அலகில் அலகு - நதியின் நீர்க்கரங்கள்.


குறிப்பிடத்தக்க முதல் தொகுப்புகள் என்று நான் அண்மையில் வாசித்தவை மிகச் சிலவேயுள்ளன. சிறுகதைகளில் சுனீல் கிருஷ்ணனின் அம்புப்படுக்கை. கவிதைகளில் வேணு வெட்ராயன் எழுதிய அலகில் அலகு தொகுப்பு. 

அம்புப்படுக்கையில் குருதிச்சோறு என்ற கதை என்னை அடிக்கடி இம்சைப்படுத்தும் ஒரு கதையாக மாறியுள்ளது. மிக நேர்த்தியான ஒரு கதை. நம் மரபில் இருந்து கிளர்ந்த ஞானத்தின் வெளிப்பாடு அந்தக் கதை. அதுபோல அலகில் அலகு என்ற தொகுப்பிலுள்ள நவீன கதைகளைக் குறிப்பிட்டாக வேண்டும்.

தமிழின் கவிதை மரபு சங்க இலக்கியத்தில் தொடங்கி சிலப்பதிகாரத்தில் பாட்டுடைச் செய்யுளாகி கம்பனிடம் அது சேர்ந்தபோது கவிதையின் கரைகளை உடைத்து மொழியை அந்த விருத்தங்கள் ஆழத்தொடங்கி இருந்தன. பின் சிற்றிலக்கியங்களில் இருந்து வள்ளலாரிடமும் பாரதியிடமும் வசன கவிதையாக வந்தது. பின்னர் புதுக்கவிதை ந. பிச்சமூர்த்தியுடன் ஆரம்பித்து நகுலன், பிரமிள் முதலியோரின் நவீன கவிதைகளில் அலையெழுந்தாடியது. அந்த அலை இன்று தேவதேவன், தேவதச்சன், விக்கிரமாதித்யன், எம்.யுவன், க. மோகனரங்கன் என்று ஒரு பெருமரபையே உருவாக்கியுள்ளது. இதன் அடுத்த கட்டத்தில் கண்டராதித்தன், இளங்கோ கிருஷ்ணன், ஶ்ரீநேசன், முகுந்த் நாகராஜன் முதலியோர் உள்ளனர். இப்போது புதிதாக உருவான கவிதை மொழியின் தொகுப்பாகவே அலகில் அலகு எனக்குத் தெரிகிறது. 

நவீன கவிதையில் பரீட்சயமான சிலருக்கு இத்தொகுப்பினை வாசிக்கும்போது இதன் அனுபவம் ஏற்கனவே உள்ள ஒரு மொழியை ஞாபகமூட்டும். அல்லது அனுபவப்படுத்தும். அது தேவதச்சனுடையது. இத்தொகுப்பின் பல கவிதைகள் எனக்கு அவ்வாறே தோன்றுகிறது. ஆனால் கவிதைக்கான புதிய பரிணாமம் ஒன்று தீவிரமாகத் தெரிகிறது.

நவீன கவிதையின் பண்புகளில் ஒன்று தன்மொழியில் ஒரு மீறலை நிகழ்த்துவது. இது அதன் கருத்துத் தளத்தில் இருந்து மொழிமீதும் வாசகன் மீதும் நிகழ்த்தப்படும் இருபுரி நிலை என்றே கருதலாம். ஒரு இராணுவ வீரன் இறந்து விடுகிறான். அவனின் இறப்பு பொதுநலத்துக்காக நிகழ்ந்த உயிர்த்துறப்பு. அவனது இறப்பு சார்ந்த புறக்காரணிகள் அவனது இராணுவ ஒழுக்கத்தில் இருந்து வகுக்கப்பட்டிருக்கும்.. அந்நேரம் அவனது இறப்பு நிகழ்வது ஒரு பொதுநலத்துக்கு. அதன் அகக்காரணி யாதுவாக இருக்கும்?. ஒரு கட்டற்ற சுதந்திரத்துக்காக இருக்கலாம். பெரும் விடுதலைக்காக இருக்கலாம். இத்தொகுப்பிலுள்ள ஒரு கவிதையில் ஒழுங்கு (சீரான) என்பதும் அவனது ஒழுங்கின் விளைவு (மழை- சீராக முளைக்காத காளான்) என்பதும் எப்படிக் குறிப்பிடப்படுகிறது என்பதை ஒரு சிறந்த வாசகன் கண்டடையமுடியும்.

