உழல்தல் ஒரு பேரின்பம் 01

"பலசமயம் பயணத்தைவிடப் பயணத்தின் தொடக்கமே முக்கியம் என்றுகூடத் தோன்றும்"

-ஜெயமோகன்.

இலங்கையைச் சுற்றி வருவதற்கு மிகவும் உகந்த மாதம் என்று நாம் நான்கு பேர் தேர்ந்தெடுத்த மாதம் ஏப்ரல் மாதத்தின் தொடக்கம். இந்தப்பயணம் 2021 ஏப்ரல் நாம் மேற்கொண்ட பயணத்தின் ஞாபகக் குறிப்புகள். பயணம் புறப்பட வேண்டும் என்பதனால் முதல்நாள் மனம் சொற்களால் நிறைந்து கிடந்தது. பயணத்தின் தொடக்க நாளாக ஏப்ரல் முதலாம் திகதியைத் தேர்ந்தெடுத்தோம். நான்கு பேர் நான்கு மோட்டார் பைக்கில் செல்வதற்குப் பூரண ஏற்பாடுகளுடன் தயாரானோம். 

என்னுடன் பயணத்தில் இணைந்த மூவரும் எனது சிறுவயதில் இருந்தே பழக்கமானவர்கள். எனது பைக் Bajaj Pulsar 150. மற்றைய மூவரின் பைக்குகளும் என்னுடையது போலவே இந்தியாவில் தயாரிக்கப்பட்டவைதான். இந்திய பைக்குகள் தான் இங்கே பட்டிதொட்டி எங்கும் பிரபலமானவை. அங்கொன்றும் இங்கொன்றுமாக ஜப்பானின் பைக்குகளைக் காணமுடியும். ஆரம்பகாலங்களில் ஜப்பான் மோட்டார் சைக்கிள்களைப் பெருமைக்கு வைத்திருந்தனர். பின்னாட்களில் அதை வைத்திருந்தால் பார்ப்பவர்களுக்கு ஒரு பகட்டு உணர்வை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கில் தற்போது பலர் வைத்துள்ளனர். 

அதிகாலை ஐந்து மணிக்கு நான்கு பேரும் வவுனியா நகரில் இருந்து புறப்பட்டோம். பனி விலகிய காலம் அது. ஆனால் ஒரு இளங்குளிர் படர்ந்து கொண்டே இருந்தது. முதல் கட்டமாக திருகோணமலை செல்வது என்று தீர்மானித்தோம். இலங்கை ஒரு சிறிய தீவாக இருந்தாலும் அதனை பைக்கில் சுற்றி வருவது என்பது சாதாரண விடயம் அல்ல. மனதில் ஒரு தன்னுணர்வு உண்டாக வேண்டும். மாணிக்கவாசகர் கூறுவது போல ஒருவகையான "மத்தோன்மத்தம்" பீடித்திருக்க வேண்டும். 

திருமலை-வவுனியா வீதியில்...

வவுனியாவில் இருந்து திருகோணமலை செல்வதற்கு குறுகிய வழியாக ஹொரவப்பொத்தானை(A29) சென்று அங்கிருந்து A12 வழியாக திருகோணமலையை அடைவதுதான். ஆனால் நாம் தேர்வு செய்தது ஹெப்பட்டிகொல்லாவை வழியாகச்சென்று B211 பதவியா-புல்மோட்டை சென்று திருகோணமலை செல்வதற்குத் திட்டமிட்டோம். ஹெப்பட்டிகொல்லாவை என்றதும் எனக்கு மனதில் வருவது அங்கு அரச பேரூந்து ஒன்றின் மீது 2006 ஜீன் மாதம் மேற்கொள்ளப்பட்ட கண்ணிவெடி தாக்குதலில் 60 பொதுமக்கள் கொல்லப்பட்டதுதான். இப்பொழுதும் அந்த இடத்தை அடையாளம் காணும்படி நினைவு அமைத்துள்ளனர்.  அப்போது இலங்கை- புலிகளின் சமாதான முயற்சிகள் சீர்குலைவதற்கு மிக மிக முக்கிய காரணமாக இந்த தாக்குதல் அமைந்தது. சிங்கள மக்கள் மத்தியில் சிங்கள அடிப்படைவாதிகளால் தமிழ் மக்கள் பயங்கரவாதிகள் என்ற பிரச்சாரங்கள் இந்நாட்களில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது.  அப்போது எனக்கு வயது 15 ஆக இருந்தது. எனினும் இன்றும் அத்தருணங்களை நினைத்துப் பார்க்கின்றேன். 

பதவியா வழியாகச் செல்லும்போது ஒரு ஆறு ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ஆற்றின் கரையில் பைக்குகளை நிறுத்திவிட்டு, உலர்ந்த மருதமரத் தடிகளைக்கொண்டு, மூன்று கற்களைக்கொண்டு ஜெனன் கொண்டு வந்திருந்த சில்வர் பாத்திரம் மூலம் தண்ணீரைச் சூடாக்கித் தேனீர் அருந்தினோம்.  வன்னிப் பெருநிலப்பரப்புக்களைச் சென்றடையும் பல ஆறுகள் இந்நிலத்தை ஒட்டிய மலைகளில் இருந்து தொடங்குபவைதான். அல்லது கிளை ஆறுகளாக வெடித்துப்பாய்பவைதான். 

