அரவிந்தன் நீலகண்டனின் நம்பக்கூடாத கடவுள்

அரவிந்தன் நீலகண்டன் மிக முக்கியமான தமிழ் ஆய்வாளர், கட்டுரையாளர், இந்துமதச் சிந்தனையாளர். அதைவிட தன்னை இந்துத்துவவாதி என்று வெளிப்படையாகவே அறிவித்தும் கொண்டவர். இந்துத்துவம் என்பதைத் தற்போதைய வன்முறை அரசியலுடன் வைத்து நோக்காமல் இந்துவாக வாழ்வது (Hinduness) என்ற பேருணர்வின் வெளிக்குள் விரித்துக் கொண்டவர். ஓரிடத்தில் ஏதோ குறிப்பை வாசிக்கும் போது  அவரது வீட்டில் ஆறாயிரத்துக்கும் அதிகமான நூல்கள் சூழ்ந்து இருந்தது என்றும் அதில் பல பழந்தமிழ் நூல்கள் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது. வெறிக் கூச்சல்களுக்கு மாத்திரம் இந்துத்துவம் என்பதைப் பிரததிநிதித்துவப்படுத்தாமல் அதனை அறிவார்ந்த விடயங்களுக்குப் பயன்படுத்தும் வெகுசிலரில் அரவிந்தன் நீலகண்டனும் ஒருவர். அரவிந்தன் எழுதிய பல கட்டுரைகள் மிகத் தரமான ஆய்வு நோக்கம் கொண்டவை. துல்லியமான வரலாற்றுத் தொன்மங்களால் புரட்டுகளை இட்டுநிரப்பிச் செல்லக்கூடியவை. அந்த வகையில் "நம்பக்கூடாத கடவுள்" என்ற கட்டுரை நூல் அரசியல், சமூகம், தொன்மம், மானுடம், பிரபஞ்சம், மதம் என்று பல கூட்டுக்களுக்குள் வைத்து இந்துமதத்தை விரித்து ஆராய்ந்துள்ளது. இந்தக் கட்டுரை இந்நூலுக்கான மிகச் சுருக்கமான ஒரு விளக்கம் எனக் கொள்க.

22 கட்டுரைகளைக் கொண்ட இந்நூலில் அயோத்தியில் பாபர் மசூதி விடயத்தில் இடதுசாரிகளின் முகங்களைத் தெளிவாக விளக்கியுள்ளார். அவை எந்த அளவுக்கு இஸ்லாமிய வெகுமக்களை அரசியலுக்காகச் சீண்டின என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.  அதற்கு இந்து வெகுமக்களிடம் இருந்த நவீன நுட்பம் பற்றிய அறிவீனம் எவ்வளவுக்கு இடதுசாரிகளைப் பலப்படுத்தியுள்ளது என்பதையும் அவர் கூறாமல் விடவில்லை.
"உண்மையான கரசேவை" என்ற கட்டுரையில் தம்மைப் பின்வருமாறு சுயவிமர்சனம் செய்யவும் தலைப்படுகிறார் அரவிந்தன்.

"ஹிந்து தரப்பினருக்குப் பொதுவாக நவீனத்துவ பரிபாஷைகள் நிரம்பிய அறிவியக்கத் தந்திரங்களில் பரிச்சயமில்லை. இடதுசாரிகள் அடித்து ஆடினார்கள். ராமர் பிறந்ததே ஆப்கனிஸ்தானில் என்றார்கள். பத்திரிகைகளில் அறிக்கை கொடுத்தார்கள். இரு தரப்பினரிடமும் அரசு ஆதாரங்கள் கேட்டபோது பாபர் மசூதிக் குழுவினருக்கு ஆதரவாக ஆதாரங்களை அளிக்கிறோம்; ஆனால் நாங்கள் பாரபட்சமற்ற அறிவியல் நோக்கு கொண்ட வரலாற்றாசிரியர்களின் தனிக்குழு என அங்கீகரிக்கப்பட வேண்டுமென்று கேட்டார்கள். ஏற்கெனவே பாப்ரி ‘மசூதி’ ஆலோசனைக் குழுக்களிலும் இருந்த இந்த பெருமக்களின் கோரிக்கையை அரசு மறுத்துவிட்டது. பேச்சு வார்த்தைகள் நடந்தபோது ஒரு விசித்திரம் நிகழ்ந்தது. ஆதாரமே இல்லை என்று சொன்ன ராமர் கோயிலுக்கு ஆதாரங்கள் அளிக்கப்பட்டபோது அதனைப் படிக்கத் தங்களுக்குக் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டார்கள் இந்த இடதுசாரிகள்"