"தாழப்பறந்து 
பசும்புல்வெளியில்
மெல்ல கால் பதித்து
சீரான அடிவைத்து நடக்கும் 
வெண்ணிற பறவைகள்.
போர் நினைவிடத்தில்
சீரான இடைவெளியில்
உறைந்து நிற்கும்
வெண்பளிங்கு கல்லறை கற்கள்.
அவன் பொருட்டு 
எல்லோர்க்கும் பெய்த மழையில்
கொத்து கொத்தாய் முளைத்திருக்கும்
மொட்டுக் காளான்கள்"

ஒரு கவிதையின் வார்த்தைகளை எப்படிப் போட்டுப் பார்த்தாலும் அர்த்தம் கொள்ள முடியும். அதே நேரம் அதற்குரிய அர்த்தம் தனியே நின்று பொருள்தரும். அப்படியான கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன. /ஆகாய தாமரைக குளத்தில் மிதக்கும் வெண்மலர்/
/ஆகாய தாமரைக் குளத்தில் சிறகுகள் விரிக்கும் வெண்மலர்/
இப்படி வார்த்தைகளைப் புரட்டினாலும் அர்த்தம் உருவாகும் பின்வரும் கவிதையொன்று.

ஆகாய தாமரைக் குளத்தில் மிதக்கும் 
சிறகுகள் விரிக்கும் 
வெண்மலர்.
ஆகாய தாமரைக் குளத்தில் மிதக்கும் 
இதழ் விரிக்கும்
வெண்மலர் பறவை.

கவிதையை நெருங்கிய காட்சி ஊடகமாக்க நிறங்கள் வெவ்வேறு அர்த்தங்களில் கையாளப்படும். கவிஞனின் வாசிப்பு அனுபவ ஆழங்களைப் பொறுத்து அவற்றின் தரம் பரிணாமங்கொள்ளும். யுத்த கவிதைகளை எழுதுவோர் சிவப்பு, கறுப்பு, சாம்பல் நிறங்களைத் தமது கவிதை ஊடகத்துக்குக் காட்சியாக்குவர். உதாரணமாக சேரனின் ஈழத்துக் கவிதைகளை அவதானித்தால் இது தெரியும். சாம்பல் பூத்த தெருக்களில் இருந்து எழுந்து வருக! என்றும், ஜெயபாலன், நிலாந்தன், கருணாகரனின் கவிதைகளில் செந்நிறம் என்பது ஒரு அடையாளமாகவும் தரித்துக் காட்டப்படும். இந்தத் தொகுப்பில் நீலம், வெண்மை என்பன அதீதமாகப் பிரயோகத்துக்கு எடுக்கப்படுகிறது. இரண்டுமே தத்துவத்தின் உருவக நிறங்கள். இந்துஞான மரபில் ஆழமாக வேர்கொண்டவை இந்த இரண்டு நிறங்கள்தாம். அதிகருமையின் நிறம் நீலம். வெண்மை நீலத்தின் எதிர் நிறமன்று. ஆனால் கருமையின் எதிர்நிறம். இதனை முரண் என்று கூறுவதைவிட மெய்யியல்சார் வடிவநோக்கு என்றே கூறவேண்டும். எங்கு காணினும் நீலமடா என்பதே அந்த நோக்காக அமைகிறது.