முகங்களின் தேசம்

அப்போது என்னுடைய Lens பூட்டப்பட்ட கமராவை நான் வெளியே எடுத்த போது அந்தக் கமரா Bag  இல் இருந்து ஒரு புத்தகம் வெளியே வந்தது. அருகில் இருந்த வினோத், விஜிதன் இருவரும் கண்டுவிட்டனர். அவர்கள் சிரிப்பில் ஒரு ஒளி தெரிந்தது. நான் கொண்டுவந்த புத்தகம் அவ்வகையானது. 'இங்கும் இவரை விடமாட்டாயா' என்று ஜெனன் நக்கலடித்தான். நான், இங்கு வருவதற்கு இவரது இந்தப் புத்தகமும் ஒரு சிறிய காரணம் என்று கூறினேன். ஒரு தேசத்தைப் புரிந்து கொள்வது எப்படி?. எழுதப்பட்ட வரலாறுகளின் வழியாக மட்டுமல்ல, இலக்கியங்களின் வழியாக மட்டுமல்ல, பயணத்தில் மூலமாகவும் புரிந்து கொள்ளலாம் என்று இந்த நூல் விளக்கியிருந்தது. அதனை அவர்களுக்கு இரண்டு நிமிடங்களுக்குள்ளாக விளக்கினேன். அந்நூலைப் படிப்பதற்கு வழங்குமாறு கூறி சில பாகங்களை வாசித்தனர். ஜெயமோகன் எழுதிய முகங்களின் தேசம் தான் அந்நூல்.ரசனை மிக்க ஒவ்வொரு பயணியும் வாசிக்க வேண்டிய நூல் இது.  பின்னர் தமிழே கேட்டு அறியாத அந்த ஆற்றில் உரக்கக் கத்தினோம். மந்திகள் மருதமரக் கொப்புகளை உலுப்பக்கண்டு பைக்குகளை எடுத்துக்கொண்டு புல்மோட்டை புறப்பட்டோம். 

ஜெனன், வினோத், விஜிதன்

வினோத், நான், விஜிதன்


புல்மோட்டை ஒரு சுற்றுலாப்பயணப் பகுதி. யுத்த காலத்தில் இந்த இடம் கடும் சமர்களை எதிர்கொண்ட பகுதி. புலிகள் அமைப்பின் வடக்குக்கும் கிழக்குக்குமான ஒரு தொடுப்பாக அல்லது வழங்கல் மையமாக இந்த இடம் காணப்பட்டது. இலங்கையின் ஐந்தாவது நீளமான ஆறாகிய ஜான் ஓயாவுக்குக் குறுக்காக ஒரு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது நாம் குறித்த பாலத்தில் நின்றிருந்தோம். இலங்கையிலுள்ள 1150 பாலங்களில் இதுவும் ஒன்றாகும்.  குறித்த ஆறு மத்தியமாகாணத்தின் றிதிகல மலைக்குன்றுகளில் தொடங்கி 142 கிலோமீட்டர் நீளமாக ஓடி கிழக்குக் கடலில் சங்கமிக்கின்றது. இந்த ஆற்றினை மறித்து யான் ஓயா நீர்த்தேக்கம் ஒன்று வடமத்திய மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் மிக வெற்றிகரமான ஒரு நீர்த்தேக்கமாக அது அமைந்துள்ளது. எல்லா இடத்திலும் நடப்பது போலவே குறித்த நீர்த்தேக்க அமைவினால் காணிகளை இழந்த மக்கள் உள்ளதாகப் போராட்டம் நடைபெற்றும் இருந்தது. 



யான் ஓயா பாலத்தில் ஜெனன்

களிப்பில் வினோத், விஜிதன், நான்


குறித்த பாலத்திற்கு அருகில் இராணுவச் சோதனைச் சாவடி ஒன்று நீண்ட காலமாகக் காணப்படுகின்றது. குறித்த இடத்தில் அனுமதியைப் பெற்றுவிட்டே நாம் புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். பாலத்தைக் கண்டதும் தாவிக் குதிக்கும் சிறு பிள்ளைகள் போல முப்பது வயதை அடைந்திருந்த நாம் துள்ளிக்குதித்துக் கொண்டு இருந்தோம். யாராவது வந்து நீங்கள் என்ன சிறுபிள்ளைகளா என்று கேட்டால் இப்போதுதான் இருபது வயது என்று கூறவேண்டும் என்று நான் மற்ற மூவரிடமும் கூறி இரும்புப் பாலத்தில் நடைபோட்டோம். பாலத்தில் நின்று பார்த்தால் நானூறு ஏக்கர் அளவுக்கு வயல் நிலங்கள் விரிந்து கிடந்தன. 


பயணம் ஆரம்பிக்கும் முன்பே நாம் நால்வரும் ஏகபோகமாகக் கூறியது நாங்கள் செல்லும் போது கடற்கரை வீதிகள் இருந்தால் அதன் துணைக்கொண்டு எமது பயணத்தைத் தொடர்வோம் என்றுதான். அதன்படியே காததூரத்தில் கடற்காற்று வீச புல்மோட்டையில் இருந்து புறப்பட்டு திரியாய்-குச்சவெளி-நிலாவெளி வழியாகத் திருகோணமலையை அடைந்தோம். திருகோணமலை இலங்கையில் எனக்குப் பிடித்தமான பிரதேசம். மார்கழி தவிர்த்து எக்காலத்திலும் கடும் வெய்யில் வெளுத்து வாங்கும் பிரதேசம். என்ற போதும் அதன் மீது எப்போதும் தீராக்காதல்தான். மாணிக்கவாசகர் தனது உயிருண்ணிப் பத்தில் சிவனைப் பாடும்போது "ஊனார் உடல் புகுந்தான், உயிர் கலந்தான், உளம் பிரியான்" என்று உருகுவார். இங்குள்ள திருக்கோணேச்சர நாதனைக் காணும்போதெல்லாம் எனக்குள் ஒரு மாணிக்கவாசகர் உருக்கொள்வார். இத்தலம் பாடல்பெற்ற தலம் என்ற சிறப்புக்குரியது. இத்தலம் அமைந்துள்ள இடத்தை நீங்கள் காணும்போதெல்லாம் உங்களுக்குள் ஒரு பரவசம் வரக்கூடும். "குருந்தொடு முல்லை கொடிவிடும் பொழில் சூழ் கோணமாமலையமர்ந் தாரே" என்று சம்பந்தர் பாடிய பதிகத்தை நினைத்து நினைத்து உருகி மலைசேரும் சிவனடியார்கள் எத்தனை பேர் என்று யாரறிவார். சம்பந்தர் பாடும் போது குறித்த பதிகங்களில் மலையமர்ந்தாரே என்று எவ்வளவு ரசனையுடன் பாடியுள்ளார். மலையில் அமர்வதும் அம்மலையில் இருந்து கடலைக் காண்பதுவும் எத்துணை பெரும்பேறானது. 


