் பறவைகளையும் ஒரே கணத்தில் வரவைத்து தருணங்களாக்கிப் பார்க்கிறேன். 

வானம் வானம்தான்!

Comments