இந்த ஞாயிறு இளம் காலை
ஏன் நீலம் தரித்து நிற்கிறது.
நீண்ட நெடும் இரவெல்லாம் தோய்ந்த
நெஞ்சின் அடர்நீலம்.
கடலலை மேல் மென்வானில் பாரித்து கிடக்கிறது.
மெல்ல சாலையில் ஊர்ந்து சென்றால் எங்கு காணினும் நீலமடா.

00

சமகாலத்தின் அறம் என்பது என்ன?. அது அன்றைய காலம் போல் இன்றும் பின்பற்றப்படுகிறதா?. திறனறிந்து தீதின்றி வந்த பொருள் என்பது ஒரு அருவமான கருத்துமட்டுமா? அதனை மிக எளிதாக அணுகுவதுதான் ஒரு கவிஞனின் பணியா?. இங்கு எளிதாக என்பது எந்த மெய்யியலும், தூரநோக்குமற்ற பார்வையையாகும். நம் நேர்மை மீது நாம் எப்படிக் கேள்வி கேட்பது. பிறர் நேர்மையின்மையை எப்படிச் சாடுவது. எங்ஙனம் விமர்சனம் செய்வது. நம் பிறப்பின் மீது ஒரு சந்தேகத்தை அல்லது அதன் அர்த்தமின்மையை நிகழ்த்திப்பார்ப்பது கவிதையில் அரிதான வழக்கு. அதனை உண்மையின் பீடத்தில் ஏற்றி ஒரு கவிதையில் இதனை இப்படிச் சொல்கிறார். 

"வலிமையின்
நேர்மையின்
உண்மையின் பீடத்தில் அமர்ந்தபடி
எதையும் சீர்தூக்கிப் பார்த்தல்
எளிதாய் இருக்கிறது.
நேர்மை தவறும்
பலவீனமான
சூது கவ்வும் கணங்களில்
வேண்டாத சிசுவென
கருக்கொண்டு கனக்கும்
குற்ற உணர்வின் சுமை."

நிலப்பிரபுத்துவத்தில் இருந்து முதலாளித்துவம் நோக்கியதான நம் சமூகத்தின் வளர்ச்சியில் பல பண்பாடுகளும், நாட்டார் வழக்காறுகளும் அசைவு கொண்டன. ஒரு சில அழிந்து போயின. மேலும் பல வசைகளாயின. சாதி என்ற இனக்குழும அடிப்படை ஆங்கில ஆராய்ச்சியினால் தனி வசையாக உருக்கொண்டது. இவற்றை உன்னிப்பாக அணுகுவதற்கு சொற்கள் எமக்குப் பிரதானமாக உதவுகின்றன. ஒருகாலத்தில் கௌரவமாக அல்லது பெருமையாக அணுகப்பட்ட வழக்காறுகள் பிற்காலத்தில் வசையாகவும் தீட்டாகவும் ஆகியது. அதில் வேட்டை பிரதானமானது. வேட்டையில் இருப்பது ஒருபுறம் குற்றவுணர்வு. மறுபுறம் வீரமரபு. தற்போதைய சமூகத்தின் வேட்டை பற்றிய புரிதல் மேட்டிமை நோக்கில் அணுகப்படுகிறது.  

".....கோரை பற்கள் உயிரை தீண்டுதல் உச்சம்.
சுடும் குருதியை சுவைக்கையில் குற்ற உணர்வு கொண்டால் நீயெல்லாம் என்ன வேட்டை விலங்கு"

தேவதச்சனின், 
"காற்றில் வாழ்வைப் போல்
வினோத நடனங்கள் புரியும்
இலைகளைப் பார்த்திருக்கிறேன்.
ஒவ்வொரு முறையும்
இலையைப் பிடிக்கும்போது
நடனம் மட்டும் எங்கோ
ஒளிந்து கொள்கிறது" 