திருகோணமலையில் தான் சிறந்த கடற்கரைகளும் உள்ளன. அத்துடன் இங்குள்ள சல்லி அம்மன் கோயில் மிக மிக வியப்புக்குரிய ஒரு அமைவிடத்தில் உள்ளது. ஒருபக்கம் கடலும் மூன்று பக்கம் தரையும் உள்ள மிக ரம்மியமான ஒரு பகுதி. 


நாம் திருகோணமலையில் இருந்து புறப்பட்டு இலங்கையின் மிக நீளமான கிண்ணியா பாலம் வழியாக மட்டக்களப்பு நோக்கிப் பயணமானோம். கிண்ணியா பாலம் 1300 அடி நீளமானது. 2009 சிவில் யுத்தம் முடிந்த பின்பு இலங்கையில் நிர்மானிக்கப்பட்ட மிகப்பெரிய உட்கட்டுமானம் இதுதான். உள்நாட்டுப்போரில் முதலில் அரசபடைகளால் கிழக்கு மாகாணம் கைப்பற்ப்பட்டது. அதன் பின்பு இரண்டரை ஆண்டுகளை கழித்தே வடக்கும் கைப்பற்ப்பட்டது. திருகோணமலைக்கும் மட்டக்களப்புக்கும் செல்வதற்கு மிகக்குறுகிய வழியாக இந்தப்பாலம் அமைந்தது.  புலிகள் காலத்தில் கடல்வழியும் காட்டுவழியும் உபயோகிக்கப்பட்டது. 


கிண்ணியா மூதூர் தோப்பூர் சேருநுவர வெருகல் வழியாக கதிரவெளி சென்றடைந்தோம். எனக்கு இந்த வெளி என்ற சொற்பதம் மீது எப்போதும் ஒரு கிராக்கி உண்டு. காற்றுவெளி இடை கண்ணம்மா என்பதுபோல.  மட்டக்களப்பில் சந்திவெளி, நாவிதன்வெளி, உப்புவெளி என்று வெளி என்ற சொல்லைக் கொண்டு ஊரமைத்திருப்பார்கள். அந்த ஊர்க்காரர் ஒருவரை வாகரைப் பகுதியில் மறித்து என்ன காரணம் என்று கேட்டேன். எடா மோனே இங்கருந்து பாருடா எந்தப்பெரிய வெளியா இருக்கு இந்த இடம் எல்லாம். இதுக்கு பின்ன எப்படி பேர் வைப்பாங்களாம் என்று நக்கலாகக் கூறிச்சென்றார். அவரது நக்கலின் உண்மையும் இருந்தது. 


மட்டக்களப்பில் வாகரை-வெருகல் இந்த இரண்டு இடப்பெயர்களையும் நான் எனது பன்னிரெண்டாவது வயதில் இருந்து செய்திகளில் கேட்டும் வாசித்தும் வருகிறேன். மிகத்துயரமான வரலாறு கொண்ட தமிழூர்கள் இவை. மலையத்தூர் ராமகிருஷ்ணன் எழுதிய மலையாள நாவல் ஒன்று வெருகல் என்ற பெயரில் வருவதாகவும், அதில் தமிழ் ஐயர் ஒருவரின் கதை உள்ளதாகவும் கேள்விப்பட்டுள்ளேன்.  வாகரை என்ற இந்த ஊர்  2004 க்கு முன்னர் வாகரைப் புலிகள் என்று பிரபலமாக அறியப்பட்டது. இங்கு புலிகள் அமைப்பு மிகப் பலமாக இருந்தனர். 2004 க்கு பின்னர் புலிகள் அமைப்பின் பிளவினால் இங்கு புலிகளும் பிரிந்து சென்ற குழுவும் மோதிக்கொண்ட இடமாக இது அமைந்தது. இங்கு இரத்த ஆறுகள் 2004-2008 வரை ஓடியதாகப் பல விவரணைகள் உள்ளன. ஈழத்து யுத்தம் அல்லது வடுக்கள் சார்ந்த நாவல்களிலோ சிறுகதைகளிலோ அல்லது அபுனைவுகளிலோ இந்த இரண்டு ஊர்ப்பெயரும் இடம்பெறவில்லை என்றால் அது பூரணமான ஒன்றாக இருக்காது. நான் நினைக்கின்றேன் இந்த இரண்டு ஊர்கள் பற்றி கவிஞர் கருணாகரன் பல கவிதைகள் எழுதியுள்ளார். அவரது இரத்தமாகிய இரவும் பகலுமுடைய நாட்கள் என்ற தொகுப்பில் அதனை வாசித்த ஞாபகங்கள் உள்ளன. அதில் படுவான்கரைக் குறிப்புகள் (Remarks of Paduvankarai) என்ற நெடுங்கவிதை அற்புதமான ஒன்று. அதில்தான் "தேன்நாட்டின் மீன்கள் பாடமறுத்தன" என்று கருணாகரன் சகோதரச்சண்டையின் இரத்தசோகத்தை விவரணமாக்கி இருப்பார். 