அடுத்ததாக சீனாவின் அய்ந்தாயிரம் ஆண்டு பண்பாட்டுப் பாரம்பரியங்களை சமத்துவம் என்ற பெயரில் அழித்த மாவோ சேதுங்கின் கம்யூனிசம் பற்றிய கருத்துக்கள் முக்கியமானவை. நமது தமிழ்ச்சூழலிலுள்ள கருத்துச் சோம்பேறிகளும் மூளை சூம்பிப்போன கோட்பாட்டுக் கோமாளிகளும் தமது முதல் அரசியல் அறிக்கையாகத் தம்மைச் சீன- சோவியத் கம்யூனிச சார்பார்களாக அறிவித்துக் கொள்வது. அதே நேரம் அங்கு நடைபெறும் சர்வாதிகார வக்கிரங்களைப் பூசிமெழுகுவது. இது தமிழ்ச்சூழலுக்கு மட்டும் உவப்பான ஒன்று. அதன் இரு பக்கங்களைப் பேசாமல் சப்பைக் கட்டுக் கட்டுவது. உதாரணமாக பெரியார் என்கிற ஈ.வே.ராமசாமி தன் மகள் வயதுப் பெண்ணைத் திருமணம் செய்தார். ஆனால் இன்றைய பெரியாரிஸ்டுகள் அதனைப் பெருமையாக மார்தட்டிக் கூறுகிறார்கள் அல்லவா?. அதே கதிதான் உலகம் முழுமைக்கும் பரந்த கம்யூனிசத்தின் கதியும். சர்வாதிகாரி ஸ்டாலினைப் பெரும் போராளி என்பார்கள். இந்த வேடிக்கையான விபரீதங்களை சம்பந்தப்பட்ட பண்பாட்டு அழிவுகளுடன் ஒப்பிட்டு விபரித்துள்ளார் அரவிந்தன். அத்துடன் புதிய கோட்பாடுகள் அழிக்கும் பண்பாடுகளின் கிளையான அய்தீகங்கள் இரண்டு நூற்றாண்டுகளாக வளர்ந்து பரவும் நம்பிக்கை என்ற ஆய்வுண்மையையும் கூறுகிறார்.

அதேபோல இந்து மதத்தின் தொன்மங்கள் மற்றும் அரச வரலாறுகள் பற்றிய ஆய்வு கட்டுரைகளும் ஆதாரத் தரவுகளுடன் அமைந்துள்ளது. குறிப்பாக கஜினி முஹமது என்ற இஸ்லாமிய மதவெறி அரசன் ஒருவனின் படையெடுப்பால் சோம்நாத் இந்துக் கோயிலின் சூறையாடலைப் பற்றிக் கூறும் பொழுது, அதனை ஏற்க மறுக்கும் மனநிலை ஒன்று மதச் சிறுபான்மை என்று முற்போக்குப் பேசி மழுங்கடிக்கப்படுவதாக அரவிந்தன் கூறுகிறார். அதனை Negationism என்று ஆங்கிலத்தில் கூறுவர். அதாவது வரலாற்றின் யதார்த்தத்தைக் காணமறுக்கும் மனநிலை. அப்படியான புதைகுழிக்குள் தலையை மூடிக்கொண்டு அதனை அறிவுஜீவித்தனம் என்று கூறும் ஒருவித மனோநிலை இது. சோழப் படைகள் அந்நிய தேசத்தின் மீது படையெடுக்கும் போது மதச் சூறையாடல்களைச் செய்து அங்கு அதற்கான கல்வெட்டுக்களை எழுப்பவில்லை. ஆனால் இஸ்லாமிய மதவெறி அரசர்கள் அதனை மேற்கொண்டனர். மிக மிக எளிய உதாரணம் சோம்நாத் இந்துக் கோயில் அழிப்பும் அதன் மீது கட்டப்பட்டுள்ள மஸ்ஜித்  மற்றும் அயோத்தியில் ராமர் பூமியை இடித்துக் கட்டப்பட்டுள்ள பாபர் மசூதி. இவற்றை ஏற்கமறுக்கும் மனோநிலைதான்  Negationism. இது தமிழ்ச்சூழலில் அண்மைக் காலமாக அதீதமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அதனை மறுதலிக்க அரவிந்தன் நீலகண்டன் போன்ற இந்துத்துவ எழுத்தாளர்கள் மேற்கொள்ளும் ஆய்வுப்பணிகள் பாராட்டுதலுக்குரியது.

Note: அரவிந்தன் நீலகண்டன் எழுதிய பல நூல்களின் சாரங்கள் தமிழ் நூலகங்களிலும் மதம் சார்ந்த விவாதங்களிலும் தற்போது அதிகம் பகிரப்படுகின்றன.

Comments

Popular Posts