என்ற கவிதையை நான் எத்தனை தடவைகள் வாசித்தேன் என்று தெரியாது. ஆனால் இக்கவிதையின் அன்றாடமும் மொழியின் சூட்சுமமும் என்னை வெகுவாக வசீகரித்து நிற்கின்றது. என்னை மட்டுமல்ல, படைப்பாளிகள் பலருக்கு இதன் மொழி ஒரு விஷேச வஸ்த்து. அந்த வஸ்த்துவை  நோக்கி விரல் நீட்டாத படைப்பாளிகளே இல்லை. வியக்காத விமர்சகர்களும் இல்லை. இதே குரலில் ஒலிக்கும் இத்தொகுப்பிலுள்ள (அலகில் அலகு) பின்வரும் கவிதை என்னை வெகுவாகக் கவர்ந்த ஒன்று. 

"இலை உதிரும் கணத்தில்
தொடங்கும் ஒரு நடனம்.
இலை உதிரும் தருணம்
நிகழும் ஓர் நடனம்.
மரணம்"

கணங்கள் பல சேர்ந்தது தருணம். தருணங்களின் முடிவு மரணம். இடையில் தொடங்கி நிகழ ஒரு நடனம். இதுவே இக்கவிதை கூறவிழையும் ஒருபாடு அர்த்தம். எவ்வளவு அழகான கவிதை. தேவதச்சனின் நடனம் ஒளிந்து கொண்டு லௌகீக அழகியலை வெளிப்படுத்துகிறது. இவ்வாசிரியரோ தத்துவத்தின் அழகியலை மரணத்தை எடுத்து வெளிப்படுத்துகிறார். 

00

வெவ்வேறு காட்சிகளில், தளங்களில் நிகழும் சம்பவங்களை ஒருங்கு திரட்டி குவியச் செய்தல் கவிதையின் கூரிய வெளிப்பாடு. இந்தக் கூர்மையை நாம் புதுமைப்பித்தனின் சிறுகதையில் காணமுடியும். அவரது சாதனைக்கு அந்தக் கூர்மையே காரணமாகும். தேவதச்சனின் அநேக கவிதைகளிலும் தேவதேவனின் இயற்கைசார் கவிதைகளிலும் இதனை நாம் கண்டு கொள்ளலாம். மனம், திரவம், நினைவுகள், பசி, பாம்பு என்று வெவ்வேறு காட்சிகளைக் கூராக்கி இணைத்த ஒரு கவிதை இத்தொகுப்பிலுள்ளது. 

"ஒளிந்திருக்கும் நினைவுகளை ரகசியமாய் மீள்வாசிக்கும் மனம்.
மடை உடைந்து உருகியோடும் கருந்திரவம்.
பாலை மணல்வரிகளில் அடுக்கடுக்காய் காற்றின் நினைவுகள்.
சில்லிடும் ஊற்றில் நனையும் உலர்ந்த நாவின் மொட்டுகள்.
இரைவேண்டி கடும் வெயில் வெளியில் தவம் புரியும் ஒரு அரவம்."

இத்தொகுப்பில் நான் அவதானித்தவை பறவைகள், நதிகள், நீலம், வானம், பூக்கள், மரங்கள் என்று பலமாக மொழி இதற்குள் உருவாக்கவும் உருவகிக்கவும் பட்டுள்ளது. அண்மைய தொகுப்புக்களில் மெய்யியலுடன் இணைந்து, உள்ளூர வாசிக்கும் தமிழுக்கும் இன்பம் அளிக்கும் அழகியல் கவிதைகள் இத்தொகுப்பிலுள்ளன என்பதையாகும். நதியின் கரையில் இருக்கும் மலரின் வேருக்கு நதியின் நீர் சென்று சேர்வதால் அந்த மலரின் பிரகாசமும் அந்த மலரை ஏந்தி நிற்கும் தளிரின் உயிர் முகமும் மிக அழகாகக் குறித்துக்காட்டப் படுகின்றது. அந்த மலர்ச்சியை உயிர்ச்சுடர் என்று கூறுகின்றார். இதனை நாம் மலருக்கு மட்டும் எடுத்துக் கொள்ளலாமா. அறிவு, ஆக்கம், உள்ளுணர்வு என்று பலவற்றுக்கு உருவகப்படுத்தலாம். 