நாங்கள் மாங்கேணி- ஓட்டமாவடி வழியாக வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழக வாசலை வந்தடைந்து இருந்தோம். கிழக்குப் பல்கலைக்கழக முகப்பு மிகச்சிறப்பான ஒரு தோரணையில் அமைக்கப்பட்டு இருந்தது. A15 பிரதான வீதி என்பதனால் சனப்புழக்கங்களும் இளைஞர் யுவதிகளும் மிகுந்து இருந்தனர். வெய்யிலால் வந்தது கூட்டத்தில் நிற்பதற்கு மிகந்த அயர்ச்சியை அளித்தது. எனினும் தங்களைப் புகைப்படம் எடுக்கச் சொல்லி வினோத், விஜிதன் வற்புறுத்தினர்.  புகைப்படம் எடுத்துவிட்டு மதிய உணவை உண்பதற்காக மட்டக்களப்பு மாநகருக்குள் உட்பிரவேசித்தோம். மூன்றுபக்கமும் நிலத்தால் சூழப்பட்ட கடற்கரைக்காயலை அப்போது கண்டடைந்தோம். நான்கரை ஐந்து மணி இருக்கும். நாம் சென்றடைய வேண்டிய தூரம் இன்னமும் நூற்றி இருபது கிலோமீட்டர்கள் இருந்தது. என்றாலும் மீன்பாடும் தேன்நாட்டில் நம் நேரத்தை வீணடிக்கவே விரும்பினோம். பழைய கோட்டைச்சுவர்களையும், காயல் நிலத்தையும் சுற்றினோம். கீழைக்காற்று வீசும்போது ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவல் இடையிடையே வந்து குறுக்கிட்டது. FX நடராஜா எழுதிய மட்டக்களப்பு மான்மியம் நூலை வாசிக்க வேண்டும் என்று நீண்ட நாட்கள் ஆவலாக இருந்தேன். எனினும் குறித்த நூல் கிடைக்கப்பெறவில்லை. மட்டக்களப்பை அடைந்ததும் மட்டக்களப்பாரைக் கண்டதும் மட்டக்களப்பில் இருந்து  புறப்பட்டதும் ஒருவகையான வரலாற்றுப்பார்வையைத் தவறவிட்டதான ஒரு உணர்வினை என்னுள் நினைத்துக்கொண்டேன். 

கிழக்குப் பல்கலைக்கழகம்

வாயிலில் விஜிதன், வினோத்

மட்டக்களப்பில் இருந்து அறுகம்குடாவுக்கு இரவு நேரத்தில் பைக் பிரயாணத்தை மேற்கொள்வது என்பது ஆபத்தானது. அதற்கு இரண்டு காரணங்கள் ஒன்று இடையில் காணப்பட்ட வாகன நெருக்கடிகளும் எதிர்வரும் வாகனங்களின் வெளிச்சங்களும். இரண்டாவது வீதிகளில் காணப்படும் யானைப்பிரச்சனை. என்றாலும் நாம் அறுகம் குடாவுக்குச் சென்றே ஆக வேண்டும் என்று இருந்தோம். அதற்குக் காரணம் விடிகாலையில் சூரியோதயத்தை அந்த இடத்தில் காணும்போது புதிய உணர்வும் உத்வேகமும் உண்டாகும் என்பதேயாகும். மட்டக்களப்பில் இருந்து அறுகம்குடா செல்வதற்கு 120 கிலோமீட்டர்கள் என்ற போதும் எமக்கு மூன்றரை மணி நேரங்கள் பிடித்து இருந்தது. மெதுவாகவே எமது பயணம் இருந்தது. இரவின் நிழல் எமது நால்வரின் பைக்கில் பட்டுத் தெறித்தது. அந்த தெறிப்பு எமக்குள் இரவு குறித்து இருந்த அச்சத்தை விலக்கி வைத்தது. 

மட்டக்களப்பு

இரவு பதினொரு மணிக்கு அறுகம் குடாவைச் சென்றடைந்தோம். அறுகம்குடா இலங்கையில் மிகப்பிரபலமான சுற்றுலா தலம். இங்கு கடல் நீரில் நீருலாவல் (Surfing) மேற்கொள்ளக்கூடிய உலகின் சிறந்த பத்து இடங்களில் இதுவும் ஒன்றாக தெரிவுசெய்யப்பட்டுள்ளது. அதனால்தான்   2019 ஆம் ஆண்டு So Sri Lanka Pro 2019 என்று உலகளாவிய நீருலாவல் நீர்ச்சறுக்கல் போட்டி நிகழ்த்தப்பட்டது. 









அறுகம் குடா அதிகாலையில்

நாம் எந்த இடம் சென்றடைகிறோமோ அந்த இடத்தில் இருந்து இணையத்தில் தங்கும் அறைகளை புக் செய்து தங்குவது என்றே முடிவு செய்யப்பட்டது. அப்படித் தங்குமிடங்கள் கிடைக்கவில்லை என்றால் நான்குபேர் தங்கக் கூடிய கூடாரம் ஒன்றை ஜெனன் வைத்திருந்தான். அதில் தங்கலாம் என்றும் முன்திட்டம் ஒன்றை வைத்திருந்தோம். ஆனால் இறுதிவரை எமக்கு அந்தக்கூடாரம் பயன்படாமல் போனதுதான் சோகக் கதை. 


எத்தனை மணிக்குத் தூங்கினாலும் காலையில் நான்கு மணிக்கு எழும்பும் வழக்கத்தை என்னுள் நான் வைத்திருக்கிறேன். அந்த வழக்கத்திற்கு ஏற்ப நான் விழித்துக்கொண்டேன். கடலுக்கு அருகில்தான் நாம் தங்கிட இடம் அமைந்திருந்தது. அந்த இடம் மரம் ஒன்றின் மேலே வீடமைத்து காணப்பட்டது. அதிலிருந்து எழும்பி நின்று கடலைப் பார்த்தேன். தன் ஆயிரம் கைகளுடன் மறையும் இருளைத்  தூர எறிந்து கொண்டு இருந்தது கருநீலக்கடல். அத்தருணத்தில் நீல நிறம் மட்டுமே எழுந்து இருளை வெட்டி விளாசிக்கொண்டு இருந்தது. இந்த இருள் எப்படி இல்லாமல் போகிறது என்றால் நீலக்கடலுடன் மோதுண்டுதான் என்று அற்பமான கற்பனையை ஏற்றிக்கொண்டேன். ஒருமணி நேரம் அலைகளையே பார்த்துவிட்டு கடலைச் சேர்ந்தேன். பேரலைகள் மிகத் தள்ளியே வீசின. 2004 சுனாமியின் போது இந்த இடங்கள் சிதிலமடைந்து இருந்தன. அதனை அப்போது நினைத்துக்கொண்டேன்.  கடல்புரத்தில் வண்ணநிலவன் போல நின்று பிலோமி எந்தப்பக்கத்தில் இருந்து உருவான கதாபாத்திரம் என்று நினைத்துச் சிரித்துக்கொண்டேன். 5.45 அளவில் மூவரும் விழித்துக்கொண்டு கடலைச் சேர்ந்தனர். ஏராளம் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டோம். இலக்கியத்துக்குப் பின்னர் நான் மிகவும் விரும்பும் துறை புகைப்படம் எடுத்தல். இயற்கை சார்ந்த இருபதாயிரம் புகைப்படங்களை இத்தருணம் வரை எடுத்து வைத்திருந்தேன். 








சூரியோதயத்தில் நான்

கடல் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தும் தருணங்கள் இரண்டு. ஒன்று கருமேகங்கள் சூழ்ந்து மழைக்கு ஆயத்தமாகும் நேரம் கடலைக் காண நேர்கையில். இரண்டு மாலை மங்கும் போது உண்டாகும் அமைதியில் தொடர்ந்து நள்ளிரவு வரை கதறும் அலைகளின் ஓசையைக் கேட்க நேர்கையில். இதையும் தாண்டி ஒரு பகற்பொழுதில் சுனாமி நேர்ந்தது என்பது ஆச்சரியமான ஒன்றென்றே எண்ணத் தோன்றுகின்றது. இயற்கையை மீறிய விடயம். 


எமது வட பகுதிகளில் உணவை மிகவும் காரமாக வைப்பார்கள். குறிப்பாக எனது தாயாரின் பூர்வீகமான பனங்காமம் - வன்னி பகுதியில் மிளகாய் கறிக்கு போட்டிருந்தாலும், கொத்தமிளகாய் ஆறேழு இட்டு உணவை உறைப்பாக வைப்பார்கள். எனது தந்தையாரின் இடம் யாழ்ப்பாணம் காரைநகர் என்பதால் அங்கு அநேகமாக சைவ உணவையே அதிகமாக உண்டனர். பச்சைமிளகாய் பாவனையே அதிகமாக இருந்தது. இந்த இரண்டு உணவுக்கலப்புக்கு இடையில் எனது நா பழக்கப்பட்டு இருந்தது. எனினும் இங்குள்ள உணவுப்பழக்கம் வித்தியாசமானது. கறிகளில் உறைப்புக் குறைவாகவே உள்ளது. காரத்தைக் கூட்டும் தூள்களைக் குறைவாக இடுவதே காரணமாக இருக்கக் கூடும். 


நாம் அறுகம்குடாவில் இருந்து புறப்பட்டு மாத்தறை மாவட்டத்தின் மிரிஸ்ஸ பகுதிக்குச் செல்வதாகத் திட்டமிட்டோம். மாத்தறை இலங்கையின் தென்கோடி மாவட்டம். வடக்கில் பருத்தித்துறை இலங்கையின் உச்ச தொலைவு/முனை என்றால் தெற்கில் தேவேந்திரமுனை உச்சதொலைவாகும். அது மாத்தறையிலுள்ளது. அங்குள்ள வெளிச்சவீட்டினைப் பார்க்க வேண்டும் என்பதே எமது திட்டம். 

இதுதான் இலங்கையில் மிக உயரமான வெளிச்சவீடு. அதேபோல தென்கிழக்கு ஆசியாவிலும் இது ஒன்றே உயரமானது. இது 160 அடி உயரமானது. தற்போது இது கணணிமயப்படுத்தப்ட்ட ஒரு வெளிச்ச வீடாக அமைந்துள்ளது. 