"நதிநீரில் முகம் காணும் கரைமலர்கள்.
அருஞ்சுவை பருகும் வேரிதழ்கள். 
மறைந்து மேலேறும் ஆழ்நதியின் நீர்.
செந்தளிர்களில் ஒளிரும் உயிரின் சுடர்"

இத்தொகுப்பிலுள்ள 72 கவிதைகளில் அய்மபதுக்கு மேற்பட்டவை அழகுணர்வு கொண்ட சிறந்த கவிதைகள் என்பேன். இதில் இரண்டு கவிதைகள் என்னளவில் ஆகச் சிறந்தவை என்று வரையறுப்பேன். ஒன்று வெவ்வேறு காட்சிகளும் சம்வங்களும் கூராக்கி குவியவைக்கப் பட்டது. மற்றைய கவிதையில் ஒரே சம்பவம் விவரிக்கும் சுயமற்ற இருப்பு. 

"விற்றுத் தீராத இளநீர்க் குலைகளை
வெறித்தபடி அமர்ந்திருக்கும் இருவிழிகள்.
வாடும் மலர்ச் செடியை ஏந்திச் செல்லும் சிறுகரங்கள். 
சதுப்புநில நீர்மேல்
பறந்து திரியும் ஒரு வெண்பறவை.
மங்கிய வானில் அமிழ்ந்து கொண்டிருக்கும் மாலைச் சூரியன்."

இதனையே தொகுப்பிலுள்ள சிறந்த கவிதை என்பேன். இருவிழிகள், சிறுகரங்கள் என்பன வியாபாரத்தில் நிச்சயமற்ற நிகழ்வுகளைப் பிரஸ்தாபிக்கிறது. விழிகள் ஏழைப் பெண்ணுடையதாகவும், சிறு கரங்கள் ஏழைச் சிறுவனுடையதாகவும் இருத்தல் வேண்டும். சதுப்பு நிலத்தில் பறவைக்கு உணவு கிடைப்பது அரிதிலும் அரிது. அங்கு மீன்களே இராது. இவை மூன்றும் நிச்சயமின்மையின் தருணங்கள். இறுதியாக மாலைச் சூரியனைக் கவிஞர் கொணர்கிறார். சூரியன் எப்போதும் இருப்பது. நாளையும் வரும். அடுத்த நாளும் வரும். ஆனால் முன்சொன்ன மூன்றும் அன்றன்றைக்கான சம்பவங்கள். அவற்றின் தீவிரத்தைக் குறிக்கவே மங்கிய வானில் சூரியன் அமிழ்வதாக எழுதுகிறார். மறைவதாக அல்ல. அமிழ்தல் என்பது மரணத்தின் வார்த்தை. எவ்வளவு அழகான கவிதை. இதை உணரும் தோறும் ஒரு வெறுமை நம்முடன் சூழ்ந்துவிடுகிறது. 

00





 





வாசகனுக்கு வார்த்தைகளில் எழுச்சி கொள்ளச் செய்யும் கவிஞன் அந்த எழுச்சியை பிரம்மாண்டமாக மேற்கொள்ள வேண்டும். அது ஒரு நல்ல கவிஞனுக்கும் நல்ல வாசகனுக்குமான உறவைப் பலம் கொள்ளச் செய்யும். உதாரணமாக இருக்கின்ற ஒற்றைச் சூரியனை பலநூறு சூரியன்கள் ஆக மாற்றுவது. அதுவும் அதற்கு ஒரு தொடுப்பு வைத்து மாற்றுவதுதான் அந்தப் பிரம்மாண்டம்.