நாம் பொத்துவில் வழியாக லகுகல வனாந்தரப் பாதை வழியாக எமது பயணத்தைத் தொடர்ந்தோம். குமண மற்றும் யால உள்ளிட்ட ஒதுக்குக் காடுகள் தென்பகுதியில் உள்ளமையால் அம்பாந்தோட்டைக்கு நேரடியான பாதைகள் அமைக்கப்படவில்லை. ஆரம்ப காலம் தொட்டே குறித்த காடு பௌத்த சிங்கள நம்பிக்கையின் சின்னமாக உள்ளது. ஆகவே இனியும் அதனை அழிப்பார்கள் என்று நம்ப முடியாது. அந்த நம்பிக்கை என்றுமுள்ளதாக அமைய வேண்டும். லகுகல தேசிய வனம் சிறிய வனமாயினும், இங்கு யானைகள் உலாவரும் பகுதியான அதேவைளை இங்குதான் யானைகள் உறவு கொண்டு குட்டிகளை ஈணுகின்றன. காலையில் இதமான குளிருடன் வனப்பாதையில் செல்வது என்பது அனாயாசமானது. அதனை நான் உணர்ந்து கொண்டே சென்றேன். எனது சிறுவயது முதல் புத்தகங்களில் கண்ட பல பறவைகளை நேரில் கண்டது இந்த வனப்பகுதிகளில்தான். ஒரு கட்டத்தில் இருவாட்சி எனப்படும் Indian Hornbill இனைக் கண்டதும் அங்கேயே பைக்கை நிறுத்திவிட்டேன். சில நேரம் அந்த நீர்த்தாரையைப் பார்த்து இருவாட்சியையும் ரசித்துவிட்டு செல்ல மனமில்லாமல் சென்ற தருணத்தை நினைவிலாழ்த்திப் பார்க்கின்றேன். 


காடுகளைத் தாண்டிச் சென்ற போது ஊர்மனைகள் தென்படத் தொடங்கின. அந்த ஊர்மனைகளை அடைவதற்கான பாதைகள் வளைவாக வரவேற்றன. அதாவது மலைகளை தாழ்த்திய நிலங்கள். அதனூடே வீதியமைக்கப்பட்டுள்ளன. அப்படியே மொனராகலை சென்றடைந்தோம். மொனராகலையில் இருந்து புத்தல சென்று புத்தல வழியாக கதிர்காமம் செல்வது அடுத்த திட்டம். இந்த இடைவழி மிக ஆபத்தானது. யானைகள் வழிமறிக்கும் வலயம்.


புத்தலவில் இருந்து கதிர்காமம் செல்லும் B35 பாதையில் தான் யானைகளை முதன் முதலில் நேரடியாக எதிர்கொண்ட அனுபவம் எனக்குண்டு. நான்கு நண்பர்கள் வடக்கில் இருந்து நான்கு பைக்குகளில் சென்றிருந்தோம். இந்தப் பாதை மிகவும் அச்சத்தையும் அதேநேரம் ஒருவித சாகச உணர்வையும் உண்டாக்கும் தன்மை மிகுந்தது. ருகுணு தேசிய பூங்காவின் மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் வலயங்கள் அந்தப் பாதையில் உள்ளடங்குகின்றன. இந்த வனப்பாதை 45 கிலோமீட்டர் தூரம் நீண்டிருந்தது. வீதியின் இருமருங்கும் வனம் உதிர்ந்து ஏப்ரல் வெயில் கொளுத்திக் கொண்டிருக்க, மிகச்சமீபமாக மழை மேகங்கள் மலை முகட்டில் சதிராடியபடியிருந்தன. 



குறும்பு யானையுடன்









வனப்பாதை தொடங்கும் போதும் முடியும் போதும் யானை வீதியின் ஓரமாக நின்று உணவு கேட்கும் எனவும், அவற்றை ஆத்திரமூட்டினால் அல்லது உணவு என்ற கூறி வேறு எவற்றையும் வழங்கினால் அவை துரத்தித் தாக்கும் என்றும் வனப்பாதையால் செல்லும் முன்னர் சிலர் அறிவுரை வழங்கியிருந்தனர். 


குறித்த வனப்பாதையின் வாயிலிலேயே யானை ஒன்று  வாகனங்களில் செல்லும் மக்களிடம் வம்பு செய்துகொண்டிருந்தது. பழங்களை வழங்கிய வாகனங்களுக்கு மட்டும் வழிவிட்டது. நாம் அதன் அழிச்சாட்டியங்களைக் காண்பதற்காக இருநூறு மீட்டர் தொலைவில் பைக்குகளை நிறுத்திவிட்டுப் பார்த்துக்கொண்டிருந்தோம். கடலின் அலையைக் காணும் போது அந்தக் கடலின் ஆழத்தையும் அகலத்தையும் அறியாமல் மேலும் செல்ல எத்தணிக்கும் மனத்தின் ஆர்வம் போல, யானை செய்யும் குறும்புகளை நீண்ட நேரமாக அவதானித்த நானும் இன்னொரு நண்பனும் யானைக்கு மிக அருகில் சென்றோம். யானைக்குப் புன்னகை என்று ஒன்று இருப்பதை நான் செல்ல முன்பாகவே எனது கமராவில் எடுத்துப் பார்த்திருந்தேன். அந்த ஆர்வம் தான் மிகச் சமீபமாகச் செல்ல வைத்தது. அரை நிமிடம் வரையும் அமைதியாக இருந்த யானை, தனது பின்னங்கால்களைத் துருத்தி முன்னங்கால்களால் நடையெடுத்து வைத்தது எம்மைத் தாக்குவதற்கு என்று.  அதுதான் யானை மீது நாம் கொண்டிருந்த அத்தனை சித்திரங்களும் மாறிய தருணம். "நினைவில் காடுள்ள மிருகம்" என்று க.சச்சிதானந்தன் கூறிய வார்த்தைகள் தான் இன்றும் என் ஆஸ்தான வார்த்தைகள். எனது அனைத்து தனிப்பட்ட கோப்புகளிலும் இதனை எழுதி வைத்துள்ளேன். அந்த வார்த்தைகள் எத்தருணத்திலும் எதனில் ஆர்வத்தைச் செலுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் தன்மையானவை. நம் நினைவிலும் காடுகள் உள்ளன. நினைவில் காடுள்ள மிருகத்தை எளிதில் பழக்க முடியாது என்று அன்றைய தினம் யானையிடம் கற்றிருந்தேன்.   

புகைப்படங்கள் புத்தல-கதிர்காமம் வீதியில் வைத்து 2021 ஏப்ரல் 02ம் தேதி  எடுக்கப்பட்டது. மேற்கூறிய தருணங்களில் வாய்த்த புகைப்படங்கள் இவை. 


00


யானைகளைக் காப்போம் என்ற உணர்வானது இலக்கியங்கள் வழியிலும் உள்ளூர எழுதப்பட்டுள்ளது. இவை படைப்பு இலக்கியங்கள் மூலம் காத்திரமாக வெளிப்பட்டிருந்தன. யானைகள் காட்டை உருவாக்கி மிக முக்கியமான பங்களிப்பை அளிக்கும் மகத்தான உயிர் என்பதை பொதுவான அறிவு நூல்களில் கற்கலாம். அவற்றுக்கு உணர்வு அளித்து புரிய வைப்பவை இலக்கியங்களே.  ஜெயமோகன் யானைகள் பற்றி எழுதிய உச்சக் கதைகளாக யானை டாக்டர், ஊமைச்செந்நாய், மத்தகம் மூன்றையும் கூறவேண்டும். இம்மூன்று கதைகளிலும் வாசகர்களை  யானையின் மனநிலைகளுக்குள் இணைத்து விட்டாற்போலவும் அதை ஒரு மேலான உயிரினமாகவும் சொல்லியிருப்பார். 


அநேக கதைகளில் யானையைப் பற்றி எழுதியவர் யானை டாக்டர் கதையில்தான் யானை குறித்து எழுதுவதற்கான காரணத்தைக் கூறியிருப்பார். அது ஒவ்வொருவரும் தன்னிலை பற்றி அறிவதற்கான முகாந்திரம் எனலாம்.


யானை டாக்டரில் இடம்பெறும் யானையின் மரணம் பற்றிய ஒரு சூழலியல் ஆதங்கம்: 


"மற்ற எந்த மிருகத்தைவிடவும் யானைக்கு மிக அபாயகரமானது அந்தக் குப்பி உடைசல். யானையின் அடிக்கால் ஒரு மணல்மூட்டை போன்றது. குப்பிகள் அனேகமாக மரத்தில் மோதி உடைந்து மரத்தடியிலேயே கிடக்கும். யானை அதன் மகத்தான எடையுடன் அதன்மேல் காலை வைத்தால் குப்பி நேராக அதன் பாதங்களுக்குள் முழுக்க புகுந்துவிடும். 


இருமுறை அது காலைத்தூக்கி வைத்தால் நன்றாக உள்ளே செல்லும். அதன் பின்னால் யானை நடக்கமுடியாது. இரண்டே நாட்களில் காயம் சீழ் வைக்கும். புழுக்கள் உள்ளே நுழையும். புழுக்கள் சதையை துளைத்து சீழை உள்ளே கொண்டுசெல்லும். முக்கியமான குருதிப்பாதைகளையோ எலும்பையோ அவை தொட்டுவிட்டதென்றால் அதன்பின் யானை உயிருடன் எஞ்சாது.

வீங்கிப் பெருத்து சீழ் வழியும் கால்களுடன் பலநாட்கள் யானை காட்டில் அலையும். ஒரு கட்டத்தில் நடமாட முடியாமலாகும்போது ஏதாவது மரத்தில் சாய்ந்து நின்றுவிடும். 


ஒருநாளில் முப்பது லிட்டர் தண்ணீர் குடித்து இருநூறு கிலோ உணவு உண்டு ஐம்பது கிலோமீட்டர் நடந்து வாழவேண்டிய உயிர் அப்படி ஐந்து நாட்கள் நின்றால் மெலிந்து உருக்குலைந்துவிடும். முதுகு எலும்பு மேலே துருத்தும். கன்ன எலும்புகள் புடைத்தெழும். காது அசைவது குறையும். 


மத்தகம் தாழ்ந்து தாழ்ந்து வரும். மெல்ல துதிக்கையை தரையில் ஊன்றி குப்புறச்சரிந்து நிற்கும். பின் மத்தகமே தரையில் ஊன்றும். அடுத்தநாள் பக்கவாட்டில் சரிந்து வயுறு பாறைபோல மறுபுறம் எழுந்து நிற்க விழுந்து கிடக்கும். வாலும் துதிக்கையும் மட்டும் சுழல கண்களை மூடித்திறந்தபடி நடுங்கிக்கொண்டிருக்கும். 


பிற யானைகள் அதைச்சூழ்ந்து நின்று தலையாட்டி பிளிறிக்கொண்டிருக்கும்.

அதன்பின் யானை சாகும். கடைசி துதிக்கை அசைவும் நின்றபின்னரும்கூட பலநாள் யானைக்கூட்டம் சுற்றி நின்று கதறிக்கொண்டிருக்கும். பின்னர் அவை அதை அப்படியே கைவிட்டு பலகிலோமீட்டர் தள்ளி முற்றிலும் புதிய இன்னொரு இடம் நோக்கிச் சென்றுவிடும். 


யானையின் தோலின் கனம் காரணமாக சடலம் அழுகாமல் இந்தக்காட்டில் எந்த மிருகமும் அதை சாப்பிட முடியாது. அழுகிய யானையை செந்நாய்கள் முதலில் தேடிவந்து வாயையும் குதத்தையும் மட்டும் கிழித்து உண்ணும். பின்னர் கழுகுகள் இறங்கி அமரும். கழுதைப்புலிகள் கூட்டம் கூட்டமாக வெகுதொலைவிலிருந்து தேடிவரும். 