"சிறு சிறு குட்டைகளில் 
தேங்கி நிற்கிறது
முன்னொரு காலத்தின் பெருநதி.
அவை ஒவ்வொன்றிலும்
உதித்தெழுகிறது
அதிகாலைச் சூரியன்"

தற்போது ஜென் கவிதைகள் புழக்கத்தில் வந்துள்ளன. அவற்றுள் முக்கால் வாசி மொழிபெயர்ப்பால் ஆனவை. அந்த மொழிபெயர்ப்பில் பல அசட்டுத்தனமானவை. நல்ல மொழிபெயர்ப்பில் நான் வாசித்த ஜென் கவிதைகள் எம்.யுவன் மொழிபெயர்த்திருந்தார். இத்தொகுப்பில் பல கவிதைகள் ஜென் கவிதையின் மூல வடிவம் போலத் தோன்றுகின்றது. 

"ஒரு 
பறவையிடம் மெல்ல பேசினேன் அது பறந்துவிட்டது.

ஒரு 
பூவிடம் மெல்ல பேசினேன்
அதுவும் பறந்து விட்டது."

"மழைநீர் கழுவிய
மண் வாசலில்
கோலம் தேடிவந்த
ஒரு கூட்டு நத்தை
அதில்
தன் கோலத்தை
மெல்ல வரைந்து
மெல்ல செல்கிறது"

"நீரில் விழும் 
ஒரு துளி நீலம்.
உடைந்து சிதறும்
கண்ணாடி குடுவை.
வெளியினில் நீந்தி
விளையாடும் மீன்கள்"

00

தத்துவத்தின் சாரத்தை எழுதுவதில் முக்கியமான பண்பு ரசனை கெட்டுவிடாமல் பார்த்துக் கொள்வது. அதிலும் கவிதைகளில் அதனை எழுதுவது அழகியல் தன்மை பாதிக்காமல் எழுதிவிடுவது. 

"நிலைத்த நீரின்மேல் நின்றது
ஒரு நிறமற்ற பறவை.
அலகில் அலகு பொருத்தி
அலைகளிலாடும் தன்னை
அது
அருந்திவிட்டுச் சென்றது"

கங்கையில் துறவிகள் நீரில் ஜலசமாதி அடைவார்கள் என்றும், அந்த மரணத்தைச் சகதுறவிகள் கண்டு சலனமற்று நிற்பர் என்றும் கற்றிருக்கிறேன். சிவம் என்ற கதையில் ஜெயமோகன் எழுதியதாக ஒரு ஞாபகம். இக்கவிதையில் இருப்பது அப்படி ஒரு உணர்வுதான். அலகில் அலகு பொருத்தல் என்பது என்ன?. அது தன் அறியாமை மீது ஞானத்தை மூட்டுதல், தன் சுயமின்மை மீது சுயத்தைத் தருவித்தல், தன் லௌகீகத்தின் மீது துறவினை வரவைத்தல் என்று பல அர்த்தம் கொள்ளலாம். அந்த நிறமற்ற பறவையின் குறியீடுதான் நாம். ஆனால் நமக்கு நிறமுண்டு. நாம் நிறமுள்ள பறவைகள். நிறமற்ற பறவைகள் ஆன்மீகத்தின் அடையாளமாக உள்ளனர். சத்குரு போலும் நாராயண குரு போலும். அவர்களால்தான் தம்மை அருந்தமுடியும். அலகில் அலகு என்ற அதீத நிலையைத்தான் கவிஞர் இத்தொகுப்பின் தலைப்பாக்கியும் உள்ளார். 

00

அண்மையில் வெளிவந்த மிகச்சிறந்த கவிதைத் தொகுப்பு என்று இதனைக் கூறமுடியும். உங்களில் யாருக்கேனும் சுயம், இருப்பு, மெய்யியல், ஜென், இயற்கை என்று விருப்பும் நம்பிக்கையும் இருந்தால் இத்தொகுப்பினை அதனை அணுகுவதற்கான பின்வாசலாகக் கொள்ளலாம். 

00

சுயாந்தன். 

Comments

Popular Posts