மனிதனைவிட நூற்றிஎழுபது மடங்கு அதிக நியூரான்கள் கொண்ட மூளை கொண்ட காட்டின் பேரரரசன் வெறும் வெள்ளெலும்புகளாக மண்ணில் எஞ்சுவான்"


விலங்குகளில் உங்களுக்குப் பிடித்தது எது என்றும், மிக மகத்தான உயிரினம் எது என்றும் யாரேனும் கேட்டால் யானை என்று தயங்காமல் கூறுங்கள். யானைகள் பூவுலகின் பொக்கிஷங்கள்.


இந்த வழியைத் தாண்டி நாம் முருகன் உறையும் கதிர்காமத்தை அடைந்தோம். ஒரு சைவ இடத்தைப் பௌத்தர்கள் பராமரிப்பதையும், அதுவே மெல்ல அது பௌத்த பாரம்பரிய நம்பிக்கை ஸ்தலமாக மாறுவதையும், சைவ நம்பிக்கைகள் இற்றுப் போவதையும் நாம் கண்ணெதிரே கண்டிருந்தோம்.  முருகன் பாதுகாப்பாக உறைகிறான் என்றெண்ணி மகிழ்வத? அந்த முருகனின் நாமம் பௌத்த நம்பிக்கையில் செல்கிறதே என்றெண்ணிக் குழைவதா? என்று நினைத்திருந்தேன். எனினும் சித்தார்த்தனும் ஒரு இந்துவே என்றெண்ணி உள்ளத்தைத் தேத்திக்கொண்டேன். கதிர்காம முருகனை நினைந்து அருகிலோடும் மாணிக்க கங்கையில் நாம் நீராடிவிட்டு ஹம்பாந்தோட்டைக்குப் புறப்பட்டோம். 


கதிர்காமம்

அம்பாந்தோட்டை



அம்பாந்தோட்டை


ஹம்பாந்தோட்டை ஆரம்ப காலங்களில் அபிவிருத்த அடையாத ஒரு மாவட்டமாகவே எம்மால் அறியப்பட்டது. ஆனால் இங்கிருந்து உருவான அரசியல் குடும்பம் ஒன்று அரச தலைமைக்கு வந்ததும்  தமது பிரதேசத்தை எப்படி வளர்ச்சி அடையச் செத்துள்ளது என்பதனை அங்கு சென்றபின் கண்டுகொண்டேன். நான்குவழி நெடுஞ்சாலைகள், கப்பல் துறைமுகங்கள், விமானவழிப்பாதைகள், மற்றும் அரச கட்டிடங்கள், மின்விளக்குகள், ஏனைய உட்கட்டுமானங்கள் என்று இன்னோரன்ன விடயங்களில் மற்ற மாவட்டங்களை விழுங்கி அம்மாந்தோட்டை முன்னேறியுள்ளது. நாம் அம்பாந்தோட்டையை நினைத்து வியப்படைந்தோம். பிரம்மாண்டமான நகரம் ஒன்று நம் கண்ணெதிரே உலாவக்கண்டு மூர்ச்சையுற்றோம். அம்பாந்தோட்டை பூராகவும் சுற்றிவிட்டு மாலையளவில் மாத்தறையை அடைந்தோம். ஒரு பாதையில் அமர்ந்து வெளிச்ச வீடு ஒன்றைப் பார்த்தபடி அமர்ந்தோம். திடீரென ஜெனன் தொலைபேசியை எடுத்துப் பார்த்துவிட்டு, பெருங்குரலில் கத்தினான். கூச்சலிட்டபடி அலைகடலில் இறங்கி அலைகளைத் தாவினான். என்னடா என்று கேட்க நாம் இப்போது நிற்பது தேவேந்திர முனை என்றான். எனக்கு அந்நேரத்தில் புல்லரித்துவிட்டது. ஏனென்றால் நாம் வடக்கில் ஒரு தொங்கலில் இருந்து பயணம் வருகிறோம். அங்கிருக்கும் போது நாம் பள்ளிப் பாடங்களில் அறிந்திருந்தோம் தேவேந்திரமுனைதான் இலங்கையின் அதியுச்ச முனை என்று. அப்போது கற்கும்போது ஒவ்வொருவரின் கனவாக இந்த உச்சங்களை அடைவதில் ஆசை இருந்தது. இப்போது அந்த உச்சத்துக்கு மிகச்சாதாரணமாக வந்தடைந்துள்ளோம். இந்த மனநிலை எப்படி இருக்கும் என்றால் தாவிக்குதித்து வெளிச்ச வீட்டின் கூரையில் நின்று ஓ..... இந்த மா கடல் மாதாவே என்று ஆர்ப்பரித்துக் கர்ச்சனை செய்யத் தோன்றும் அல்லவா???

  





அம்பாந்தோட்டை
மாத்தறை


அம்பாந்தோட்டை



(  தொடரும்....... மத்திய மலைநாட்டை அடைந்தமை பற்றிய பகுதிகள் எழுதப்படும்)


தொடர்புடைய பதிவுகள்.

ஜெயமோகன் பகிர்வு


திரியாய் பயணக்குறிப்புகள்- திருகோணமலை

Comments

  1. Great service to Tamil World with Great courage enthusiam dedication Happiness Hardwork creativity talent Compassion Guidance truth & knowledge! God is with u all always my friends!Greetings from Sivan Tamil Aalayam/ Sivayogi Ashram/Sivan Tamil Kulturpark korslundvegen 45,2092 Minnesund Norway! WhatsApp group World Harmony Forum +4791784271

    ReplyDelete
  2. நன்றிகள்

    ReplyDelete

Post a Comment

Popular Posts